சென்னையில் நடந்த திரைப்படத் திருவிழா!கோவா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாக்களின் சிறப்பம்சங்களை கடந்த இதழ்களில் வண்ணத்திரை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்ட இயக்குநர், வசனகர்த்தா மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க இணைச் செயலாளர் வி.பிரபாகர் இந்த வாரம் சென்னை உலகத் திரைப்பட விழாவின் சிறப்புகளைத் தொகுத்து வழங்குகிறார்.

16 வது சென்னை உலகத் திரைப்படவிழா ICAF என்ற அமைப்பும், தமிழக அரசின் நிதியும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு உலகத்திரைப்பட விழாவை நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும், அடித்தளம் அமைக்கிறது.சோவியத் கலாச்சாரமையம், தேவி காம்ப்ளக்ஸ், அண்ணா, காசினோ, NFDC திரையரங்கம் என்று மாநகரின் மையத்தில் உள்ள திரையரங்குகளில் உலகத் திரைப்படங்கள் இந்தியன் பனோரமா திரைப்படங்கள், சிறந்த தமிழ்த்திரைப்படங்களும் திரையிடப்பட்டன.

கோவா, திருவனந்தபுரம், கொல்கத்தா போன்ற இடங்களில் நடக்கும் உலகத்திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்ட மிகச்சிறந்த திரைப்படங்களை ICAF அமைப்பின் குழுவில் செயல்படும் ஆர்வலர்களும், திரைப்பட வல்லுனர்களும், முன்னாள் உலகத்திரைப்பட விழாவின் இயக்குநர் சந்தானம், ICAF பொதுச் செயலாளர் தங்கராஜ் , ICAF தலைவர் எஸ்.கண்ணன், துணைத்தலைவர் எஸ். ராமகிருஷ்ணன், எஸ்.முரளி ஆகியோருடன் திரைப்படத்துறையில் பணிபுரியும் நடிகர் பட்ஜெட் லோகநாதன், கே.பி.குமார். ICAF நிர்வாகிகளான பலரும் இணைந்து கடின முயற்சியும், உழைப்பும் விதைத்து இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

2018 டிசம்பர் 13 முதல் 20 வரை நடைபெற்ற விழாவில் திரையிடப்பட்ட  திரைப் படங்களில் சிறந்த திரைப்படங்கள் என அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்களைத் தேர்வு செய்து திரையுலகப் பிரமுகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என 20 வயது முதல் 80 வயதும் தாண்டியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்கங்களில் குவிந்த காட்சி காண்பதற்கு  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தமிழ் திரைப்படங்கள் ‘இரும்புத்திரை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்க் குரி’, ‘வேலைக்காரன்’, ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ உள்ளிட்ட 13 படங்கள் திரையிடப்பட்டன.வேறு சில முக்கியமான படங்களைப் பார்ப்போம்.இந்தியன் பனோரமா வரிசையில் திரையிடப்பட்ட படம் ‘WALKING with the WIND’- லடாக்கி மொழி படம். இதன் இயக்குனர் பிரவீன் மொர்ச்சாலி (PRVEEN MORCHHALE). கோவா உட்பட 4 திரைப்பட விழாக்களில் விருது பெற்றபடம்.

10வயது சிறுவன் செரிங்தான்(Tsering) (கதாநாயகன்). எதிர்பாராமல் ஒரு நாள் அவனுடைய பள்ளித்தோழனின் நாற்காலியை தவறுதலாக உடைத்து விடுகிறான். வீட்டிலிருந்து தினமும் 7கி.மீ தூரம் அவனுடைய கழுதையுடன் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருகிறான். உடைந்த நாற்காலியை கழுதையின் முதுகில் கட்டிச்சுமக்க வைத்து எடுத்து வருவதும், அவன் அம்மாவிற்கு வீட்டுவேலைகளில் உதவி செய்வதுடன் நாற்காலியை சரிசெய்வதற்கு முயற்சி செய்கிறான். அந்த ஊர் தச்சர் மறுத்து விட, மற்றொரு கலைஞரை நாடுகிறான். அவருடைய மாடு காணாமல் போய் விட்டதாகக் கூறுகிறார்.

 இறுதியில் அவருடைய மாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்து தனது நண்பனின் சேரை சீர் செய்துவிட்டான் என திரைப்படம் முடிகிறது. நாட்டு நடப்பையும், நிகழ்கால இந்தியாவின் ஒரு பகுதியையும் கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இந்தப் படம். சிறுவன் AJAY CHOUREY நடிப்பு படத்தின் ஹைலைட்.

