இது பேசப்படாதவர்களின் கதை!சினிமாவில் நமக்கு யார் யாரை தெரியும்?

ஹீரோ, ஹீரோயின், இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட சிலரைத்தான்.பாடல் காட்சிகளைப் பார்க்கும்படி செய்கிற க்ரூப் டான்ஸர்கள், ஒவ்வொரு காட்சிக்கும் அழுத்தத்தையும் நம்பகத்தன்மையையும் உருவாக்குகிற துணை நடிகர்கள் பற்றியெல்லாம் நமக்கு பெரிதாக எதுவும் தெரியாது.“அவர்களுடைய கதைதான் ‘கூத்தன்’ படமாக வருகிறது.

கொட்டிக் கிடக்கும் இவர்களது அனுபவங்களிலிருந்துதான் என் படத்துக்கான கதையைத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை ரத்தமும், சதையுமாக உணர்வு பூர்வமாக இப்படத்தில் காட்டியிருக்கிறேன்” என்று ஆரம்பித்த இயக்குநர் வெங்கி ஏ.எல் சட்டென்று உஷாராகி, “அதுக்குன்னு இது ஆர்ட் ஃபிலிம் மாதிரி இருந்துடாது.

துள்ளலான நடனமும் ரசிக்க வைக்கற  நகைச்சுவையும் இழையோட இப்போ உள்ள நம்ம யங்ஸ்டர்ஸுக்கு பிடிச்ச மாதிரியும் இருக்கும். ஆக்‌ஷுவலா, ‘கூத்தன்’னு டைட்டில் வைக்கறதுக்கு பதிலா கூட்டம்னு வச்சிருக்கலாம் போல.... படத்துல 38 ஆர்ட்டிஸ்ட்களுக்கு மேல நடிச்சிருக்காங்க. ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஒரு பெரிய கூட்டமே கலகலக்க வைக்கும்’’ என்றார். இதற்கு முன் ஐநூறு விளம்பரப் படங்கள், டி.வி.மெகா தொடர்கள் இயக்கியவர் இவர்.

“இது உங்க இரண்டாவது படம் இல்லையா?”

“ஆமாம். முதல் படமான ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் காஃபி’ல ரொம்பவே அழகான ஒரு காதலைச் சொல்லியிருந்தேன். இப்போ இயக்கியிருக்கும் படம் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும், இளைஞர்களுக்குமான படமா இருக்கணும்னு விரும்பினேன்.  இன்னிக்கு டி.வி.சேனல்கள், யூ-டியூப்னு எல்லா இடங்கள்லேயும் டான்ஸ் பிரதானமா இருக்கு.

டான்ஸ் ஷோ, ரியாலிட்டி ஷோன்னு எல்லாமே டான்ஸ்தான் களைகட்டுது. டான்ஸுக்கு இருக்கும் வரவேற்பினால்தான் கூத்தன் ரெடியாச்சு. ஆடல் நாயகன் சிவபெருமானின் பெயர்தான் கூத்தன். இன்னொரு விஷயம், சினிமாவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவங்கவங்க சொந்த ஊர்ல கூட ‘அவன் சினிமாவில் கூத்தடிக்கறான்’ என்றுதானே பேச்சுவழக்குல அவஙகளுக்கு மதிப்பு இருக்கு?”

“ஹீரோ - ஹீரோயின்... தெரிஞ்ச முகமில்லையே?”

“சப்ஜெக்ட் ஸ்ட்ராங்கா இருந்தா எந்த முகமா இருந்தாலும் ரசிப்பாங்க தானே..  ஹீரோ ராஜ்குமார், ஹீரோயின்கள் ஸ்ரீஜிதா, சோனல், ஹீரா இவங்கதான் புதுமுகங்களே தவிர  படத்துல பாக்யராஜ், ஊர்வசி, பிரபுதேவாவின் தம்பி நாகேந்திரபிரசாத், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, பழைய வில்லன் நடிகர் அழகு, ஜூனியர் பாலையானு தெரிஞ்ச முகங்கள் எக்கச்சக்கம் பேர் இருக்காங்க. க்ரூப் டான்ஸராக இருக்கும் சாதாரண ஒரு இளைஞன், சர்வதேச அளவிலான டான்ஸ் புரோக்ராமில்  பங்கேற்று ஜெயிக்கிறான் என்பதுதான் படத்தோட ஒன்லைன்  ஸ்டோரி.  காமெடியும் எமோஷனுமான ஸ்கிரிப்ட் கலகலக்கும்.

துணைநடிகர்கள் ஒவ்வொருவரின் கேரக்டரிலும் போற போக்கில் சின்ன மெசேஜ் இருக்கும். சிலரின் கதையைக் கேட்டிருக்கேன். இயக்குநராகும் ஆசையில் சென்னை வந்து ஆட்டோ டிரைவரா மாறியிருக்காங்க, சிலர் காஸ்ட்யூம் டிசைனரா வர ட்ரை பண்ணி இன்னமும் டெய்லரா இருக்கறவங்களையும் கேள்விப்பட்டிருக்கேன். இப்படி டச்சிங்கான விஷயங்களும் இருக்கு.

