உறங்காப்புலி நவீன்!



சமீபத்தில் வெளியான ‘உறங்காப் புலி’ படம், பி & சி ஏரியாவில் ஸ்லீப்பர் ஹிட்டாக உருவெடுத்திருக்கிறது. இதில் லீட் கேரக்டர் பண்ணியவர் நவீன். சினிமாவுக்கு வந்திருக்கும் என்ஜினியரிங் பட்டதாரி. அவரிடம் பேசினோம்.“உங்க பின்னணி?”

“சொந்த ஊர் பொள்ளாச்சி. அடிக்கடி இங்கே சினிமா ஷூட்டிங் நடக்கும். என்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிறப்போதான் சினிமா மீது கவனம் திரும்பியது. எனக்கு சினிமா பின்னணி எதுவும் கிடையாது.எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

அதனால் எனக்கு முற்றிலும் புதிய துறையான சினிமாவில்  நடிக்கலாம் என்று முடிவு செய்த போது சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பிரபல தனியார் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு டெக்னிக்கலாக பல விஷயங்களை கற்றுக் கொண்டு அங்கேயே சில காலம் வேலை பார்த்தேன். பிறகு கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன்.”

“முதல் வாய்ப்பு?”

“கூத்துப்பட்டறையிலே பயிற்சி எடுத்துக்கிட்டிருந்தப்ப  ‘மெரினா புரட்சி’ இயக்குநர் எம்.எஸ்.ராஜ் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கிய ‘உறங்காப் புலி’ யில் லீட் ரோல் கிடைத்தது. சமூக பார்வை உள்ள படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. சின்ன படம் என்பதால் லிமிட்டெட் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய முடிந்தது. கதைதான் நாயகன் என்பதால் படத்தில் டூயட், ரொமான்ஸுக்கு வாய்ப்பு இல்லை.

இயக்குநருக்கும் எனக்குமிடையே வேவ்லெங்ந்த் கரெக்ட்டா இருந்ததால் எளிதாக வேலை பார்க்க முடிந்தது. இந்தப் படத்துக்கு முன்பே கமிட்டான படம்தான் ‘மெரினா புரட்சி’. நார்வே உட்பட பல உலகத் திரைப் பட விழாக்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது.”

“ஏற்கனவே ‘மெரினா புரட்சி’ பண்ணியிருந்தீங்க..”“ஆமாம். ‘மெரினா புரட்சி’யில் நடித்தது நல்ல அனுபவம். ஜல்லிக்கட்டு பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துக்கொண்டேன். மாடு தழுவுதல் தாண்டி நிறைய கற்றுக் கொண்டேன். இந்தியாவுக்கு ஜல்லிக்கட்டு  எப்படி அறிமுகமானது என்பது உட்பட ஏராளமான தகவல்கள் கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருந்தது.”

“என்னமாதிரி கேரக்டர்களில் நடிக்க விருப்பம்?”

“பொதுவா சினிமாவில் நடிக்கிறவர்களுக்கு ஹீரோ கனவு இருக்கும். எனக்கு அப்படியில்லை. ஹீரோ என்றில்லாமல் சவால் நிறைந்த வேடங்களில் நடிக்க வேண்டும். மொத்தத்தில் என்னை நல்ல நடிகன் என்று நிரூபிக்க வேண்டும். சின்ன வேடமாக இருந்தாலும் என்னுடைய வேலை தெளிவாக இருக்க வேண்டும். அந்த வகையில் எந்த வேடம் கொடுத்தாலும் பண்ணுவேன்.”

“டைரக்‌ஷன் ஆசையும் இருக்காமே??”

“யெஸ். டெக்னிக்கலா சினிமா தெரியும் என்பதால் டைரக்‌ஷன் ஆசையும் இருக்கு. நடிப்பு மூலம் படப்பிடிப்பு அனுபவமும் கிடைத்துள்ளது. சமயம் வாய்க்கும்போது டைரக்‌ஷன் பண்ணுவேன். ‘உறங்காப் புலி’ படம் பார்த்துவிட்டு பாண்டியராஜன் சார் பாராட்டினார். ‘முதல் படம் மாதிரி தெரியவில்லை’ என்றார். சீனியர் நடிகர் சொன்ன அந்த பாராட்டை தக்கவைத்துக்கொள்வதற்கு தொடர்ந்து தரமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காண்பிப்பேன்.’’

- ரா