தொழுநோயாளியாக இருந்து குணமானபின்பு அந்த வடுக்களுடனும் மற்றவர்கள் ஒதுங்கிச் செல்லும் தோற்றத்துடன் வாழும் நபர்தான் ‘YOMEDDINE’ (EGYPT) படத்தின் நாயகன். அவருடன் மகன்போல் வாழும் சிறுவன். மனைவியை இழந்தவர். தனது வளர்ப்பு சிறுவனுடன் சொந்த ஊரில் உள்ள தந்தையைப் பார்க்க வருகிறார். வழியில் திருடர்கள். அவருடைய பணத்தையும், உடமைகளையும் திருடிச்செல்ல சிறுவனுக்கும் தலையில் அடிபட்டு விடுகிறது.

மருத்துவமனையில் அவனைச் சேர்த்துவிட்டு ஓடிவருகிறார். போலீஸ் அவரைக் கைது செய்கிறது. அங்கு லாக் அப்பில் உள்ள நபருடன், கைவிலங்குடன் தப்பிக்கிறார். கடின முயற்சிக்குப்பின். தந்தையைச் சந்தித்து அவருடைய முத்தத்தை பரிசாகப் பெறுகிறார். மிகச் சிறந்த படம்.  தொழுநோயாளி ஒருவரை மையமாக வைத்து படத்தை உருவாக்கிய இயக்குனர் A.B.SHAWKY மிகச்சிறந்த இயக்குனர் !

7 விருதுகளைப் பெற்றதுடன் 7 திரைப்பட விழாக்களில் Nomination தகுதிபெற்ற மிகச் சிறந்த திரைப்படம் ‘WOMAN AT WAR’ (ICELAND). ஒரு விரல் புரட்சிபோல் Halla என்ற சமூக ஆர்வலர் அவளுடைய  தாய் மண்ணுக்கு கேடு விளைவிக்கும் அலுமினிய தொழிற்சாலையை அகற்ற நடத்தும் ‘தனிமனிதப் போர்தான்’ முழுப்படமும். மிகப்பெரிய மின்சார கோபுரத்தை தகர்த்து எறிந்துவிட்டு தப்பிக்கும் ஆரம்பக்காட்சி முதல், சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கும் இறுதிக்காட்சி வரை Hallaவாக நடித்த கதாநாயகி Halldora Geirharosdottir.

நடிப்புக்கு எழுந்து நின்று கைதட்டத் தோன்றுகிறது. அவள் தப்பிக்க உதவும் நபர் உறவுமுறையில் கசின் என்று அறிவதும், அவரின் காரைப் பயன்
படுத்தி தப்பிப்பதும் சுவையான காட்சிகள். இயக்குநர் BENEDIKT ERLINGSSON இயக்கத்தில் பல விறுவிறுப்பான காட்சிகள் இருந்தாலும் கிளைமாக்ஸில் சில நிமிட Powercutஐ பயன்படுத்தி கதாநாயகி ஆள்மாறாட்டம் செய்து தப்பிப்பது எக்ஸலண்ட் ! புரட்சிகரமான பெண்ணின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட உலகத்தரமான படம் ! போ ராட்ட குணம் கொண்ட ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

மூன்று உலகதிரைப்பட விழா விருதினையும், 10 Nomination களையும் பெற்ற படம் ‘PITY’ (போலந்து). ஆரம்பக்காட்சியாக நடுத்தரவயது கடந்த தம்பதியினரின் உடலுறவுக்காட்சியில் துவங்கும் படம். அதில் தோல்விடையும் கணவனையும், அதனால் மனம் துவளும் மனைவியையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.

காஸ்ட்யூமர் என்ற ஒரு கலைஞருக்கு வேலை கொடுக்காமல் இறைவன் கொடுத்த ஆடையிலேயே அதிகபட்ச காட்சிகள் நகர்கிறது. பழைய ‘பாவம் கொடூரன்’ என்ற மலையாளப்படம் போல், பாவப்பட்ட கணவன். இறுதி ‘உடலு றவு’க் காட்சியில் மனைவியின் நம்பிக்கைக்கு கைகொடுத்து வெற்றி பெறுகிறார் ! காமத்தையும், உணர்வையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்.  ஓக்கே என்று சொல்லலாம்.

