சூதாட்டத்தில் வீழ்ந்த தர்மர்கள்!



பிலிமாயணம் 23

திரைப்பட பத்திரிகையாளராவதற்கு முன்பு ஒரு கேபிள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்தேன். திரைப்படம் தொடர்பான டிரெய்லர்கள், பாடல்கள், காட்சிகள் ஒளிபரப்பிக் கொள்வதற்கான உரிமத்தை வாங்கித் தருவது அந்தப் பணியின் ஒரு பகுதி.

இதற்காக பல தயாரிப்பு கம்பெனிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த நேரம். அப்போது இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்க, ஒரு பெரிய இயக்குநர் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார் அந்த தயாரிப்பாளர்.

அவரின் அலுவலகமே தனி பங்களா போன்று இருக்கும். அந்தப் படத்தின் டிரெய்லர் கேசட்டும், ஒளிபரப்புவதற்கான அனுமதி கடிதமும் கேட்டு அவரைச் சந்திக்க பல நாட்கள் சென்றேன்.  வரவேற்பறையில் உள்ள ஷோபாவில் உட்கார்ந்திருப்பேன்.

அவர் தன் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு யார் யாருடனோ மணிக்கணக்கில் ேபசிக் கொண்டிருப்பார். பேசி முடித்துவிட்டு  அவர் வெளியில் வரும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்வேன்.“அவசரமா வெளியில் போறேன். நாளைக்கு வா தம்பி” என்று கூறிவிட்டு போய்விடுவார்.

தினசரி செல்வேன். எதற்காக வந்திருக்கிறேன் என்பதைக் கூடக் கேட்காமல் நாளை வரச் ெசால்வார். தினமும் அதே வரவேற்பறை, அதே ஷோபாவில் அமர்ந்து அவர் வருகைக்காகக் காத்திருப்பேன். கப்பல் மாதிரி அவர் கார் உள்ளே வரும்போதே எழுந்து நிற்பேன்.ஜீன்ஸ் பேண்டும், வெள்ளை சட்டையுமாய் கம்பீரமாக உள்ளே வருவார். ஒரு நாள் என்னைப் பார்த்து, என்ன விஷயம் என்றார். விஷயத்தைச் சொன்னேன். பார்க்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

ஒரு நாள் என்னைப் பார்த்து, “தம்பி அந்த கேபிள் டி.விதானே? டிரெய்லரெல்லாம் பர்மிஷன் லெட்டர் வாங்கித்தான் போடுவீங்க. ஆனா, படத்தை மட்டும் கேட்காமலேயே போட்டுருவீங்கல்ல..?” என்று ‘சுருக்’கென்று கேட்டுவிட்டு உள்ளே போனார்.சிறிது நேரம் சென்றபின் ஆபீஸ் பாய் வந்து, “சார் உங்களை நாளைக்கு வந்து பார்க்கச் சொன்னார்” என்று கூறினார்.

மறுநாள் சென்றபோது  அறைக்குள் அழைத்தார். அவர் டேபிளில் படத்தின் டிரெய்லர் கேசட், அனுமதிக் கடிதம் இருந்தன. கூடவே ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு காசோலையும் இருந்தது. எதிரில் உட்காரச் சொன்னார். காபி ெகாண்டு வரச் சொன்னார். கேபிள் டி.வி பற்றி நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் எல்லாவற்றையும் என் கையில் அள்ளித் தந்தார்.

“தம்பி, இந்த கேபிள் டி.வி பற்றி எனக்கு பெருசா ஐடியா எதுவும் இல்ல... என் படத்தை பெரிய இயக்குநர் இயக்குறாரு. பிரபலமான நடிகர்கள் நடிக்கிறாங்க. எனவே இந்தப் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. இருந்தாலும் இது உனக்காக. தினமும் சலிக்காம அலைஞ்ச பாரு அதுக்காக. அந்த தன்னம்பிக்கைக்காக எனது படத்தோட டிரெய்லர் போடுறதுக்கான கட்டணமா அஞ்சாயிரம் ரூபாய்க்கு செக் வச்சிருக்கேன்” என்றார்.  அந்தப்படம் ெவளிவந்து, இயக்குநரும், நடிகரும் தேசிய விருது வாங்கினார்கள்.

சமீபத்தில் சென்னை ரேஸ்கோர்ஸில் ஒரு சிறு பட்ஜெட் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். விழாவிற்கான உணவு தயாரிக்கப்பட்டு கீழ்த்தளத்திலிருந்து விழா நடக்கும் மூன்றாவது தளத்திற்கு லிஃப்ட்டில் எடுத்துச் செல்லும் பணி நடந்து கொண்டிருந்தது. நானும் அந்த லிஃப்ட்டில்தான் செல்ல வேண்டும். லிஃப்ட்டில் ஏறியதும், இரண்டு கையிலும் சமையல் பரிமாறும் பாத்திரங்களுடன் ஏறினார் ஒரு வயதான முதியவர்.

தளர்ந்துபோன உடம்பை சுருக்கம் நிறைந்த வெள்ளை வேட்டி சட்டையால் மூடியிருந்தார். “நான்தான் தம்பி இந்தப் படத்தோட எக்ஸ்கியூடிவ் புரொடியூசர். சின்ன படம்தானே, அதான் புரொடக்‌ஷன் பாய் வேலையையும் நானே பார்க்க வேண்டிருக்கு” என்றார். நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். இரண்டு தேசிய விருதுகள் படத்தின் தயாரிப்பாளர். பங்களா அலுவலகமும், கப்பல் காரும், கம்பீர நடையும் மனதில் ஒரு விநாடி தோன்றி மறைந்தது. பதில் ெசால்லத் தோன்றவில்லை.

சினிமா விழாக்களில் கடைசி வரிசையில், சினிமா காட்சிகளில் சுவரோர இருக்கையில், ஓட்டல் சமையல் அறையில், கேட்டரிங் நிறுவனத்தின் முதலாளியாய், பணியாளராய் இப்படி பல  இடங்களில் பெரிய படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்களை சந்தித்திருக்கிறேன். சினிமா சூதாட்டத்தில் தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்