இந்தக் கதை ரெடியானதும், புரொட்யூசரும், ஹீரோவும் ஈஸியா கிடைச்சிட்டாங்க. ஹீரோ டான்ஸர் என்பதால், வெஸ்டர்ன், க்ளாஸிக், ஃபோக்னு வெரைட்டி டான்ஸ் தெரிஞ்ச பையனா இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சோம். அதே தகுதிகளோடு வந்து நின்னார் புதுமுகம் ராஜ்குமார். அவர் இந்தப் படத்  தயாரிப்பாளர் நீல்கிரீஸ் ட்ரீம் முருகன் சாரோட பையன்னு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷமாகிடுச்சு. என்ஜினியரிங் முடிச்சிட்டு, டான்ஸ், ஃபைட்னு கத்துக்கிட்டு நடிக்க வந்திருக்கார்.

இதுல வர்ற மூணு ஹீரோயின்களையும் ஆடிஷன் வச்சு செலக்ட் பண்ணினோம். இதுல ஸ்ரீஜிதா மும்பை பொண்ணு. இந்தியில சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. சோனல் இந்தூர் பொண்ணு. இன்னொரு பொண்ணு ஹீரா, கோலாலம்பூர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். இவங்க எல்லாருமே டான்ஸ்ல பிச்சு உதறினாலும், ஹீரோ உள்பட அத்தனை பேருக்கும்  ஒன்றரை மாசம் ஒர்க்‌ஷாப் கொடுத்து ரிகர்சல் எடுத்த பிறகே ஷூட் போனோம்.”
“பாக்யராஜ் - ஊர்வசி காம்பினேஷனா? இன்னொரு ‘முந்தானை முடிச்சு’ கெமிஸ்ட் ரியை எதிர்பார்க்கலாமா?”

“நோ.. நோ... அவங்க ரெண்டு பேரும் இதுல ஜோடி கிடையாது. பாக்யராஜ் சார் கேமியோ ரோல்தான் பண்ணியிருக்கார். ஊர்வசி மேம் துணை நடிகையா நடிக்கிறாங்க. அவங்க கேரக்டர் பெயரே ‘32 டேக் கலையரசி’. அவங்க நடிச்சா படம் ஓடிடும். ஆனா, அவங்க நடிச்சா 32வது டேக்தான் ஓகே ஆகும். அப்படி ஒரு காமெடி கேரக்டர்ல மேம் கலக்கியிருக்காங்க.

‘இந்தப் பாருங்க வெங்கி... நான் இவ்ளோ படம் பண்ணியிருக்கேன். ஆனா, இப்படி ஒரு கேரக்டர் பண்ணினதில்லைப்பா’னு அவங்க  சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.ஸ்பாட்டுல அவங்க புதுமுகங்களுக்கு நடிப்பு பத்தி நிறைய விஷயங்கள் கத்துக் குடுத்தாங்க. அதேமாதிரி நாகேந்திர பிரசாத், இதுல வில்லனா வர்றார். ‘இந்தப் படத்துக்காக அவர்கிட்ட கேட்டதும், வில்லனா எல்லாம் நடிக்க முடியாது’னு முதல்ல மறுத்திட்டார். அப்புறம் முழுக்கதையையும் கேட்டு இம்ப்ரஸாகி உள்ளே வந்தார். இயல்பாகவே அவர் டான்ஸர்ங்கறதால பிச்சு உதறியிருக்கார்.” 
“டெக்னீஷியன்ஸ்?”

“இதில் டெக்னீஷியன்கள் பலரும் சினிமாவுக்கு புதுசுனாலும் ஏற்கெனவே விளம்பரப் படங்கள், சீரியல்கள்ல வேலை பார்த்தவங்கதான். ஒளிப்பதிவாளரா அறிமுகமாகும் மாட்ஸ் அப்படி ஒர்க் பண்ணினவர்தான். கன்னடத்தில் ஆறேழு படங்கள், இங்கே ஒரு சில தமிழ்ப்படங்களுக்கு இசையமைச்ச பாலாஜி இசையமைக்கறார்.

அவரது மியூசிக் படத்திற்கு பெரிய பலம். சினிமா டான்ஸ், வெஸ்டர்ன், கிளாஸிக்னு எல்லா வெரைட்டியிலும் பாடல்கள் கொடுத்திருக்கார். பாடல்களை ஏ.எம்.ரத்னம் சார் மருமகள் ஐஸ்வர்யா, ரம்யா நம்பீசன், டி.ஆர்...னு நிறைய பேர் பாடியிருக்காங்க. ஆர்ட் டைரக்டர் ஆனந்த், செட் பேசப்படும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் வசிக்கும் ‘ஃபிலிம் நகர் காலனி’ செட் பிரமாதமா பண்ணியிருக்கார். ரொம்பவே சின்ன பட்ஜெட் படமாகத்தான் இந்தப் படத்தை ஆரம்பிச்சோம்.

‘இந்தக் கேரக்டருக்கு பாக்யராஜ் இருந்தா நல்லா இருக்குமே’னு தயாரிப்பாளர் முருகன் சார்கிட்ட சும்மா ஆலோசனைதான் சொல்லுவேன். ‘அவரையே கமிட் பண்ணிடுவோம்’பார். இப்படி கேட்ட விஷயங்கள் அத்தனையையும் கொடுத்திருக்கார். பாலிவுட் படங்களுக்கு கிராஃபிக்ஸ் ஒர்க் பண்ணின பெரிய நிறுவனம், இதற்கும் கிராஃபிக்ஸ் ஒர்க் பண்ணியிருக்காங்க. தன் சுக துக்கங்களை மறந்து மக்களை சிரிக்கவைக்கும் கலைஞர்களுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் பண்ண நினைச்சிருக்கோம்.”

- மை.பாரதிராஜா