ஆண் தேவதை



#MeToo யுகத்தை தோலுரித்துக் காட்டும் படம்!

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று யாரோ எப்போதோ எழுதித் தொலைத்து விட்டார்கள். அதன் அடிப்படையில் கணவன், வேலைக்குப் போய் குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளைத் தாங்கவேண்டும். மனைவி, வீட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மரபாகவே ஆகிவிட்டது. இந்த மரபை உடைத்து ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ என்று சொல்லக்கூடிய வித்தியாசமான கதாபாத்திரத்தை சமுத்திரக்கனிக்காக படைத்திருப்பதற்காகவே இயக்குநர் தாமிராவுக்கு ஒரு பூங்கொத்தைக் கொடுக்கலாம்.

மனைவி லேப்டாப்பில் அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டே காய்கறி நறுக்கும் சமுத்திரக்கனி, பச்சக்கென்று நம் நெஞ்சமெல்லாம் ஒட்டிக் கொள்கிறார். தம்பதியினருக்குள் ஏற்படும் கருத்து மாறுபாட்டால் பெண்குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியேறி அவர் அனுபவிக்கும் இன்னல்கள் கண்ணீர் அத்தியாயம்.

அந்த சோகம் குழந்தைக்கு தொற்றிக் கொள்ளக்கூடாது என்று ‘கடவுளோடு கேம்’ என்கிற சுவாரஸ்யமான கான்செப்ட்டை உருவாக்கி புன்னகைக்க வைக்கிறார்கள். சமுத்திரக்கனியின் மகளாக மோனிகா அவ்வளவு அழகு.சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியனின் மகனாக வரும் கவின்பூபதியும் சூட்டிகை. ‘என்னை ஏம்பா விட்டுட்டுப் போனே?’ என்று அவன் கேட்கும்போது அரங்கமே கண்களைத் துடைத்துக் கொள்கிறது. சுடலைமாடன் சுடலைமாடி என்று சண்டை போடும் குழந்தைகள் திரும்பச்சேரும்போது அதையே சொல்லி அணைத்துக்கொள்ளும் காட்சி நெகிழ்ச்சி.

சமுத்திரக்கனியின் மனைவியாக, இரு குழந்தைகளுக்கு அம்மாவாக ரம்யா பாண்டியன். கார்ப்பரேட் கம்பெனி வேலைக்குச் செல்லும் குடும்பத்தலைவியாக ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்குகிறார். சுஜா வாருணியின் வேடம் இன்றைய இளம்பெண்களுக்கு நல்ல எச்சரிக்கை. ராதாரவி, ஹரிஷ்பேரடி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளார்கள். சின்னச் சின்ன வேடங்கள் என்றாலும் அவர்களின் மூலம் இந்தச் சமூகத்தின் பல்வேறு முகங்களாக வெளிப்பட்டிருப்பது சிறப்பு.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அருமை. விஜய்மில்டனின் ஒளிப்பதிவு திரைக்கதையை வேகமாக நகர்த்த உதவியுள்ளது, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு நன்று.கிரெடிட் கார்டு, ஹவுஸிங் லோன்ல வீடு, பேங்க் கடன்ல கார் என்று வாங்கிக் கொண்டு அதையே தம் பெருமையாகவும் கெளரவமாகவும் கருதும் நடுத்தர வர்க்கத்தின் ஜம்பத்தை பொட்டில் அடித்துப் புத்தி சொல்லும் படம். அதைப் பிரச்சாரமாக சொல்லாமல் புத்திசாலித்தனமாகச் சொல்லியிருக்கும் படம்.

பெண்ணுரிமை, கணவன் மனைவி உறவு, குழந்தைகள் வளர்ப்பு, சமுதாயத்தின் பல்வேறு முகங்கள் ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் அழுத்தமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் தாமிரா. இன்றைய #MeToo யுகத்துப் பெண்கள் கொண்டாட வேண்டிய படம்.