350 படங்களில் நடன இயக்குனர், 400 படங்களில் குரூப் டான்ஸர் என்ற பலமான அனுபவத்துடன் இயக்குனராக மாறியுள்ளார் ராம் மஸ்தான். பிரபல நடன இயக்குனர்கள் சலீம், புலியூர் சரோஜாவிடம் சினிமா பயின்ற இவர் ஜெய் சாய் ராம் ஆர்.கே.மூவி இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘தலப்புள்ள’ படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.
“‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இடம் பெற்ற ‘போடா போடா புண்ணாக்கு...’ பாடல்தான் நான் நடனஇயக்குனராக அறிமுகமான பாடல். அதன் பிறகு 26 இளையராஜா படங்கள், 13 ராமராஜன் படங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் பணியாற்றி வருகிறேன். பாடலுக்கான சிச்சுவேஷனை மட்டும் கேட்காமல் முழு கதையையும் தெரிந்து கொண்டுதான் நடனம் அமைப்பேன். அந்த தாக்கம்தான் என்னை கதை எழுத தூண்டியது.
மனிதன் தன்னு டைய வாழ்க்கையில் எதை மறந்தாலும் மறக்கக் கூடாத இரண்டு விஷயங்கள் பெற்ற தாய், தன்னை நம்பி வரும் மனைவி. இந்த இரண்டு உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் இதில் இன்றைய மருமகள் நாளைய மாமியார் என்பதை மறந்து விடாமல் குடும்பத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லியுள்ளேன். கன்னடத்தில் பத்து படங்களில் நடித்த கிரண் நாயகனாக நடிக்கிறார். அவருடைய முறைப் பெண்ணாக தீபா நடிக்கிறார். சமூக சேவகியாக சினேயா நடிக்கிறார்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசை எப்படியிருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் தமிழ் மீது அதிக பற்றுள்ளவர். அந்த வகையில் படத்தின் ஐந்து பாடல்களையும் அவர் தான் எழுதியுள்ளார். ஆசிரியர் தினத்தை போற்றி எழுதப்பட்டுள்ள ‘உலகத்தில் தாய்மைக்கு பிறந்த நாள், உயிர் தந்த அன்னைக்கும் உகந்த நாள்...’ என்ற பாடல் ஹைலைட் டாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ராம் மஸ்தான்.
எஸ்.ஆர்