வைஜெயந்திமாலாவாக நடிக்க பூஜாகுமார் ரெடி!



‘நடிகையர் திலகம்’ ஹிட்டுக்குப் பிறகு பயோகிராபி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் நம்மூர் நடிகைகள். அந்த டிரெண்டில், “வைஜெயந்திமாலா வாழ்க்கையை வரலாற்றுப் படமாக எடுத்தால் அதன் கதையின் நாயகியாக நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’’ என்கிறார் ‘விஸ்வரூபம்’ பூஜா குமார்.
‘காதல் ரோஜாவே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான பூஜாகுமார், ‘விஸ்வரூபம்’, ‘உத்தமவில்லன்’, ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்களின் மூலம் கமலுடன் ஹாட்ரிக் அடித்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஜோராக ஆரம்பித்திருக்கிறார்.

“மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்போம் என்று நினைத்தீர்களா?”

“அப்படி ஒரு எண்ணம் இல்லாமல்தான் இருந்தேன். கமல் சாரிடமிருந்து அழைப்பு வந்ததும் மறுக்க முடியவில்லை. ‘விஸ்வரூபம்’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பைக் கொடுத்தேன். நான் மட்டுமில்ல, படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தார்கள்.”

“கமலின் ‘மருதநாயகம்’ படத்தில் நீங்கள் நடிக்கப் போவதாக பேச்சு உள்ளதே?”

“கமல் சாரிடம் ‘மருதநாயகம்’ படத்தை எப்போது தொடங்கப்போகிறீர்கள்?’ என்று ஒரு முறை கேட்டேன். ‘அதுபோன்ற படங்கள் கடின உழைப்பு, நீண்ட காலத் தயாரிப்பு, ப்ரீ புரொடக்‌ஷன், களப் பணிகள் என அதிக உழைப்பைக் கேட்கும். அதனால் அதற்கு காலம்தான் பதில் சொல்லும்’ என்றார். ‘மருதநாயகம்’ படம் துவங்கும்பட்சத்தில் வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிக்க தயாராக இருக்கிறேன்.”

“பயோகிராபி படங்களில் நடிப்பதாக இருந்தால் உங்கள் சாய்ஸ்?”

“தற்போது சரித்திரப் பின்னணியிலான படங்கள், பீரியட் படங்கள், சுயசரிதை படங்கள் நிறைய வருகிறது. ‘நடிகையர் திலகம்’ போன்ற படங்களுக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள். அந்த வகையில் மூத்த நடிகையான வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாறு, இந்தி நடிகை ரேகா அவர்களின் சுயசரிதை போன்றவை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க நான் ரெடி.

ஏற்கனவே ‘உத்தம வில்லன்’ படத்தில் சிறிய பகுதியில் இது போன்று நடித்திருக்கிறேன். ஆனாலும் முழுநீள சரித்திரப் பின்னணியிலான கதையில், குறிப்பாக வீரமங்கை ஜான்சி ராணியின் கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

“சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் ‘மீ டூ’  குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“திரையுலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் டாபிக் இது. ‘மீ டூ’ ஹேஷ்டேக் என்ற இணையப்பதிவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். இதை, சமூகத்தில் பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளை மாற்றியமைக்கவேண்டும் என்பதற்காக நேர்மறையான எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகப் பார்க்கிறேன்.”

“அடுத்து?”

“நெட்பிளிக்ஸிற்காக பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘த இன்விஸிபிள் மாஸ்க்’ என்ற இந்திப் படத்தில் நடிக்கிறேன். இதில் என்னுடன் ஆதித்யா ஷீல் என்னும் இளம் நடிகர் நடித்திருக்கிறார். ஜனவரி வெளியீடு. இந்தப் படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதில் நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். வருவாய் பற்றாக்குறையினால் வேலைக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு ஏற்படும் அனுபவங்களும், கணவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் என இன்றைய நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினையை ப்ரியன் சார் அற்புதமாக படமாக்கியிருக்கிறார். தொடர்ந்து ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் குஞ்சாலி மராக்கரின் சுயசரிதையில் முக்கியமான கேரக்டரில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.”

“தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி உள்ளது?”

“நான் ஃபீல்டுக்கு வந்தபோது பிலிம்லே படம் எடுத்தார்கள். இப்போது முற்றிலும் டிஜிட்டல் மயம். ஏராளமான இளம் படைப்பாளிகள் அறிமுகமாகி வீரியமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார்கள்.

முன்பு சமூகக் கருத்துகளை உள்ளடக்கிய படங்களை எடுக்க தயக்கம் நிலவியது. இப்போது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் வெளிவந்து  மக்களின் ரசனையை மேம்படுத்தியுள்ளது. எனக்கேற்ற கேரக்டர் இருந்து, திரைக்கதையும் என்னை ஆச்சரியப்படுத்தினால் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா