அபூர்வ சகோதரர்கள் கிரேஸி மோகன்



டைட்டில்ஸ் டாக் 50

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரை ‘தம்பி உடையான் மேடைக்கு அஞ்சான்’. என்னுடைய மேடை நாடகங்களில் என்னுடைய சகோதரன் மாதுபாலாஜிக்கு மிகப்பெரிய இடம் உண்டு.

என்னுடைய டயலாக் ஐம்பது சதவீதம் என்றால் அதை நூறு சதவீதமாக மாற்றுவது பாலாஜி. சினிமாவில் கவுண்டமணியின் டயலாக் டெலிவரி எப்படி பெஸ்ட்டாக இருக்குமோ, அதுபோல பாலாஜியின் ஸ்டேஜ் டெலிவரி அமோகமா இருக்கும்.

எனக்கு பூர்வீகம் கும்பகோணம். பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில். தாத்தா வெங்கடேஷ் ஐயங்கார். சுதந்திரா பார்ட்டியைச் சேர்ந்தவர். ராஜாஜியின் சிஷ்யன். அப்போ எங்க வீட்டுக்கு கலைஞர், அரங்கண்ணல், டி.கே.கபாலி போன்ற தலைவர்கள் எல்லாம் வருவார்களாம்.

தாத்தாவுக்கு அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிய நட்பு உண்டு. என் வாழ்க்கையில் இரண்டு தாத்தாக்களை மறக்க முடியாது. ஒருவர், என்னிடம் ஒரு தோழனைப் போல் பழகிய என்னுடைய தாத்தா. மற்றவர், கிரேஸி என்ற பட்டப் பெயரைக் கொடுத்த விகடன் தாத்தா.

அடுத்து, சகோதரன் மாதிரி என்னிடம் நட்பு பாராட்டிய என் நண்பன் சு.ரவி. சுரவின்னு படிச்சிடாதீங்க. ‘சு’, இனிஷியல். நானும் அவனும் திக் ஃப்ரெண்ட்ஸ். திக்குன்னா கறந்த பசும்பாலில் சுடச்சுட குடிக்கிற ஃபில்டர் காஃபி திக். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’னு சொல்லுவாங்க. எனக்கு எப்பழக்கமும் சு.ரவிதான். அவனால் தான் நான் பல தளங்களில் இயங்க முடிந்தது.

ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு மாது இருப்பாராம். என்னுடைய வெற்றிக்குப் பின்னாடி என் பாட்டி, அம்மா, மனைவி மற்றும் என் தம்பி என்று பல மாதுக்கள் இருக்கிறார்கள். இந்த மாதுக்கள்தான் சாதுவாக இருந்த என்னை சாதனையாளனாக்கினாங்க. சாதனையாளன்னு என்னை நானே தற்பெருமையா சொல்லிக்கறதா நினைக்கப்படாது. பத்திரிகையில் எழுதறப்போ அப்படித்தான் அங்கங்கே படைப்பாளி, சாதனையாளன்னு உப்பு, மிளகு தூவி எழுத வேண்டியிருக்கு.

என்னுடைய அப்பாவுக்கு ‘லா’ மீது மோகம் ஜாஸ்தி. அதன் காரணமாகவே மோகன் என்று பேர் வைத்தார். ஏன்னா மோகன் குமாரமங்கலம் மாதிரி நானும் சட்டம் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே எனக்கு மோகன் என்று பேர் வைத்தார். என் தம்பிக்கு பாலாஜி என்று பேர் வைத்தார். ‘பா’வுக்கும், ‘ஜி’க்கும் நடுவுலே ‘லா’ இருப்பதை கவனிங்க. என் தங்கைக்கு லீலா என்று பேர் வைத்தார். இதுலேயும் ‘லா’.

