கூத்தன்



போராட்டமாகும் நடனம்!

ஃபிலிம்நகர் என்ற இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களில் ஒருவரான ஹீரோ ராஜ்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடனக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு நடனப் போட்டியில் ஹீரோயின் ஸ்ரீஜித்தா கோஷை சந்தித்ததுமே காதலிக்கிறார். 
இந்நிலையில், ஹீரோ ராஜ்குமார் தங்கியிருக்கும் ஃபிலிம் நகரின் முதலாளி அந்த இடத்தை விற்க முடிவு செய்து, அங்கிருப்பவர்களை காலி செய்யுமாறு கூறுகிறார். தொடர்ந்து அதே இடத்தில் இருக்கவேண்டும் என்றால் ஒரு கோடி கொடுத்து இவர்களே வாங்கவேண்டிய நெருக்கடி.

பணத்துக்காக ஆசிய அளவில் நடைபெறும் நடனப் போட்டியில் ஹீரோ கலந்துகொள்ள முடிவெடுக்கிறார். போட்டியில் நடன ஜாம்பவனான நாகேந்திர பிரசாத்துடன் மோத, அவர் பல நெருக்கடிகளைக் கொடுக்கிறார். ஹீரோ நடனப் போட்டியில் வெற்றி பெற்றாரா, இல்லையா, ஃபிலிம்நகரை மீட்டெடுத்தாரா என்பதுதான் ‘கூத்தன்’.

அறிமுக ஹீரோ ராஜ்குமாருக்கு நடிப்பும் நடனமும் நன்றாக வருகிறது. ஹீரோயின் ஜித்தா கோஷ் அழகாக இருக்கிறார். ஊர்வசி தனது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார். பாலாஜியின் இசையும், மாடசாமியின் ஒளிப்பதிவும் படத்தின் இரு பில்லர்கள்.  நலிவடைந்த சினிமா கலைஞர்கள் பற்றி படத்தில் பேச முயற்சித்திருக்கும் இயக்குநர் வெங்கி, அதை நடன பின்னணியில் சொல்லியிருக்கிறார்.