ஆல்-இன்-ஆல் சத்யமூர்த்தி!நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் வி.சத்யமூர்த்தி இப்போது வினியோகஸ்தராகவும் வலம் வருகிறார். ‘தப்பு தண்டா’ படத்தில் ஹீரோவாக நடித்ததுடன், கிளாப்போர்ட் புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் அந்தப் படத்தையும் தயாரித்தார்.

அதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மற்றும் விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக்  நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இப்போது ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தை தயாரித்து நடிக்கிறார். ஷூட்டிங் பரபரப்புக்கிடையே விரைவில் வெளிவரவுள்ள ‘கோலிசோடா -2’ படத்தை தமிழகம் முழுவதிலும் வெளியிடுகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த வி.சத்யமூர்த்தியை ஷாட் பிரேக்கில் மடக்கிப் பிடித்தோம்.

“நடிகராக இருந்த நீங்கள் விநியோகஸ்தராக எப்படி மாறினீர்கள்?”

“சினிமாவைப் பொறுத்தவரை நான் முதலில் ஒரு ரசிகன். அதன்பிறகுதான் நடிகன், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் போன்ற அடையாளங்கள். ‘கோலிசோடா-2’ மாதிரி படங்களைப் பார்க்கும்போது அந்தப் படங்கள் என்னைக் கவரும் பட்சத்தில் அந்தப் படங்களை வாங்குகிறேன். அப்படித்தான் சமீபத்தில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து...’ படத்தை வாங்கினேன்.

அந்தப் படம் விஜய்சேதுபதி கேரியரில் மிகவும் வித்தியாசமான படமாக அமைந்தது. எமலோக கான்செப்ட் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கதைக்களம். அந்த மாதிரி புதிய சிந்தனைகளுடன் வெளியாகும் படத்தை நாம் வரவேற்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் அந்தப் படத்தை வெளியிட்டேன். அதன் பிறகு என்னை வெகுவாகக் கவர்ந்த படம் ‘கோலிசோடா-2’.

அந்தப் படத்தை நான் வாங்க காரணம் அந்த டீம். விஜய் மில்டன் சார் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவருடைய டெக்னிக்கல் ஒர்க் அசத்தலாக இருக்கும். 5டி கேமரா மூலம் சினிமாவில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவருடைய  எல்லா படங்களும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும்.

அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு.கெளதம் வாசுதேவ் மேனன் சாரின்  குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும்  டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருந்தது. விஜய் மில்டன்  மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில்தான் ‘கோலிசோடா-2’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக படம் எனக்குப் பிடித்திருந்தது. ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கோலிசோடா-2’ படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும்  பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.”
“அடுத்து?”

“நிறைய விஷயம் செய்றேன். குறிப்பா ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறேன். இது ஹாரர் கலந்த காமெடி படம். முதன் முறையாக அனைத்து யூ-ட்யூப் நடிகர்கள் நடிக்கும் படமாக வெளிவரவுள்ளது. டெக்னீஷியன்ஸ் அனைவருக்கும் இருபது, இருபத்தி ஒண்ணு வயசுதான் இருக்கும். யூ-ட்யூப்ல பிரபலமாக இருக்கும் ‘எரும சாணி’, ‘ஸ்மைல் சேட்டை’, ‘மெட்ராஸ் சென்ட்ரல்’, ‘டெம்பிள் மங்கிஸ்’ போன்ற எல்லாக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ரமேஷ் வெங்கட் இயக்குகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.”
“நடிப்பு, தயாரிப்பு,  விநியோகம் இந்த மூன்றில் எந்த அடையாளம் அதிகமாகப் பிடித்திருக்கிறது?”

“சினிமா மீது உள்ள பேஷனால்தான் இந்தத் துறைக்கு வந்தேன். என்னுடைய பிசினஸ் சினிமா பிசினஸ். கதையைக் கேட்கும்போதே அதில் நான் நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு பண்ணிவிடுவேன். ஒரு படம் நல்லா இருக்கும். ஆனால் நான் முடிக்காத சூழல் வரும்போது அந்த மாதிரி படங்களைத் தயாரிக்கிறேன். எனக்குப் பொருத்தமான கதைகள் எது என்று தேர்வு செய்து நடிக்கிறேன்.

ஏன்னா, இன்றைய சமூக வலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றாற் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது சவாலான விஷயம்.

என்னைப் பொறுத்தவரை எந்த வேலை செய்தாலும் அந்த வேலையை நல்லா செய்யணும். நான் இப்போது தயாரிப்பாளராக இருப்பதற்கு காரணமே சினிமாவை நேசிப்பதுதான். ‘கோலிசோடா-2” படமாகட்டும் மற்ற படங்களாகட்டும் எனக்கும் அந்தப் படங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்தப் படங்களை நான் வாங்கி வெளியிடக் காரணமே நல்ல படங்கள் என்று தோன்றியது, அதனால் வாங்கி வெளியிடுகிறேன். அதையும் தாண்டி நல்ல நடிகனாக வர வேண்டும் என்பதுதான் என்னுடைய  ஆசை, லட்சியம் எல்லாமே.”

- சுரேஷ்ராஜா