நடிகர் ஆன ஏசி மெக்கானிக்!



‘குரங்குபொம்மை’யில் பிக்பாக்கெட் கேரக்டரில் கலக்கி எடுத்தவர் கல்கி. முதல் படத்திலேயே ரசிகர்களிடையேயும் திரையுலகிலும் எக்கச்சக்கமான  பாராட்டுகளை அள்ளிக் குவித்துவரும் கல்கியிடம் பேட்டி வேண்டும் என்று வாட்ஸ் அப் பண்ணினோம். ட்ராபிக் நெரிசலிலும் கரெக்ட் டைமுக்கு  ஆஜரானவரிடம் பேசினோம்.

“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?”

‘‘எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி பக்கத்துல உள்ள தொண்டைமானேந்தல் கிராமம். எங்க ஊருக்கு அவ்வளவா பஸ் வசதி கிடையாது. ஒரு நாளைக்கு  ரெண்டு மூணு பஸ் வந்தால் ஆச்சர்யம். அப்பா விவசாயி. ஒரு தம்பி. விஸ்காம் படிச்சிட்டு சினிமாவில் சேர ஆசைப்பட்டேன். வீட்ல சம்மதிக்கலை.  படிச்ச உடனே வேலை கிடைக்கக்கூடிய மாதிரியான ஏ.சி.மெக்கானிக் கோர்ஸில் சேர்த்துவிட்டார்கள். விருப்பமில்லாமலேயே ஐடிஐ முடிச்சேன்.”

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஆனால், உண்மையில் சினிமாவில் நடிக்கவே வந்தேன்னு சொல்லலாம். வயிற்றுப் பிழைப்புக்காக எனக்கு  தெரிந்த ஏசி மெக்கானிக் வேலை பார்த்தேன். வேலை நேரம் முடிஞ்சதும் சினிமா வாய்ப்பு தேடுவேன். வாய்ப்பு சுத்தமா கிடைக்கவில்லை. அதனாலே  நடிப்பிலிருந்து என்னுடைய இன்டரெஸ்ட்டை டைரக்‌ஷனுக்கு மாத்திக்கிட்டேன்.”

“நீங்கள் அமீரிடம் வேலை பார்த்தீர்களாமே?”

“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடின எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டால் நடிக்கும் வாய்ப்பு எளிதாகிவிடும்னு  நெனைச்சேன். ஒரு நண்பர் இயக்குநர் அமீரிடம் சேர்த்துவிட்டார். ‘பருத்திவீரன்’ ஷூட்டிங் டைம். கிட்டத்தட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்  முடிவாகிவிட்டதால் எனக்கு அமீர் சாரின் பர்சனல் அசிஸ்டென்ட்டா வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

க்ளாப் போர்டை கையில் பிடிக்கலைன்னாலும் அவரிடம் மூன்று வருடங்கள் டிஸ்கஷன், லொகேஷன்களில் வேலை பார்த்ததில் டைரக்‌ஷனைப் பற்றி  ஓரளவு தெரிந்து கொண்டேன். அமீர் சாரிடம் வேலை பார்த்த போதுதான் என்னால் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.”

“நடிகரா ‘குரங்கு பொம்மை’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?”

“அமீர் சாரிடம் இருந்தபோதுதான் இயக்குநர் நித்திலனின் பழக்கம். அவர் அப்போ விஸ்காம் படிச்சிக்கிட்டிருந்தார். படித்துக் கொண்டே  யாரிடமாவது உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்று  சேர்ந்தால் நிறைய சினிமா பேசுவோம்.

எங்கள் பேச்சில் நானா படேகர் முதல் வடிவேல் வரை வந்து போவார்கள். நித்திலன் இயக்கிய ‘புதிர்’, ‘பிம்பம்’, ‘புன்னகை வாங்கினால் கண்ணீர்  இலவசம்’ போன்ற குறும்படங்களில் நடித்ததோடு உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தேன்.
‘குரங்கு பொம்மை’யில் பாரதிராஜா, விதார்த், குமரவேல் ஆகியோருக்கு இணையான கேரக்டர் கொடுத்தார் நித்திலன். ஆரம்பத்தில் மிகப்பெரிய  ஜாம்பவான்களுக்கு மத்தியில் நடிக்க வேண்டும் என்ற அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சம் சக நடிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் காணாமல்  போய்விட்டது.”

“கேரக்டருக்காக ரிகர்சல் பார்த்தீங்களா?”

“பிக்கெட் கேரக்டர் எனக்கு முற்றிலும் புதுசு. அந்தக் கேரக்டருக்காக ஃபீல்ட் ஒர்க் பண்ணினேன். ஒரு நண்பர் மூலம் பிக்பாக்கெட்காரர்களின்  சகவாசம் கிடைத்தது. பிக்பாக்கெட்காரர்கள் நாம் நினைக்கிற மாதிரி இருக்கமாட்டார்கள். காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரி டியூக் பைக், கலரிங் ஹேர்,  ஹை-பை பழக்க வழக்கங்கள் என்று ஸ்டைலீஷாக இருப்பார்கள். போலீஸிடம் மாட்டினால் எப்படி தப்புவது என்று பக்காவாக ப்ளான்  வைத்திருக்கிறார்கள்.

