ஈரநிலமாய் மின்னியவர்!மின்னுவதெல்லாம்  பொன்தான்-23

ஒல்லியான தேகம், அச்சு அசல் தமிழ் முகம், சத்தமில்லாமல் பேசும் குணம். இவைதான் நந்திதாவின் அடையாளங்கள். பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகள். அப்பா நடன இயக்குனர் என்பதால் இவரும் முறைப்படி நடனங்களைக் கற்றார். ஆரம்பத்தில் அப்பாவுக்கு துணையாக பணியாற்றியவர் பிறகு சினிமாவில் நடனமும் ஆடத் தொடங்கினார். ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’,  ‘முத்தம்’  உட்பட சில படங்களில் நடனம் ஆடினார்.

ஒரு நடனக் காட்சியில் இவரைப் பார்த்த பாரதிராஜா,  நடனத்தைத்  தாண்டி அவருக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதைக் கண்டுபிடித்தார்.  அப்போது அவர் தன் மகன் மஜோஜ் பாரதியை ஹீரோவாக  ஜெயிக்க வைக்க போராடிக் கொண்டிருந்த  நேரம். அடுத்து மனோஜ் ஹீரோவாக நடிக்க, தான் தயாரித்து இயக்கிய  ‘ஈரநிலம்’ படத்தில் ஜெனிபர் என்ற இயற்பெயரை நந்திதா என்று மாற்றி ஹீரோயினாக்கினார்.

 டான்சர் என்ற நிலை மாறி  ஒரே படத்தில், அதுவும் பாரதிராஜா இயக்கத்தில் ஹீரோயின் ஆனார் நந்திதா. இனி ஹீரோயினாக  ஒரு ரவுண்டு வரலாம் என்றுதான் நந்திதா கனவு கண்டிருப்பார். ஆனால்  ‘ஈரநிலம்’ படத்தின் வணிகத் தோல்வி அவரது கனவைக் கலைத்தது. இத்தனைக்கும் அப்படத்தில் நந்திதாவின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. என்றாலும்  அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

தொடர்ந்து போராடினார். கஸ்தூரி ராஜா தனது ‘காதல் ஜாதி’ படத்தில் நடிக்க வைத்தார்.  ஈர நிலத்தில் விட்டதை ‘காதல் ஜாதி’யில் பிடித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அந்தப் படம் முழுமையாக முடிந்தும் சில பிரச்சினைகள் காரணமாக வெளிவரவே இல்லை.

‘வசந்தம் வந்தாச்சு’ என்ற படத்தில் வெங்கட்பிரபு ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் கடைசியாக ஹீரோயினாக நடித்த படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை,  போனதும் தெரியவில்லை.அதன்பிறகு ஹீரோயின் என்பதைத் தவிர மற்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வாய்ப்புகளும் குறைந்து விடவே மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.  

அதாவது கிளம்பிய  இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் கேமராமேன் காசி விசுவநாதனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.  சினிமாவை விட்டும் விலகி இருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார், ‘ராவண தேசம்’ என்ற படத்தில்  இலங்கை அகதிப் பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்தார். ஆனால்  அந்தப் படம்  வெகுஜனங்களைச் சென்று  சேரவே இல்லை.

பெரிய திரை முற்றிலுமாகக் கை விட்டாலும் மனம் தளராமல் அடுத்த கட்டத்துக்கு சென்றார். சின்னத்திரையில் கால் பதித்தார்.  சன் டி.வியில் ஒளிபரப்பான ‘புவனேஸ்வரி’,  ‘நாகவல்லி’ மூலம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றார். இப்போது சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் நடித்து வருகிறார்.

நந்திதா அழகும், திறமையும் உள்ள நடிகை; ஓரளவுக்கு சினிமா பின்புலமும் உள்ளவர். ஆனாலும் அவரால் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு ஜெயிக்க முடியவில்லை. சினிமா  போடும் கணக்கை யாராலும் கணிக்கவே முடியாது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்