மின்னுவதெல்லாம் பொன்தான்-10



ஒளிவீச மறுத்த உதிரிப்பூ!

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1979, அக்டோபர் 19.‘தமிழ் சினிமா வயசுக்கு வந்துவிட்டது’ என்று அப்போது பிரபல விமர்சகர் ஒருவர் சொன்னார்.வேறொன்றுமில்லை.மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ வெளியான நாள் அது.அதுவரையிலான தமிழ் சினிமா இலக்கணம், நெறிமுறைகள், கட்டமைப்புகளை உடைத்து புதிய சரித்திரம் படைத்தது ‘உதிரிப்பூக்கள்’.அதன் நாயகி அஸ்வினி.

ஒரு சினிமா ஹீரோயினுக்கு அதுவரை இருந்து வந்த இமேஜை உடைத்து எளிய நடிகையாக அறிமுகமானார். அடுத்தவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனின் அன்பான மனைவியாக, இரண்டு குழந்தைக்குத் தாயாக வாழ்ந்திருந்தார். தன் தங்கையை பெண் கேட்டு வரும் சரத்பாபு தன்னை பெண் பார்க்க வந்த கதையை அவர் வியந்து விவரிப்பதும், இப்போது தனக்கு திருமணமாகி விட்டதை உணர்ந்து அப்படி நினைப்பது கூட தவறு என தன்னைத் தானே கடிந்து கொள்வதுமான அந்தக் காட்சி ஒரு சோற்றுப் பதம்.

ஒரு நோயாளி மனைவியை தன் தோற்றத்திலேயே உணர்த்தினார். படத்தில் அவருக்கு வசனங்கள் மிக மிகக் குறைவு. உடல் மொழியாலும், முகபாவத்தாலும் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்துவார். ஒரு முறை கணவன் சினிமாவுக்குப் ேபாகலாம் ரெடியாகு என்று சொல்கிறபோது மழை வருமா என்று வானத்தைப் பார்க்கிற காட்சியில் அவரது முகத்தில் ஒரு குழந்தைத்தனம் அற்புதமாக வெளிப்படும்.

‘உதிரிப்பூக்கள்’ மிகப் பெரிய வெற்றிப் படம். ஆனாலும் அஸ்வினியால் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை. மகேந்திரனின் ஆஸ்தான நடிகையாகி அதன் பிறகு ‘நண்டு’, ‘அழகிய கண்ணே’  படங்களில் நடித்தார். மகேந்திரன் படமாகவே இருந்தாலும் இரண்டு படங்களும் சிறப்பாக அமையவில்லை, வெற்றி பெறவில்லை. அதனால் அஸ்வினி ராசியில்லாத நடிகை ஆனார்.

 ‘ஒரு கை ஓசை’, ‘ஆனந்த கும்மி’, என சில படங்களில் நடித்தாலும் ‘உதிரிப்பூக்கள்’ லட்சுமியாக அவர் மறுபடியும் தன்னை நிரூபிக்கவில்லை. இயல்பிலேயே அமைதியான சுபாவம், நோயுற்றவர் ேபான்ற பொலிவிழந்த ேதாற்றம். அவரை சினிமாவில் ெஜயிக்க விடவில்லை.

அஸ்வினி, ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு சில கன்னடப் படங்களில் நடித்திருந்தார். அந்த கன்னடப் படங்களை பார்த்துதான் மகேந்திரன் நடிக்க அழைத்து வந்திருந்தார். தமிழுக்கு வந்து சென்றபிறகு பெரிதாக கன்னடப் படங்களும் கிடைக்கவில்லை. திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். கணவன், குழந்தை, பேரப் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் சென்னை வந்த அவர் இயக்குநர் மகேந்திரனைச் சந்தித்துப் பேசினார். மீண்டும் நடிக்க ஆசை இருப்பதாகவும், நல்ல குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஒருவேளை அஸ்வினி ஜெயித்திருந்தால் பெரிய கனவுக் கன்னியாக மாறியிருக்க மாட்டார்; சரிதா மாதிரி நல்ல குணச்சித்திர நடிகையாக வளர்ந்திருப்பார். ஒரு படம் ஆனாலும் அதில் வாழ்ந்த லட்சுமியாகவே இன்னும் ரசிகர்–்களின் மனங்களில் இருக்கிறார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்