வெப்சீரிஸ், ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்! பாபிசிம்ஹா சொல்கிறார்ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் வெப்சீரிஸ் என்று இரட்டை குதிரை சவாரி செய்கிறார் பாபிசிம்ஹா. அதுபற்றி அவரிடம் கேட்கையில், “இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வெப்சீரிஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் வெப் சீரிஸில் காயத்ரி ஷங்கர், ‘நிமிர்’ பார்வதி நாயர் ஆகியோர் என்னோடு நடித்திருக்கிறார்கள். பிரபல நடிகைகள் நடிக்கத் தயங்கும் வேடத்தில் பார்வதி நாயர் துணிச்சலாக நடித்திருக்கிறார்.

வெப் சீரிஸ் படங்களில் நடிப்பதை கெளரவக் குறைவாகப் பார்க்க முடியாது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்கப் போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தைப் பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது.

சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்’’ என்கிற பாபி சிம்ஹா தமிழில் ‘சாமி-2’ உள்பட ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களை கைவசம் வைத்துள்ளாராம். ‘சாமி-2’ படத்தில் மாறுபட்ட தோற்றங்களில் நடிப்பதால் அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்க காலதாமதமாகிறதாம்.  

- எஸ்