நீதிபதியாகவே நடிக்கிறார் நீதிபதி!



நீதிபதி மூ.புகழேந்தி இயக்கும் படம் ‘வேதமானவன்’. இதில் நாயகனாக மனோ ஜெயந்த் நடிக்கிறார். நாயகியாக  மத்தியப் பிரதேச மாடல் ஊர்வசி ஜோஷி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் டெல்லி கணேஷ், போண்டா மணி, பெஞ்சமின் நடிக்கிறார்கள். இசை செளந்தர்யன். ஒளிப்பதிவு கண்ணன்.

‘‘இந்தப் படத்தை நிஜத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளேன். என்னுடைய சர்வீஸில் பல்வேறு வழக்குகளுக்கு சட்டப்படி தீர்ப்பு வழங்கியுள்ளேன். ஒரு தூக்கு தண்டனை கைதி விடுதலை பெற்று வெளியே வரும் போது அவனை சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதா என்பதுதான் படத்தின் மையக் கரு.

படத்தில் நடித்தவர்கள் புதுமுகமாக இருந்தாலும் இன்வால்வ்மென்டுடன் நடித்ததால் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. நாயகி ஊர்வசி இதில் பாவாடை தாவணி கட்டிய கிராமத்து தேவதையாக வருகிறார். தமிழ், நம்முடைய கலாச்சாரம் தெரியாததால் படப்பிடிப்புக்கு முன்பே சென்னைக்கு ஷிப்ட்டாகி இங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொண்டார்.

பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. பாடல்களை நானே எழுதியுள்ளேன். நிஜத்தில் நான் வழங்கிய தீர்ப்புக் காட்சி போல் இந்தப் படத்தில் ஒருகாட்சி இடம்பெறுகிறது. நீதிபதி வேடத்தில் நானே நடித்துள்ளேன். இயல்பாகவே எனக்கு கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் அதிகம். நீதிபதி சா.மோகன் சார்தான் நான் இந்தத் துறைக்கு வருவதற்கு மோடிவேட் பண்ணினார்.

அப்படி இதுவரை 22 தொகுப்பு கொண்டு வந்துள்ளேன். சினிமா மீதான காதலால் இந்தப் படத்தை ஓய்வுக்குப் பிறகு இயக்கியுள்ளேன். சினிமாவுக்கு நான் முற்றிலும் புதியவன். சினிமாவில் பலருக்கு கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வராமல் தயாரிப்பு மேற்பார்வையாளர் கஞ்சனூர் வெங்கட் உதவியாக இருந்தார். இசையமைப்பாளர் செளந்தர்யன், நடன இயக்குநர் ராதிகா என்று அனைவரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நீதிபதியாக சமூகத்துக்கு என்னளவில் பல நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். நல்ல கருத்தைச் சொல்ல முடியும் என்பதால் இந்தப் படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். தலைப்புக்கு ஏற்ப இந்தப் படம் சமூகத்துக்கான  வேதமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் மூ.புகழேந்தி.

- ரா