குலேபகாவலி



பலே பகாவலி!

சாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை  செய்யும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்கிறார்கள்.அப்பா அம்மாவை இழந்த நிலையில்   தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடமிருந்து  பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார்.

இதுபோல் பலரிடம் லாவகமாக பேசிக் காரை திருடி வருகிறார் ரேவதி.கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வரச் சொல்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்து கொண்ட ரேவதியும் அந்தக் கிராமத்திற்கு செல்கிறார்.இவர்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சத்யன், இந்தக் கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா? போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களைப் பிடித்தாரா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்..துறுதுறு நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் பிரபுதேவா. காதல், ஆக்‌ஷன், நடனம் என சகல ஏரியாவிலும் ரகளை செய்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவது என நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு  வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. டுபாக்கூர் சாமியாடியாக அவரது  நடவடிக்கைகள்  காமெடி கலந்த கலாட்டா. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனந்த் குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது. மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் இதம். காமெடியான கடத்தல் கதையை பரபரப்பு இல்லாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.