ஆனால்-காலத்தின் கோலம். பொரி சாப்பிட ரொம்பப் பிடிக்கும் என்பதால் நான் பொறியாளன் ஆனேன். என் உடன் பிறந்த அபூர்வ சகோதரன் மாது பாலாஜி பற்றியும், உடன் பிறவா அபூர்வ சகோதரன் கமலஹாசனைப் பற்றியும் சொல்வதாக இருந்தால் ‘வண்ணத்திரை’யில் ஸ்பெஷல் பதிப்பு போட வேண்டியிருக்கும். சில சம்பவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

சின்ன வயதிலிருந்து நானும் என் தம்பி மாதுவும் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை இப்போது வரை பாதுகாத்துக் கொண்டு வருகிறோம். சின்ன வயதில் நானும் மாதுவும் ஒண்ணா சாப்பிடுவோம், ஒண்ணா ஸ்கூல் போவோம், ஒண்ணா பாட்டியுடன் சேர்ந்து கூடத்துல படுப்போம். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி எங்களை ஒன்றாகப் பார்க்கலாம். இப்போது இருவருக்கும் தனித்தனி குடும்பம் இருந்தாலும் ஒரு தாய் பிள்ளைகளாக இப்போதும் ஒற்றுமையாக உள்ளோம்.

நாடகக் கலைஞர்களாக நாங்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளோம். எவ்வளவோ பொருள் ஈட்டியுள்ளோம். என்னுடைய எல்லா கணக்கு வழக்குகளையும் என் தம்பி மாதுதான் இப்பவும் பார்த்துக்கிறார். நமக்கு அவ்வளவு சமர்த்து பத்தாது. மேடைக்குத்தான் நான். மற்றபடி நாடகத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் மாதுவோட கைவண்ணம்தான்.

மாது எனக்காக நிறைய விட்டுக் கொடுத்திருக்கிறான். சினிமாவில் அவனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. ‘பஞ்சதந்திரம்’, ‘அவ்வை சண்முகி’ போன்ற படங்களில் கமலஹாசன் நடிக்க கூப்பிட்டார். சினிமாவுக்கு வந்துவிட்டால் டிராமா நின்னு போயிடும் என்பதற்காக நடிக்க வரவில்லை.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்  என்று சொல்வார்கள். எனக்கும் கமலஹாசனுக்கும் தொட்டில் பழக்கம் இல்லை என்றாலும் சுடுகாட்டுப் பழக்கம் இருக்கிறது. கமல் சாரை முதன் முதலாக சந்தித்தது ஒரு சுடுகாட்டுப் பகுதியில்.

கமல் சாருக்கு சந்திரஹாசன், சாருஹாசன் என்று இரண்டு சகோதரர்கள். மூன்றாவது சகோதரர் கிரேஸி மோகனஹாசன். அந்தளவுக்கு ஹாசன் ஃபேமிலியில் இந்த கிரேஸிக்கும் தனி இடம் உண்டு.‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நான் எழுதிய வசனங்களுக்கு அந்த சமயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

நண்பர் ஒருவர் விளம்பர நிறுவனம் நடத்தி வந்தார். அவருக்கு திருக்குறள் முனுசாமி நல்ல பழக்கம். என் நண்பர் இறக்கும் தருவாயில் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். எந்தக் கட்டத்திலும் திருக்குறளை மறந்துவிடாதே. முடிந்தால் திருக்குறளை ஞாபக்கப்படுத்தற மாதிரி வசனம் எழுது என்றார்.அதை மனதில் வைத்து ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வசனம் எழுதினேன்.

ஒருகாட்சியில் டெல்லி கணேஷ், குள்ள கமலைப் பார்த்து, ‘‘ரெண்டு அடி இருக்கிற நீயா என்னை கொல்லப் போறே’’ என்று டயலாக் பேசுவார். அதற்கு கமல், ‘‘திருக்குறள்கூட இரண்டு அடிதான் இருக்கும். அதன் கீர்த்தி எவ்வளவு பெருசு’’ என்று வசனம் பேசியிருப்பார். அந்த ஒரே டயலாக்கில் கமல் சாரை நான் இம்ப்ரஸ் பண்ண முடிந்தது. அந்தப் படம்தான் எனக்கு சினிமாவில் வசனகர்த்தாவுக்கான அங்கீகாரத்தை வழங்கியது.

