ஸ்கெட்ச்



தட்டறோம்...தூக்கறோம்..!

வழக்கமாக சினிமாக்களில் அழுக்காக காட்டப்படும் வடசென்னையை அழகாக சித்தரிக்கும் படம். சேட்டுவிடம் இருக்கும் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை செய்கிறார். ஒரு  விபத்தில் அருள்தாஸின்  கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார் ஆர்.கே.சுரேஷ்.

ஆனால்-அருள்தாஸ், தன்னுடைய மச்சான் விக்ரமை முன்னிறுத்துகிறார். இதிலிருந்து விக்ரமுக்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் பகை ஏற்படுகிறது. அனைத்து வாகனங்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம்.

இதுபோல தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார். அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும்  பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க துடிக்கிறார்.

இந்த நிலையில்  விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருவராக  கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்? ஆர்.கே.சுரேஷுடனான விக்ரம் மோதல் என்ன ஆனது? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா என்பதை ஸ்கெட்ச் போட்டு விளக்குகிறார் இயக்குநர் .
ஜீவா என்கிற  ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையைக் கிளப்புகிறார்.

நாயகி தமன்னா, அழகையும் அளவான நடிப்பையும் கொட்டியிருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ், அருள்தாஸ், ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள் . சூரியின் காமெடி பலமாக அமைந்துள்ளது.

தமன் இசையில் விக்ரம் சொந்தக்குரலில் பாடியிருக்கும் ‘கனவே கனவே புதுக்கனவே’ மற்றும் ‘அடிச்சி புடிச்சி’, ‘சீனி சில்லாலே’, ‘தாடிக்காரா’ பாடல்கள் ரசிக்க  வைக்கின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவு வடசென்னைக்கு கவுரவம்  சேர்த்திருக்கிறது. வாகனம் தூக்குதல் என்கிற தாதாயிசத்தை அழகாகக் காட்டி சுவாரஸ்யமான படைப்பாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர்.