தாலி குத்துது... கழட்டி வைடி!ப்ளாஷ்பேக்



சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு சேனலில் நைட்ஷோவாக ‘எங்க சின்ன ராசா’ பார்த்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதே கிளுகிளுப்பை உண்டாக்கும் தன்மை வேறெந்த படத்துக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான்.

இவ்வளவு துல்லியமான விவரணைகள் கொண்ட காட்சிகளை அமைக்கும் இயக்குநர் ஒருவர் இனிமேல் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் பாக்யராஜ்.

பாக்யராஜின் சின்னம்மாவாக நடித்த சி.ஆர்.சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டேதான் இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை.

கிளைமேக்ஸ் ஜில்பான்ஸ் பாடலான ‘தென்பாண்டிச் சீமை ஓரமா’ ரசிகனை நிமிர வைக்கிறது. மியூசிக் சேனல்களில் அதிகமாக காணக்கிடைக்காத இந்தப் பாட்டுக்காகவே எப்போது வேண்டுமானாலும் முழுமையாக இந்தப் படத்தைப் பார்க்கலாம். பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.

நிறைய பேர் இந்தப் படத்துக்கு இசையமைத்தது இளையராஜா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக்காலத்தில் பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும் என்றொரு பொதுப்புத்தி நமக்கு.

‘எங்க சின்ன ராசா’வுக்கு இசையமைத்தவர்கள், இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர்- கணேஷ். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கொண்டச்சேவல்’ பாட்டின் டியூன், பிற்பாடு அனில்கபூர் நடித்த இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகத்தான் மரணமாஸ் ஹிட்டடித்தது.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் இப்படத்தை பார்க்கும்போது ராதாவின் இளமைக் கொந்தளிப்பைக் கண்டு வியந்து அசந்து போகிறார்கள். ‘தாலி குத்துது. கழட்டி வைடி’ என்று பாக்யராஜ் சொல்லுவதெல்லாம் அந்தக் காலத்தில் பெரிய புரட்சி. எனவேதான் பாக்யராஜ், எண்பதுகளின் பெண்களால் ‘ஐடியல் ஹஸ்பண்ட்’ ஐகானாக பார்க்கப்பட்டிருக்கிறார்.

வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இன்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதெல்லாம் அமர்க்களம். கிளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக்.

“யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா.” யதேச்சையாக ‘எங்க சின்ன ராசா’வை கூகுளில் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம்.

1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியைக் கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு.

1981ல் ஜிதேந்திரா - ஹேமமாலினி ஜோடியாக நடித்து ‘ஜோதி’யாக இந்தியிலும் வந்திருக்கிறது. நம்மாளு ‘எங்க சின்ன ராசா’வாக்கி எட்டுத்திக்கும் வெற்றி முரசிட்ட பிறகு மீண்டும் இந்தியில் அனில்கபூர், மாதுரி தீக்‌ஷித் நடிப்பில் ‘பேட்டா’வானது. ‘தக்கு தக்கு கர்னேலகா’ மார்பைத் தூக்கித் தூக்கி மாதுரி பாடும் பாட்டு பிரமாதமாக இருக்கும்.

தெலுங்கில் வெங்கடேஷ் - மீனா நடித்து ‘அப்பாய்காரு’, கன்னடத்தில் மீண்டும் ரவிச்சந்திரன் - மதுபாலா இணைந்து ‘அன்னய்யா’, கடைசியாக 2002ல் ‘சந்தன்’ என்று ஒரியாவிலும் இதே ஸ்க்ரிப்ட் தேயத் தேய ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாமே வெற்றிதான்.

ஒரே ஸ்க்ரிப்ட் எப்போது எந்த நடிகரை வைத்து எந்த வடிவில் எடுக்கப்பட்டாலும் ‘ஹிட்’டிக்கொண்டே இருந்திருக்கிறது என்பது இமாலய ஆச்சரியம். மறுபடியும் யாராவது இன்றைய வடிவில் ரீமேக்கினாலும் ஹிட்டு நிச்சயம்.

மிக சாதாரணமான ஒன்லைனரைக் கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால், மிகச் சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவைக் கண்டுபிடித்துவிடலாம். சென்டிமென்ட் + க்ரைம் + செக்ஸ்.

இந்தச் சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

- யுவகிருஷ்ணா