கமலஹாசன் என்னை சினிமாவுக்கு அழைத்தபோது நான் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். சினிமாவுக்கு வருவதாக இருந்தால் வேலையை விட்டுவிட வேண்டும் என்றார். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே வேலையை விடுவதுதான். கமல் சார் சொன்னவுடன் கம்பெனிக்கு டாட்டா காட்டிவிட்டு வந்துவிட்டேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘தெனாலி’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘தசாவதாரம்’ உட்பட இருபத்தைந்து  படங்களுக்கு குறுகிய காலத்தில் கமல் சாருடன் வேலை பார்த்தேன்.

என்னுடைய உடன் பிறந்த சகோதரன் மாதுவாக இருந்தாலும் சரி, உடன் பிறவாத சகோதரன் கமலாக இருந்தாலும் சரி, இருவரும் நான் எழுதிய வசனங்களைக் காப்பாற்றுவார்கள். ஒரு வசனகர்த்தாவுக்கு இதைவிட வேறு என்ன  சந்தோஷம் இருக்க முடியும்? கமல், மாது பாலாஜி இருவரின் வசன உச்சரிப்புமே சிறப்பாக இருக்கும்.

சினிமாவில் காமெடி பண்ணுவது கஷ்டம். இமேஜ் உள்ள நடிகர்கள் இமேஜை விட்டு கீழே வந்தால்தான் காமெடி பண்ண முடியும். எனக்காக கமலஹாசன் இறங்கி வந்து நகைச்சுவை வேடங்களில் நடித்தார். அதே சமயம் அவருடைய வழக்கமான பரிசோதனைகள் மூலமும் தன் இமேஜைக் காப்பாற்றிக் கொண்டார்.

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒண்ணா இருக்க கத்துக்கணும், இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்’ என்பதெல்லாம் சான்றோர் மொழி. இந்த டெக்னாலஜி உலகத்திலும் நாங்க ஒன்றாக இருப்பது அபூர்வம். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நான் கற்றது வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

எதையுமே ஜாலியாக எடுத்துக் கொண்டால் நல்லதே நடக்கும். இந்த உலகத்தில் மரணத்தைத் தவிர எதுவுமே உறுதி இல்லை. மரணத்துக்குள்ளே நமக்குக் கிடைத்த வாய்ப்பை, வாழ்க்கையை சந்தோஷமாக வாழணும். இன்முகம் இன்னல் கொடுக்காது.

என் வீட்டு விசேஷங்கள் அனைத்திலும் கமலஹாசன் இருப்பார். பொதுவா கமல் சார் வெளி இடங்களில் சாப்பிடமாட்டார். என் வீட்டு விசேஷங்களில் கமல் சார் சாப்பிட்டு எங்களை குஷிப்படுத்துவார்.

சில சமயங்களில் நானும் கமல் சாரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் போது என் வீட்டில் டிராப் பண்ணிட்டு போவார். ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் பணிவும், துணிவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கவிஞர் சொல்லியிருக்கிறார். அந்தக் குணம் கமல் சாரிடம் கூடப் பிறந்தது.

‘ஹேராம்’, ‘தேவர்மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களில் நான் வேலை செய்யவில்லை. ஆனாலும் அந்தப் படங்கள் பற்றி என்னிடம் ஷேர் பண்ணுவார். சமீபத்தில் ‘விஸ்வரூபம்-2’ படத்தை ஸ்பெஷலாகக் காண்பித்தார். முதல் பாகத்தை மிஞ்சுமளவுக்கு படம் பிரமாதமா இருக்கு. கமல் சார் என் கூடப் பிறக்கவில்லை. ஆனால் இந்த அபூர்வ சகோதரன் வெற்றி பெறும்போதெல்லாம் நானே வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். ஒரு நாளில் ஒரு முறையாவது என்னிடம் பேசிவிடுவார். இது சினிமாவில் அபூர்வமான விஷயம்.

நான் ஆத்திகம். கமலஹாசன் நாத்திகம். நாங்கள் இணைந்தது அபூர்வம். தொப்புள் கொடி உறவு மாதிரி ஹாஸ்தீகம்தான் எங்களை இணைத்தது. என் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் உடன்பிறந்த சகோதரன் மாதுவுக்கும், உடன் பிறவா சகோதரன் கமலஹாசனுக்கும் நன்றி. அபூர்வ சகோதரர்கள் வாழ்க!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)