நெடுஞ்சாலை ஆரி



டைட்டில்ஸ் டாக் 88

பயணங்களை விரும்பாத வர்கள் யாராவது உண்டா? என்னுடைய நெடுஞ்சாலைப் பயணம் ஆரம்பித்தது பள்ளி நாட்களில்.... சிறு வயதில் பழனியில் நான் பயணிக்க சாலைகளே கிடையாது. குழந்தைப் பருவத்தில் அப்பாவின் புல்லட்தான் என் வாகனம். அம்மாவுக்கு சொந்த ஊர் மதுரை என்பதால் பண்டிகை, விசேஷங்களுக்கு அப்பாவுடன் புல்லட்டில் மதுரைக்கு பயணம் செய்வேன்.

அப்பா வைத்திருந்த புல்லட் சம்திங் ஸ்பெஷல். அப்பா அந்த வண்டியை தனித்துவமாக டிசைன் பண்ணி வைத்திருப்பார். அந்த வயதில் நான் கையாலேயே ஸ்டார்ட் பண்ணுவேன். அப்படி இருக்கும் வண்டியோட கண்டிஷன். ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என்று யார் கேட்டாலும் தர மாட்டார்.

பழனியில் எங்களுக்கு சொந்தமாக  ஓட்டல், டிராவல்ஸ், பஞ்சாமிர்தக் கடை என்று நிறைய பிசினஸ் இருந்தது. சிறுவயதில் எல்லாப் பயல்களைப் போலவும் எனக்கு சைக்கிள் மீது தனி கிரேஸ். அப்பாவிடம் அடம்பிடித்துதான் சைக்கிள் வாங்கினேன்.
பாதுகாப்பு காரணங்களால் அவர் ஆரம்பத்தில் வாங்கித் தரவில்லை. அதிலும் நான் கொஞ்சம் ஸ்டைலா வாங்கணும்னு நெனச்சேன். கடைசியில் பெரியவங்க ஓட்டும் ஹெர்குலிஸ் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். நீல நிறத்தில் இருந்த அந்த சைக்கிள்தான் என்னுடைய அப்போதைய உலகம்.

ஒரு கட்டத்தில் பரிணாம வளர்ச்சி எனக்குள் வேலை செய்ய ஆரம்பித்தது. சைக்கிள் பயணங்கள் சலிப்படையச் செய்தது. எங்க ஊருக்கும் கொடைக்கானலுக்கும் அதிக தூரம் இல்லை. விடுமுறை நாட்களில் நண்பர்கள் பைக்கில் கொடைக்கானலுக்கு பறப்பார்கள். மத்த பசங்க கொடைக்கானல் போகும்போது நான் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். நான்  பைக் ஓட்டும் வயதை எட்டியபோது அப்பாவுக்கு தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்பட்டது.

உடைமைகளை இழந்து அப்பா சைக்கிளுக்கு மாறினார். சிங்கம் மாதிரி புல்லட்டில் பயணித்த அப்பா சைக்கிளுக்கு மாறியபோது மனதுக்கு சங்கடமாக இருந்தது. ஒரு கட்டத்தில் பழைய மாடல் ஸ்கூட்டர் வாங்கினோம். அதில் கொடைக்கானல் உட்பட சுற்றுப்புற ஏரியாவை ரவுண்ட் அடித்துள்ளேன்.

நெடுஞ்சாலைப் பயணத்தில் மறக்க முடியாத பயணமும் இருக்கிறது. கொடுமுடியில் உள்ள கோயிலுக்குச் சென்று சாமி
கும்பிடுவது எங்கள் வழக்கம். அதன்படி ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ கதை மாதிரி எங்க  உறவுக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து கோயிலுக்குக் கிளம்புவோம். ஒரு முறை இரண்டு வண்டியில் புறப்பட்டோம்.

திரும்பி வரும்போது அடை மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த வண்டி ஊர் வந்து சேர்ந்துவிட்டது. அம்மா, மற்ற உறவினர்கள் பயணம் செய்த வண்டி வெள்ளத்தில் சிக்கியது.  விஷயம் கேள்விப்பட்டு அப்பாவும், சித்தப்பாவும் ஸ்பாட்டுக்குச் சென்று அந்த வண்டியை மீட்டு வந்தார்கள்.
நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணம் செய்து ஒருமுறை சென்னைக்கு வந்தது மறக்க முடியாத அனுபவம்.

