மனுசங்கடா



இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதியவரின் மரணத்தின்போது நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை, பொதுவழியாக இருந்தாலும் தாங்கள் வசிக்கும் பகுதியில் எடுத்துச் செல்லக்கூடாது என்று உயர்த்தப்பட்ட சாதியினர் முரண்டு பிடிக்கிறார்கள்.  

அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும் தாழ்த்தப்பட்ட சமூகம் அதில் வெற்றி பெற்று, பொதுவழியில் இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்லலாம் என்ற நீதிமன்ற உத்தரவைப் பெறுகிறார்கள். உயர் சாதியினரின் பண பலம், ஆள் பலம், அதிகார பலம் என அனைத்தும் சேர்ந்து, அவர்கள் கையில் இருக்கும் நீதிமன்ற உத்தரவை வெறும் காகிதமாக எண்ணி, அவர்களை எப்படி பந்தாடுகிறது என்பதை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அம்ஷன்குமார்.

ராஜீவ் ஆனந்த், மணிமேகலை, சசிகுமார், ஷீலா, ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அரவிந்த் சங்கரின் இசையும், பி.எஸ்.சங்கரின் ஒளிப்பதிவும்  கதைக்கு ஏற்ப பயணித்து காட்சிகளை இயல்பாகக் காண்பித்துள்ளன.

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தைரியமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் அம்ஷன் குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்குலாப்பின் ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’  பாடலோடு படம் முடிவடையும் போது மனதும் வலிக்கிறது.