ரஜினியை ஆ டவைத்த பாபா இவர்தான்!



ரஜினி நடந்தாலே விசில் பறக்கும். நடனமாடினால்?

‘பேட்ட’ படத்துக்காக ரஜினியை ஆட வைத்திருப்பவர் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர்.“சினிமாவுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் ஒரு படத்திலாவது ரஜினி சாரோடு பணியாற்றணும் என்று விரும்புவாங்க. எனக்கு இரண்டு முறை அந்த வாய்ப்பு வந்திருக்கு. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து, ‘பேட்ட’யிலும் பணியாற்றி இருக்கேன். அதிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கும் ‘உல்லாலா’ பாட்டுக்கு நடனம் அமைச்ச வாய்ப்புங்கிறது ரொம்ப சந்தோஷம் கொடுத்திருக்கு. பின்னி மில்லில்தான் அந்தப் பாட்டை எடுத்தோம்.

‘படையப்பா’ படத்தில் வரும் ‘கிக்கு ஏறுதே’ மாதிரி ரகளையான பாட்டு இது. நைட் எஃபெக்ட்டில் இரண்டரை நாட்களில் எடுத்தோம். சுமார் 500 ஜூனியர் ஆர்டிஸ்ட், ஐம்பது டான்ஸர்ஸ் என்று பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். இடையிலே மழை வேறு குறுக்கிட்டிச்சி. அப்படியிருந்தும் ரஜினி சார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கேமராமேன் திரு, ஆர்ட் டைரக்டர்சுரேஷ் செல்வராஜன் ஆகியோரின் மிகச் சிறந்த பங்களிப்பாலும் மின்னல் வேக உழைப்பாலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் எடுக்க முடிஞ்சது.

அந்தப் பாடல் மிகச் சிறப்பாக வருவதற்கு காரணம் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். அவங்கதான் நான் கேட்ட வசதியை உடனுக்குடன் செய்து கொடுத்தார்கள். பேமண்ட் விஷயத்தில் கன் பேமண்ட். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் மட்டுமில்லாமல் ஊக்கமும் கொடுத்தார்கள் என்பதுதான் ஹைலைட்”“ரஜினியுடனான அனுபவம்?”

“ஏற்கனவே ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களின்போது ராஜு சுந்தரம் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக வேலை பார்த்துள்ளேன் என்பதால் ரஜினி சாருக்கு என்னை ஏற்கனவே நன்கு தெரியும். ‘பேட்ட’ படத்தில் ‘உல்லாலா’ பாடல் ரஜினி சாருக்கு ரொம்ப திருப்தியைக் கொடுத்திருக்கிறது.

ஷூட்டிங் முடிஞ் சதுமே என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். ரஜினி சாரைப் பொறுத்தவரை தனக்கு தெரியும், தெரியாது என்ற கேள்விக்கு இடம் கொடுக்கமாட்டார். நாம் என்ன சொன்னாலும் பிறந்த குழந்தை மாதிரி அப்படியான்னு கேட்டுப்பார். ஆனா, அவருக்கு சினிமாவைப் பற்றி தெரியாத விஷயம் இல்லை.

செட்டில் சூப்பர் ஸ்டார் மாதிரி இல்லாமல் ரொம்ப கேஷுவலா பழகுவார். வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்கும் வணக்கம் வைப்பார். ஒரு ஸ்டெப் போட்டதுமே, என்னுடைய ரியாஷக்‌ஷனை பார்ப்பார்.

ஒன்ஸ் மோர் போயிடலாமா என்று அவரேதான் கேட்பார். அந்த ஷாட்லர்ந்து கொஞ்சம் கட் பண்ணி சேர்த்துக்கலாம், இந்த ஷாட்ல இருந்து கொஞ்சம் கட் பண்ணி எடுத்துக்கலாம் மாதிரி பேச்சுக்கே அவரிடம் இடமிருக்காது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு இருப்பதால் தான் அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். மரியாதை கொடுக்கும் விஷயத்தில் அவரை பீட் பண்ணமுடியாது”“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்?”

“ஏற்கனவே அவருடன் ‘ஜிகர்தண்டா’ படத்தில் வேலை பார்த்திருக்கேன். அந்தப் படத்தில் மூணு பாடல்களுக்கு நடனம் அமைத்தேன். என் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தப் படத்தை கொடுத்தார். ஆனால், எனக்கு இந்தப் பாடல் கிடைத்து விடாதபடி சிலர் உள்ளடி வேலை பார்த்தார்கள்.

அதையும் மீறி கார்த்திக் சார் என் உழைப்பை எடுத்துச் சொல்லி இந்த பாடல் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். டான்ஸ் நல்லா இருக்கா, இல்லையா என்பதையெல்லாம் அவர் வார்த்தையால சொல்லமாட்டார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ஃபேஸ் எக்ஸ்பிரஷனாலேயே பாடலுக்கான மதிப்பெண்களை கொடுத்துவிடுவார்.”

“இதுவரை எவ்வளவு படம் பண்ணியிருக்கீங்க?”

“கணக்கு வெச்சுக்கிட்டதில்லை சார். இங்கு என்னைவிட சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. அவர்களோடு போட்டி போடுகிறேன் என்கிற நினைப்பே எனக்கு ‘தி பெஸ்ட்’ கொடுத்தாகணும் என்கிற நெருக்கடியை ஏற்படுத்துது. என்னைப் போன்ற கலைஞர்களுக்கு பணம், புகழைத் தாண்டி அங்கீகாரம்தான் முக்கியம்.”

“டான்ஸ் எங்க கத்துக்கிட்டீங்க?”

“சிவசங்கர் மாஸ்டரிடம்தான் என் கேரியரை ஆரம்பித்தேன். பெண்ணுக்குரிய நளினத்துடன் எப்படி ஆடுவது என்பதை அவர்தான் சொல்லிக் கொடுத்தார். அதனாலே ஒத்திகைக்கு எனக்கு உதவி பெண் டான்ஸர் கூட தேவைப்படுவது இல்லை. ராஜு சுந்தரம், கல்யாண், தினேஷ் என்று ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்”  

“உங்களைப் பற்றி சொல்லவில்லேயே?”

“பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை வண்ணாரப்பேட்டை. என்னோட வெற்றியின் எல்லாப் பெருமையும் என் குடும்பத்தையே சேரும். என்னை தாலாட்டி சீராட்டி வளர்த்தது முழுக்க என்னுடைய தந்தை.

சின்ன வயசா இருக்கும்போதே, ‘மனுஷனா பொறந்தவன் எந்தத் துறையிலாவது சாதிக்கணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். அதனாலேதான் நான் நடனத்தில் கவனம் செலுத்தினேன். தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல், பாலிவுட் வரை போயிட்டேன். பாபா பாஸ்கர்னு சொன்னா ரசிகர்களுக்கு தெரியற வகையிலே இப்போ பேரும் வாங்கிட்டேன்.”

- சுரேஷ்ராஜா