நான் சென்னை வருவதற்கு சினிமா மட்டுமே காரணமாக இருந்தது. நான் படிப்புல சுட்டி. ஐந்தாம் வகுப்பு வரை முதல் ரேங்க் எடுத்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் படிப்பு மண்டையில் ஏறவில்லை. வீட்ல எனக்கு தொழில் ஏற்படுத்தித் தரணும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அதற்கான பொருளாதாரச் சூழல் இல்லை. சினிமாவுக்கு அனுப்பி வைக்கவும் விருப்பமில்லை. ஒரு கட்டத்தில் என்னுடைய உறுதியைப் பார்த்து என்னுடைய முயற்சிக்கு தடை சொல்லாமல் அனுப்பி வைத்தார்கள்.

வாழ்க்கைன்னா என்ன என்பது எனக்கு சென்னையில்தான் பிடிபட்டது. பணத்தோட அருமையை இங்குதான் தெரிந்துகொண்டேன். ஊர்ல இருக்கும்வரை பணப்பிரச்சனை இருந்த தில்லை. சென்னை மண்ணடியில் தங்குவதற்கு இடம் கிடைத்தது. ஜிம் வேலை கிடைத்தது.  வருமானத்தில் நூறு ரூபாயை மாதா மாதம் சேமித்து வைப்பேன்.

அந்தப் பணத்தில் செகண்ட் ஹேண்டில் ஒரு சைக்கிள் வாங்கினேன். ஊர்ல இருக்கும் போது சைக்கிளை விட்டுவிட்டு பைக்கிற்கு ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் சைக்கிள் எவ்வளவு அவசியம் என்பதை சென்னைக்கு வந்தபிறகு ரியலைஸ் பண்ணிப் பார்த்துள்ளேன். என்னுடைய உழைப்பின் அடையாளமாக இருக்கும் அந்த சைக்கிள் இப்போதும் என்னிடம் உள்ளது. வார இறுதியில் சினிமா சான்ஸ் தேடி கோடம்பாக்கத்துக்குப் போவேன்.

ஹீரோ சான்ஸ் தேடிச் செல்வதால் டிப் டாப்பாக கிளம்பிப் போவேன். கூட்ட நெரிசலில் கோடம்பாக்கத்தில் இறங்கும் போது சட்டை கசங்கி கந்தலாக மாறியிருக்கும். ஒரு பைக் இருந்தால் நல்லா இருக்குமே என்று மனம் மீண்டும் பைக்கிற்கு ஆசைப்பட்டது.

அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னேன். நான் தவணை கட்டுவதாக இருந்தால் வண்டி வாங்க ஜாமீன் கொடுப்பதாக அப்பா சொன்னார். சின்ன வயதில் ஆசைப்பட்ட யமஹா ஆர் எக்ஸ் வண்டி அப்பா தயவால் சொந்தமானது. அந்த வண்டியும் இப்போது என்னிடம் உள்ளது. அந்த வண்டிக்கு என்னை நடிகனாக மாற்றியதில் பெரும் பங்கு உள்ளது.

என்னுடைய இந்தப் பயணத்தில் அமீர் ஜான், ஷபீர், வெற்றி, ஆரோக்யம் போன்ற நண்பர்கள் முக்கியமானவர்கள். நாங்கள் குழுவாகச் சென்று வாய்ப்பு தேடுவோம். அந்த நண்பர்கள்தான் சினிமாவில் எப்படி வாய்ப்பு தேட வேண்டும், சினிமா கம்பெனி எங்கு இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

என்னுடைய சினிமாப் பயணத்தில் சேரன் சார் முக்கியமானவர். அவர்தான் எனக்கு முதன் முதலாக வாய்ப்பு கொடுத்தார். ‘ஆட்டோகிராப்’ படத்தில் ஃபிட்னஸ் டிரைனர் கேரக்டர் கொடுத்தார். அந்தப் படத்துக்குப் பிறகு சினிமா தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அமீர், பார்த்திபன், ஆதி, சசிகுமார் போன்ற ஏராளமான பிரபலங் களுக்கு ஃபிட்னஸ் டிரைனராக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது.

