அமைதிப்படை மாதிரி இந்த அடங்காதே!



“25 வருஷத்துக்கு முன்னாடி வந்த மணிவண்ணனோட ‘அமைதிப்படை’யைப் பற்றி இன்னும் ஜனங்க பேசுறாங்க. அதே மாதிரி அடுத்த 25 வருஷம் கழிச்சி எங்களோட ‘அடங்காதே’ பற்றியும் பேசுவாங்க” என்று நம்பிக்கை கண்களில் தெறிக்க, அளவான வார்த்தைகளில் பேசுகிறார் சண்முகம் முத்துசாமி.

இவருக்கு இதுதான் முதல் படம். ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார், மந்திராபேடி என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திரங்களை இயக்குகிறார்.“சரத்குமாருக்கு என்ன ரோல்?”‘‘இன்றைய சூழல்ல, நிச்சயம் இது சொல்ல வேண்டிய கதை. இப்படி ஒரு சப்ஜெக்ட்டை முதல் முயற்சியாக எந்த ஒரு அறிமுக இயக்குநரும் சொல்லத் தயங்குவாங்க.

ஆனா, இதை நான் தைரியமாக பண்ணியிருக்க காரணமே, எங்க தயாரிப்பாளரும், ஹீரோவும் கொடுத்த சுதந்திரம்தான். சரத்குமார் சார் இதுல அரசியல்வாதியா வர்றார். படத்தில் உள்ள கேரக்டர் போல ரியல் லைஃப்லேயும் இப்படி ஒரு அரசியல்வாதியாவே இருக்கணும்னு அவரும் விரும்பியிருக்கார்.”

“நண்பர் என்பதால் உங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் கால்ஷீட் கொடுத்திருக்காரா?”
“அவர் என் நண்பர் மட்டுமில்ல. அதுக்கும் மேல. பெஸ்ட் வெல்விஷர். ‘பென்சில்’ படத்துல நான் இணை இயக்குநர் ப்ளஸ் டயலாக் ரைட்டர். அதுல ஜி.வி.பி சார் பேசின முதல் வசனத்தை சொல்லிக் குடுத்தவன் நான். அதிலிருந்து அவரோட நல்ல நட்பு அமைஞ்சது. அந்த டைம்ல அவர் தயாரிச்ச ‘மதயானைக்கூட்டம்’ படத்தை பார்த்துட்டு அவர்கிட்ட என் மனசுல தோணினதைச் சொன்னேன்.

முகஸ்துதி இல்லாமல் நான் பேசினதுல அவர் இம்ப்ரஸ் ஆகிட்டார். ‘ஷான், ஏதாவது கதை வச்சிருந்தா சொல்லுங்க’ன்னார். அப்படி ரெடியானதுதான் இந்தக் கதை. ஜி.வி.பி சார் கதையை ஓ.கே. பண்ணின விஷயத்தை நண்பரும் காமெடி நடிகருமான பிளாக் பாண்டிகிட்ட சொன்னேன். உடனே, அவர் ‘ஜாக்சன்துரை’ தயாரிப்பாளர் க்ரீன்  ஷரவணன் சார்கிட்டேயே என்னை அழைச்சிட்டு போய், கதை சொல்ல வச்சார்.

அந்தக் கதை தயாரிப்பாளருக்கு கதை பிடிச்சிருந்தது. ஆனா, ‘அறிமுக இயக்குநருக்கு பதிலா பெரிய இயக்குநர் பண்ணினா பெட்டர்’னு ஃபீல் பண்ணினார். அப்ப ஜி.வி. சார்தான் புரொட்யூசர்கிட்ட, ‘நீங்க என்னை நம்பி ஷானுக்கு படம் குடுங்க. அவர் ராஜமௌலி மாதிரி வரக்கூடியவர்’னு சொன்னார். அவ்ளோ நம்பிக்கையை அவர் என்மேல வச்சிருக்கார். இந்தப் படத்துக்காக ஜி.வி.சார் அவர் பேசின சம்பளம் முதற்கொண்டு நிறைய விஷயங்களை விட்டுக்குடுத்திருக்கார். யோகிபாபுவும் என் நண்பன்தான். ரொம்ப ரொம்ப பிரியம் உள்ளவர். காமெடி நல்லா வரணும்னு அவரே நிறைய பஞ்ச் அள்ளிக் கொடுத்தார்.”

