நாச்சியார் என்னை நடிகனாக்கினார்! ஜிவிபி பெருமிதம்“ஹீரோவாக பல படங்கள் நடித்திருந்தாலும் நாச்சியார் எனக்கு சம்திங் ஸ்பெஷல்’’ என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பாளர், நடிகர் என்று பிஸியான ஷெட்யூலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரிடம் பேசினோம்.

“பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. ‘நாச்சியார்’  படத்துக்காக பாலா சார் என்னை தொடர்பு கொண்ட போதுகூட, இசையமைக்கத்தான் அழைக்கிறார் என்று நினைத்தேன். ‘நீ தான் நடிக்கிற’ என்று பாலா சார் சொன்னபோது, நான் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

‘நாச்சியார்’ படத்தில் என் நடிப்பைப் பார்த்து அனைவருமே நல்ல நடிகன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அனைத்து புகழுக்கும் காரணம் பாலா சார் மட்டுமே.

அவருடைய இயக்கத்தில் நடித்தபோது ஒரு நடிகனாக என்னை நானே மெருக்கேற்றிக் கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி உள்வாங்கி நடிக்கவேண்டும் என்று மிக நுட்பமாக சொல்லிக் கொடுத்தார். அந்த வகையில் என் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பாலா சார். அவருக்கு என் நன்றி எப்போதும் இருக்கும்.

ஜோதிகா மேடம், இளையராஜா சாருடைய இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றுமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ‘நாச்சியார்’ படம் எனக்கு மட்டுமல்ல, அந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே திரையுலகில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் பாலா சார். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மாணவர்களிடையே ஒரு புதிய உத்வேகம் கலந்த சந்தோஷம் இருக்கும்.

அதே சந்தோஷத்துடன் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். ‘நாச்சியார்’ படம் கொடுத்த நம்பிக்கையில் என் நடிப்பு பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். உங்கள் வாழ்த்தும் அரவணைப்பும் எப்போதும் இருக்குமளவுக்கு என்னுடைய அடுத்தடுத்த படங்கள் இருக்கும்’’ என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

- எஸ்