அதேபோல முதல் ஹீரோ வாய்ப்பும் சேரன் சார் மூலம் கிடைத்தது. ‘ஆடும் கூத்து’ என்ற அந்தப் படத்தில் நானும் சேரன் சாரும் நாயகர்களாக நடித்தோம். அந்தப் படத்தை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குநர் டி.வி.சந்திரன். ஒளிப்பதிவு மது அம்பாட். அப்போது என்னுடைய பெயர் அகில்குமார்.

சினிமா ஆசையோடு நடிக்க வருபவர்களுக்கு நான் சொல்லும் செய்தி இதுதான். எல்லாருக்குள்ளும் ஜெயிப்போமா ஜெயிக்கமாட்டோமா என்கிற இருவிதமான சிந்தனை தோன்றும். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள். ஆனால் அதற்கான தகுதி, திறமையை வளர்த்துக்கொண்டு வாய்ப்பு தேடுங்கள். வெற்றி நிச்சயம். தகுதியை வளர்த்துக் கொள்ளாமலேயே, அதிர்ஷ்டம் இருக்கணும், சினிமா பின்னணி வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.

ஒரு தைரியத்தில் நானும் சினிமாவுக்கு வந்தவன் தான். ஆனால் மூன்று வருடம் நடிப்பதற்கான தகுதியே இல்லாமல் வாய்ப்பு தேடி இருக்கிறேன் என்பது பிறகு தான் தெரிந்தது.தகுதிக்கு மீறி கனவுடன் வருபவர்களைத் தடுக்கும் விதமாக உருப்படாதவர்களை உதாரணம் சொல்லுவார்கள். நான் கிளம்பும் போதும் அப்படி இரண்டு பேரை முன்னிறுத்தி உதாரணம் சொன்னார்கள். ஊர்லேயே பிழைக்கும் வழியைப் பார் என்றார்கள். அதையும் மீறித் தான் சென்னைக்கு வந்தேன்.

இங்கு வெற்றி அடைந்தால் அது பலருக்கு உத்வேகம். தோல்வி அடைந்தால் அது பலருடைய லட்சியத்தை அழித்து விடும். சென்னையில் இருந்தபோது பல சமயம் மீண்டும் ஊருக்குப் போய்விடலாமா என்று யோசித்திருக்கிறேன். என்னை உதாரணமாக வைத்து அரசு பையனைப் பார்... திரும்பி வந்துட்டான்னு சொல்லி அடுத்தவங்க லட்சியத்தை தடுக்கக் கூடாது என்பதற்காகவே சென்னையில் இருந்தேன்.

அந்த மாதிரி சமயங்களில் கையில் சல்லிக்காசு இருக்காது. ஆனால் கடைசி வரை என் முயற்சியைக் கைவிடவில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘எண்ணங்களே ஏணிப்படிகள்’ புத்தகம் உற்சாகத்தை கொடுத்தது. நடிக்க வேண்டும் என்று சிந்தனையில் இருந்தால் அந்த சிந்தனையே உங்களை ஜெயிக்க வைக்கும். எண்ணங்களால் ஓடுங்கள். அப்போது கனவு நிஜமாகும்.

நெடுஞ்சாலையில் ஆரம்பித்த என்னுடய பயணம் அடுத்த கட்டமாக விமானப் பயணத்துக்கு மாறியது. பாரம்பரிய விதை பற்றிய பிரச்சாரம், மாடித்தோட்டம், ஜல்லிக்கட்டு என்று என்னுடைய சமூக ஈடுபாட்டை கருத்தில் கொண்டு வட அமெரிக்கா தமிழ்ச் சங்கம் என்னை அமெரிக்கா அழைத்தது. அங்கு தமிழில் கையெழுத்திடுவோம் என்ற பிரச் சாரத்தை ஆரம்பித்து வைத்தோம்.

தமிழ் தழைக்க வேண்டும் என்றால் பிற மொழிகளோடு தமிழையும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். தமிழில் கையெழுத்து போடுவது அவமானம் அல்ல; அடையாளம். இதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்து குமரி வள்ளுவர் சிலை வரை நெடுஞ்சாலைப் பயணத்தைத் தொடரவுள்ளேன். பயணங்கள் முடிவதில்லை.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)