அப்படியே போலீஸிடம் சிக்கினால் அடி, உதைக்கு பயப்படுவதில்லை. போலீஸிடம் மாட்டும்போது சயனைடு மாதிரி சில போதை மாத்திரைகளை  விழுங்கிவிடுகிறார்கள். அந்த எஃபெக்ட்டில் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்வார்களாம்.

பிக்பாக்கெட்காரர்கள் அதிகமாக பேராசைப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கான செலவுக்கு பணம் இருந்தால் போதும்.  அதிகபட்சம் ஒரு செயின், ஒரு போன் அவ்வளவுதான் அடிக்கிறார்கள். அப்படி ஒரு சில நாள்கள் அவர்களுடன் பழகி அவர்களின் நடை, உடை,  பாவனைகளை கற்றுக் கொண்டேன். ஒரு நாள் திடீர்னு தியரி முடிஞ்சிடுச்சி. ப்ராக்டிக்கல் க்ளாஸில் ஒரு ‘டெமோ’ காட்டுறோம், கூட வாங்க என்று  சொன்னார்கள். எதுக்கு வம்பு என்று அத்துடன் அங்கிருந்து ஒடி வந்துவிட்டேன்.”

“பாரதிராஜா என்ன சொன்னார்?”

“படத்தில் எனக்கும் பாரதிராஜா சாருக்கும் காம்பினேஷன் கிடையாது. ஸ்பாட்ல ஒரு அசிஸ்டென்டாத்தான் என்னை அவருக்கு தெரியும். சில சமயம்  எனக்கு முன்பாக நடித்துக்காட்டி இது ஓக்கேவா என்று ஆலோசனை கேட்பார். நான் தயங்கும்போது, என்னை பாரதிராஜாவாகப் பார்க்காதே, உன்  வேலையை சரியாகப் பார் என்று ஒரு உதவி இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அவரிடம் நிறைய விஷயங்களைக்  கற்றுக்கொண்டேன்.

படத்தைப் பார்த்தபிறகுதான் அவருக்கு நான் நடிச்சிருக்கிற விஷயமே தெரிந்து, என் காட்சிகளைப் பார்த்துவிட்டு ‘சூப்பர், யாருய்யா இவன்?’ என்று  இயக்குநரிடம் கேட்டாராம். படம் பார்த்துவிட்டு நித்திலனிடம் என்னைப் பற்றி விசாரிக்கவே உடனே நித்திலன் என்னை அவர் முன் கொண்டு போய்  நிறுத்தினார். என்னைக் கண்டதும் கட்டிப்பிடித்து பாராட்டியதோடு ஆன் தி ஸ்பாட்டில் அவருடைய டைரக்‌ஷனில் நடிக்க வாய்ப்பும் கொடுத்தார்.

பாரதிராஜாவிடம் பாராட்டு பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியம். படம் பார்த்துவிட்டு திரையுலகத்தைச் சேர்ந்த என் குருநாதர்  அமீர், ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன், வஸந்த், பாலாஜி  சக்திவேல், ராதாமோகன், ரவிமரியா போன்ற ஏராளமான இயக்குநர்கள்  பாராட்டினார்கள்.”

“சினிமாவில் கற்றது?”

“என் அனுபவத்தில் சினிமாவை உண்மையாக நேசித்தால் அது நம்மை கைவிடாது என்று ‘குரங்கு பொம்மை’ மூலம் தெரிந்துகொண்டேன். இவ்வளவு  பாராட்டுகளும் இன்னும் நல்லா பண்ணணும் என்ற ரெஸ்பான்ஸிபிலிட்டியை கொடுத்திருக்கிறது.”

“நீங்கள் காமெடியனா? கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா?”

“எனக்கு ரஜினி, கவுண்டமணி, வடிவேல் ஆகியோரின் காமெடி சென்ஸ் பிடிக்கும். எனக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். காமெடிக்கான  டைமிங் டயலாக் மட்டுமில்லாமல் அதற்கான பாடிலேங்வேஜும் என்னிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் காமெடியனாக நிலைக்கவே  ஆசைப்படுகிறேன்.”

“அடுத்து?”

“பாரதிராஜா படம், கரு.பழனியப்பன் படம், தனுஷ் படம் உள்பட அரை டஜன் படங்களில் கமிட்டாகியுள்ளேன்.”

“உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்?”

“எங்கள் ஊர் பக்கம் சுபா தியேட்டர் மிகவும் பிரபலம். சின்ன வயதில் அந்த தியேட்டரில் ‘தளபதி’ படம் பார்த்துள்ளேன். அப்போதுதான் ரஜினியை  முதன் முதலாக திரையில் பார்க்கிறேன். அதேபோல் தியேட்டரையும் வாழ்க்கையில் அப்போதுதான் பார்க்கிறேன். அப்போது தியேட்டர் கேன்டீனில்  வாங்கிய போண்டாவுக்குள் முட்டை இருந்தது.

அதுவும் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ரஜினி, தியேட்டர், முட்டை போண்டா இந்த மூன்றும் என் இளம் வயதில் என்னை வியப்பில்  ஆழ்த்தியவைகள். இன்று அதே சுபா தியேட்டரில் நான் நடித்த ‘குரங்கு பொம்மை’ ஓடும்போது வாழ்க்கையில் சின்னதா ஜெயித்துவிட்டதாக ஒரு  சந்தோஷம்.’’

- சுரேஷ்ராஜா

படம் உதவி : ஆண்டனி