உருகுவே, அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளின் தயாரிப்பு ‘A TWELVE  YEAR NIGHT’. சர்வாதிகார ஆட்சியால் கைது செய்யப்படும் மூன்று போராளிகள் தனிமைச்சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த மூவரும் தனித்தனியாக, இருண்ட அறைகளில் அடுத்த 12 வருடங்களைக் கழிக்கப்போகின்றனர். சிறையின் வெண்ட்டிலேட்டரில் வரும் சிறிய வெளிச்சத்தையும் மூடி அடைத்துவிடுகின்றனர்.

அவர்களைச் சித்ரவதை செய்து, மன உளைச் சலுக்கு ஆளாக்கி அவர்களின் மூளையை மழுங்கச்செய்வதுதான் சிறை அதிகாரிகளின் திட்டம். ஆனால் போராளிகள் மூவரும் துவண்டு விடாமல் புதிய யுக்திகளுடன் தங்கள் மூளை சக்தியை இயங்கச்செய்கின்றனர். அதில் ஒன்று அடுத்த அடுத்த அறையில் அடைக்கப்பட்ட இருவர் தந்தி அடிப்பது போல் தங்கள் விரல் முட்டியால் டிக் டிக் டிக் என தட்டியே எழுத்துக்களை உணர வைத்து இருவரின் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வது.

மூன்று போராளிகளின் ஒவ்வொரு காட்சியும் தமிழக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட போராளிகளை நினைக்க வைக்கிறது. கவிஞரான ஒரு போராளி ராணுவ அதிகாரிக்கு காதல் கடிதம் எழுத உதவி செய்வதும், அதனால் ராணுவ அதிகாரி அவரை மதிப்பதும் சுவையான காட்சி. கற்பனை செய்து பார்க்க முடியாத சித்ரவதைகளை அனுபவிக்கும் மூவரும் ஆட்சி மாற்றத்திற்குப்பின் வெளியே வந்து மரியாதைக்குரிய பொறுப்புகளில் அமர்ந்தார்கள் என்ற அறிவிப்புடன் படம் முடிகிறது.

4 உலகத்திரைப்பட விருதுகளை வென்று 6 Nominations பெற்ற படம். இயக்குநர் ALVARO BRECHNER.ஒரே நேரத்தில் அசாத்தியமான சூழ் நிலைகளைச் சந்தித்து அதிலிருந்து மீளும் ஆறு விதமான சூழலில் உள்ள கதாபாத்திரங்களின் அதிர்ச்சி நிறைந்த  சம்பவங்களை உள்ளடக்கிய ஆறு கதைகளை திரைக்கதைக்குள் ஒருங்கிணைத்து தொகுத்து சொல்லப்பட்ட படம் ‘PANIC ATTACK’ (போலந்து).

விமானத்தில் பயணம் செய்யும் தம்பதியர் அருகில் அமரும் நபர் தொடர்ந்து வள…வள...வென பேசி... அறுத்துக் கொண்டே வருகிறார். திடீரென விமானத்தில் ஏற்படும் கோளாறு காரணமாக அதிர்வு ஏற்பட, அந்த நபர் இறந்துவிடுகிறார். விமானம் தரை யிறங்கும் வரை அவர் இறந்துவிட்டார் என்பது தெரியாமல் தம்பதி அதிக டென்ஷனுடன் பயணம் செய்கின்றனர். இதுபோல் ஆறு சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் மிக நேர்த்தியான படத்தொகுப்பில் சொல்லும் படம். இயக்குநர் PAWEL MASLONA. 6 திரைப்பட விழா விருதுகளையும் 4 Nomination களையும் பெற்ற படம்.

‘DOGMAN’(ITALY), ‘COLD WAR’ (POLAND, UK, FRANCE நாடுகளின் தயாரிப்பு), ‘TOUCH ME NOT’ (ROMANIA, GERMANY தயாரிப்பு), ‘HEBBET RAMAKKA’ (கன்னடம்), ‘BHAYANAKAM’ (மலையாளம்) ‘PADMAAVAT’ (இந்தி) ஆகிய சிறந்த படங்களும் திரையிடப்பட்டன. திரைப்பட விழாவின் இறுதி நாளன்று சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட்டது.

எதிர்காலத்தில் நடைப்பெறும் திரைப்பட விழாவில் உலகத்திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.