“படத்தோட டைட்டில் ரொம்ப புரட்சிகரமா இருக்கே?”

“ஆமாம். யாருக்கும் அடங்கக்கூடாது என்பதற்கு படம் பார்த்த பிறகு விடை கிடைக்கும். இந்தியா என்பது மூன்று வர்ணங்கள் சேர்ந்த நாடு. அதை ஒரு கலராக மாற்ற முயற்சி பண்ணினா என்னவாகும் என்பதுதான் படத்தோட ஒன்லைன் ஸ்டோரி. முக்கியமான போர்ஷனை எல்லாம் காசியில் ஷூட் பண்ணியிருக்கோம்.

அங்கே ஒரு ஏரியாவில் போலீஸ் அதிகாரியா ஒரு தமிழர் இருந்ததால, ஆர்மி ஏரியாவில் எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொடுத்து ஷூட் பண்ண வச்சார். ஒளிப்பதிவை பி.கே.வர்மா பண்ணியிருக்கார். ஜி.வி.பிரகாஷின் இசை நல்லா வந்திருக்கு. அவர் நடிக்கிற வேற படத்தோட ஷூட் முடிச்சிட்டு நள்ளிரவில் அவர் வீட்டுக்கு வந்தால் கூட, ‘ஷான் கம்போஸிங் வாங்க’னு கூப்பிடுவார். பிரமாதமான தீம் ஸாங்கும் போட்டுக் குடுத்திருக்கார்.”

“சரத்குமார் அரசியல்வாதியாக நடிக்க உடனே ஒத்துக் கொண்டாரா?”
“இல்லை. இப்போ அவரே அரசியல் கட்சித் தலைவரா இருக்கிறதாலே கொஞ்சம் யோசிச்சார். இந்த புராஜெக்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்பு அவர்கிட்ட போன்ல அப்ரோச் பண்ணினபோது, ‘நடிக்கலை’ன்னு சொல்லிட்டார். கதையைக் கேட்டுட்டு உங்க முடிவை சொல்லுங்க சார்னு சொல்லிட்டு நேர்ல சந்திச்சு கதையை சொல்லிட்டு வந்துட்டேன். சரத் சார் எங்க தயாரிப்பாளருக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நல்ல கதை.

நான் பண்றதுக்கு கொஞ்சம் முன்ன பின்ன டைம் ஆனாலும் விட்டுடாதீங்க. கண்டிப்பா இந்தப் படத்தை பண்ணுங்க’னு சொல்லியிருக்கார். ஸ்பாட்டுல ஃபிட்னஸ் பத்தி நிறைய டிப்ஸ் சொல்லுவார். ‘சண்முகம் என்ன நீங்க ஜிம்முக்கே போறதில்லையா?’னு ஹெல்த் பத்தி அக்கறையா விசாரிப்பார். ரொம்ப மென்மையானவர்.”“மறுபடியும் மந்திராபேடி?”

“பதினாலு வருஷ இடைவெளிக்குப் பிறகு மந்திராபேடி மறுபடியும் தமிழ்ல ரீ-என்ட்ரி ஆகுறாங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசர் கேரக்டர் என்பதால் மொதல்ல விஜயசாந்தி மேம்தான் மைண்ட்ல வந்தாங்க. ஒருநாள் ட்விட்டர்ல மந்திராபேடி மேம் போட்டோவைப் பார்த்தேன். செம டைட் ஃபிட் லுக்ல ஒரு ஸ்டில் போஸ்ட் பண்ணியிருந்தாங்க. அவங்க போன் நம்பரை ரீச் ஆகுறதுக்கே ஒரு மாசம் டைம் ஆச்சு. ‘இத்தனை வருஷத்துக்குப் பிறகும், தமிழ் இண்டஸ்ட்ரி அதே சுறுசுறுப்பா, புதுத்தெம்பா இருக்கு’னு ஆச்சரியமானாங்க. எங்க ஒர்க்கிங் ஸ்டைல் பிடிச்சுப் போய், ‘அடுத்தும் உங்க டீமோடு நடிக்கணும்’னு ஆசையா சொல்லிட்டு போயிருக்காங்க.”

