வாம்மா மின்னல்!



தமிழ் சினிமாவில் எப்போதுமே டீனேஜ் தேவதைகளுக்கு ரெட் கார்ப்பெட் வெல்கம்தான். அந்தக்கால ஸ்ரீதேவியில் தொடங்கி, இந்தக் கால இவானா வரைக்கும். ‘நாச்சியார்’ படத்தில் டீனேஜ் கர்ப்பிணிப் பெண்ணாக வயிற்றில் குழந்தையை சுமந்த இவானாவைப் பார்த்து, “அச்சச்சோ.... பாவம் இந்த புள்ளே” என்று உருகாத தமிழ் தாய்மாரே இல்லை.

“இப்போதான் ஸ்கூலில் இருந்து வர்றேன். டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வர்றேண்ணா” என்று யூனிஃபார்மில் பட்டாம்பூச்சி மாதிரி படபடத்தார். பத்தே நிமிடங்களில் பளிச்சென்று வந்து உட்கார்ந்தார்.“ஸ்கூல்லே ஃப்ரெண்ட்ஸெல்லாம் என்ன சொல்றாங்க?”

“அவங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியம். நம்ம பொண்ணா இதுன்னு டீச்சர்ஸெல்லாம்கூட பாராட்டுறாங்க.”
“அதென்ன பேரு இவானா?”

“என்னோட பேரு அலினா ஷாஜி. பாலா சார்தான் சினிமாவுக்காக ‘இவானா’ன்னு பேரு வெச்சிருக்காரு. அப்படின்னா கடவுள் தந்த வரம்னு அர்த்தமாம். இந்தப் பேரும் நல்லாதான் இருக்கு இல்லே?”
“சினிமா எப்படியிருக்கு?”

“நல்லாதான் இருக்கு. எனக்கு ஒண்ணும் புதுசில்லையே? ‘நாச்சியார்’ செய்யுறதுக்கு முன்னாடியே மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்’, ‘ராணி பத்மினி’ மாதிரி சில படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, அதுல எல்லாம் குழந்தை நட்சத்திரம்தான். இதுலேதான் பெரிய பொண்ணா முதன்முதலா வந்திருக்கேன்.”
“உங்க பின்னணி?”

“கேரளாவில் கோட்டயம் பக்கத்துலே சங்கனாஞ்சேரி. பிளஸ் டூ படிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா சாதிக், அம்மா டின்ஸி சாதிக் தவிர வீட்ல என் அக்காவும்,  என் தம்பியும்  இருக்கோம். நானும் என் தம்பியும்  ட்வின்ஸ். அவனும் இப்போ சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா மலையாளத்தில் நடிக்கிறான்.”
“பாலா கண்ணுலே எப்படி பட்டீங்க?”

“மலையாளத்தில் நான் நடிச்ச படங்கள்ல ஏதாவது பாலா சார் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியலை. ‘நாச்சியார்’ ஆடிஷனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. போயிருந்தேன். இதில் செலக்ட் ஆனது நானே எதிர்பாராத ஆச்சரியம். அப்போ சிலர் எங்ககிட்ட ‘பாலா சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... பயங்கரமா கோபப்படுவார்’னு சொல்லி பயமுறுத்தினாங்க.

ஸோ, முதல் நாள் கொஞ்சம் உதறலோடு தான்  ஷூட்டிங் போனேன். ஆனா, அங்கே போனதும் பயம் பறந்திடுச்சு.  நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டார். என் கேரக்டர் அரசி.... அவ எப்படி சிரிக்கணும், எப்படி பார்க்கணும், எப்படி பேசணும்னு ஒவ்வொரு ஸ்டெப்பையும் சொல்லிக் குடுத்தார். அதை அப்படியே கொண்டு வர ட்ரை பண்ணினேன். அவரோட இயக்கத்துலே இங்கே அறிமுகமானது பெரிய பாக்கியம்.”

“ஜோதிகா?”

“வாவ். முதல் நாள் ஸ்பாட்டுல ஜோதிகா மேமை சந்திச்சது பிரமிப்பா இருந்தது. அவங்களே என்னைக் கூப்பிட்டு அன்பா பேசினது ஸ்வீட் மொமென்ட். ரொம்ப ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. அவங்களோட யார் நடிச்சாலும், அவங்க நடிப்பையும் பார்த்து பாராட்டுவாங்க. ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க.”

“உங்க ஹீரோ ஜி.வி.பிரகாஷ்?”

“ஜி.வி.பிரகாஷ் சாரோட அவ்வளவா பேசினதில்ல. அவர் ரொம்பவே சைலன்ட்டா இருப்பார். ‘ஜி.வி.பிரகாஷ் அவரோட படங்கள்ல எப்பவும் செம ஜாலியா கலாட்டாவா இருப்பார்.... பாலா சார் படம்னால கலாய்ப்பு, ஜாலி எல்லாம் கம்மி பண்ணியிருக்கார்’னு எங்க யூனிட்ல யாரோ சொன்னாங்க. நான் ஹீரோயினாக அறிமுகமான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கறது சந்தோஷமா இருக்கு.... தொடர்ந்து தமிழ்ல படங்கள் பண்ணணும்னு விரும்புறேன்ணா!’’“பண்ணும்மா தங்கச்சி. நீ பெரிய ஆளா, ஜோதிகா மேம் மாதிரி வருவே.”

- மை.பாரதிராஜா