“பெரிய போராட்டத்துக்குப் பிறகு டைரக்டர் ஆகியிருக்கீங்க இல்லையா?”
“நிஜம்தான். ஆனா இதுல ஆச்சரியமான ஒரு விஷயம், எட்டு வயசு வரைக்கும் சினிமாவே நான் பார்த்ததில்லை. தியேட்டர் பக்கமே போனதில்லை. என் பூர்வீகம் விருதாச்சலம். நான் காலேஜ் படிக்கும்போது, என்னை சினிமாவுக்கு இழுத்தது சேரன் சார் படங்கள்தான். ‘பொற்காலம்’ பார்த்துட்டு அவர்கிட்ட உதவியாளரா சேர ஆசைப்பட்டேன்.

சென்னை வந்ததும் நகுலன் பொன்னுசாமி சார்கிட்ட ‘வர்ணஜாலம்’, தங்கர்பச்சான் சார்கிட்ட ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பதுரூபாய்நோட்டு’, சேரன் சார்கிட்ட ‘ராமன் தேடிய சீதை’, அப்புறம் ‘பாகன்’, மணிவண்ணன் சார்கிட்ட ‘அமைதிப்படை-2’, கோபிநயினார் சார்கிட்ட ‘அறம்’வரை ஒர்க் பண்ணின அனுபவத்தோடு இயக்குநர் ஆகியிருக்கேன்.”

“மணிவண்ணன்கிட்ட ஒர்க் பண்ணின அனுபவம் ஒண்ணு சொல்லுங்க?”
“நிறைய இருக்கு. ‘அமைதிப்படை-2’ல அவர்கிட்ட பத்து அசிஸ்டென்ட்கள், ரெண்டு இணை இயக்குநர்கள்னு பெரிய டீமா ஒர்க் பண்ணினோம். படப்பிடிப்புக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி, அவர் எங்க அத்தனை பேரையும் கூப்பிட்டு படத்தோட கதையை ஷாட் பை ஷாட் ஆக ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் சொன்னார். அந்த ஆடியோ பதிவைக் கூட இன்னும் பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருக்கேன்.

அந்தப் படத்தோட ஷூட்  கோவையில் போயிட்டு இருக்கும்போது, ஆர்ட் டிபார்ட்மென்ட்டில் ஒரு பெரிய சைஸ் டி.வி. ஒண்ணு வேணும்னு மணிவண்ணன் சார் கேட்டிருந்தார். அவர் கேட்டிருந்த டி.வி. வரவே இல்லை. ஆனா, ஷூட்டிங் ஸ்மூத்தா போயிட்டிருந்தது. எனக்கு பயங்கரமான ஆச்சரியமாகிடுச்சு.

வேற ஒரு டைரக்டராக இருந்தால் ‘பேக்கப்’னு கத்திட்டு ஷூட்டிங்கையே நிறுத்தியிருப்பாங்க. ஆனா, மணிவண்ணன் சார் அதை செய்யல. உடனே நான் அவர்கிட்ட ‘மணிவண்ணன் சாருக்கு கோபம் வந்தால், அவர் கையில் வச்சிருக்கற பேடால் (pad)  கூட அடிப்பார்’னு உங்ககிட்ட சேருறதுக்கு முன்னாடி என்கிட்ட நிறைய இயக்குநர்கள் பயமுறுத்தி இருக்காங்க. ஆனா, நீங்க ரொம்ப கூலா இருக்கீங்களேனு சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே ஒரு விஷயம் சொன்னார். ‘இங்கே நாம கேட்டது கிடைக்கலைனாலும் நமக்கு சினிமா எடுக்கத் தெரிஞ்சிருக்கணும்.

அப்படித்தான் நான் இவ்வளவு படங்கள் எடுத்திருக்கேன். நீ கேட்குற பொருள் உன் மைண்ட்ல இருக்கும்போது அதுக்காக நீ ஷாட் வைப்பே. கேமராவுக்கு முன்னாடி இருக்கிற கதாபாத்திரம், நடிகன் இதையெல்லாம் தாண்டித்தான் நாம கேட்டிருந்த அந்த செட் பிராப்பர்ட்டி இருக்கும்.
அதுக்காக நாம  போராடினால் அப்புறம் கதையில் கவனம் செலுத்த முடியாது’ன்னார். மணிவண்ணன் சார்  சினிமாவை ரொம்ப சுலபமாக்கிய குரு.”
 
- மை.பாரதிராஜா