பேராண்மை பொன்வண்ணன்



டைட்டில்ஸ் டாக் 35

ஆண்மை, பெண்மை என்பது மனித இனம் எப்போது படைக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே இருக்கிறது. இலக்கியங்களும் அதைத்தான் ஆண்டாண்டு  காலமாக சொல்லி வருகிறது. ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் ஒரு பாலியல் குறியீடு.ஆண்மை என்று சொல்லும் போது ஒரு ஆண்மகன்  வீரத்தோடு வாழும்போது அவன் ஆண்மகனாக பார்க்கப்படுகிறான். ஆண்மகனுக்கும் ஆண்மைக்கும் வித்தியாசம் இருக்கு.

பெண்மை என்று சொல்லும் போது ஒரு பெண் நளினமாக இருக்கும்போது அவள் பெண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறாள்.ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்கும் போது அது பாலியல் குறியீடு.ஆனால்-ஆண்மை, பெண்மை என்று சொல்லும் போது அது பாலியல் சார்ந்த  குணாதிச யமாக பார்க்கப்படுகிறது.

இரண்டு இனங்களுக்கும் பொதுவானதுதான் பேராண்மை. ஆண் மகன் என்பவன் தன் குணாதிசயத்தின்படி  வேட்டைக்குச் செல்வது, கடினமான வேலைகளைச் செய்யும்போது இந்த உலகம் அவனை ஆம்பளடா என்று கொண்டாடுகிறது.

ஆண்மை என்று சொல்லும்போது யாரும் செய்ய முடியாத விஷயங்கள், கூச்சப்பட்டு கோழைத்ததனத்துடன் யாரும் செய்ய முடியாத வேலையை  செய்யும்போது அவன்தாண்டா ஆம்பள என்று சொல்வார்கள். ஆனால், பேராண்மை என்பது சமூகம் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம். அது தனி  மனிதனுக்குள் வராது. தனி மனிதனுக்கு உண்டான பண்பாக பேராண்மையை சொல்லமுடியாது.

தனி மனிதன் எவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்தாலும் ஆம்பளை என்றுதான் சொல்வார்களே தவிர பேராண்மை என்று சொல்லமாட்டார்கள்.பேராண்மை என்பது மொழியைக் கடந்து, இனத்தைக் கடந்து, கலாச்சாரத்தைக் கடந்து, நாடுகளைக் கடந்து பார்க்கப்படுகிறது.

அப்படி என் அனுபவத்திலிருந்து சொல்வதாகயிருந்தால் தந்தை பெரியாரை பேராண்மை கொண்டவராக சொல்வேன். மற்ற ஆளுமைகள் வேறு  தளத்தில் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

சமூக மாற்றங்களுக்காக, சமூக விடுதலையை முன்னிறுத்தி போராடுவதும், போராடி ஜெயித்த பிறகும், காலங்கள் கடந்தும் அதே சிந்தனைகள்,  உணர்வுகள், கொள்கைகள் நீடித்திருப்பதுதான் பேராண்மை.

அந்த வகையில் பெரியார் என்கிற மாமனிதர் பேராண்மை யுள்ள மனிதர். அரசியல்,  சமூகம், தனி மனித வாழ்க்கை, சாதியம், மதக் கோட்பாடுகள், பெண் அடிமைத்தனம், பொருளாதாரம், நேர நிர்வாகம், அறிவாற்றல், மொழி  சீர்திருத்தம் என்று பல சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

ஒரு காரணத்துக்காக மட்டும் ஒருவர் பாராட்டப்பட்டால் அது அவருடைய ஆண்மைக்கு கிடைத்த பாராட்டு. சமூகம் சார்ந்து  பாராட்டப்படும்போதும், காலங்கள் கடந்த பிறகும் அந்தக் கொள்கைகளை சமூகம் ஏற்றுக் கொள்வதும், பின்பற்றுவதும்தான் உண்மையான  பேராண்மை.

பல நூற்றாண்டுகள் கடந்தாலும் பெரியாரின் தத்துவங்கள் நிலைத்து நிற்கும். அவருடைய கருத்துக்களை எடுத்து நாம் பயணம் செய்தால்  பேராண்மைக்குள் அடங்குவோம். பல ஆண்மைகளை உருவாக்குவது பேராண்மைக்குட்பட்டது.

பேராண்மை என்பது ஒருமுறை நிகழ்ந்து  முடிந்துவிடுவது அல்ல. அது ஒரு தொடர் இயக்கம். ஆனால், ஆண்மை என்பது ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் நின்றுவிடும். பேராண்மை கருத்தியல்  ரீதியாக பலரை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

அரசியல் காட்சிகள் காணாமல் போய்விடும். தலைவர்களின் புகழ் அழிந்துவிடும். ஆனால் பேராண்மை நிலைத்து நிற்கும். அண்ணா, கலைஞர்,  காமராஜர், ஓமந்தூரர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தனி மனித அளவில் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண்மைத்தனத்துக்குள்  வருகிறார்கள்.

நம்மாழ்வார், பெரியார், அப்துல்கலாம் போன்றவர்கள் எப்போதும் நிற்பார்கள். நூறு ஏக்கரில் விவசாயம் பார்ப்பது ஆண்மை. ஆனால் நம்மாழ்வார்  பேராண்மை. அவருடைய இயற்கை விவசாயக் கருத்துக்கள் காலங்கள் கடந்தும் பலரை இயங்கச் செய்துகொண்டிருக்கும்.

நாம் மனிதர்களின் பின்னாடி  நிற்கிறோமா அல்லது தத்துவத்தின் பின்னாடி நிற்கிறோமா என்பது முக்கியம். காரல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களும் மிகப் பெரிய பேராண்மை.  அன்னை தெரசா ஒரு பேராண்மை. மக்கள் மனதில் அன்பை விதைத்தவர். கருணையோடு ஒரு விஷயம் செய்யும்போது அங்கு அன்னை தெரசா வந்து  நிற்பார்.

ஆதாம் ஏவாள் பேராண்மை. ஒரு ஆணுக்கு பெண் மீதும், ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு ஏற்படும் போது ஆதாம், ஏவாள் பேராண்மையாக  வந்து நிற்பார்கள். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேராண்மை. ஹிட்லர் ஒரு பேராண்மை. சர்வாதிகாரம் என்று வரும்போது ஹிட்லரை  நினைக்காமல் இருக்கமுடியாது. எதை செய்யக்கூடாது என்பதற்கு அவர் உதாரணம்.

நபர்களைத் தேர்ந்தெடுக்காமல், கொள்கைகளை தேர்ந்தேடுக்க வேண்டும். என்ன கொடுமை என்றால் ஆண்மையை செக்ஸுடன்  இணைத்துவிட்டார்கள். குழந்தை பெற்றெடுக்கத் தகுதியுள்ளவனை மருத்துவம் ஆண்மை உள்ளவன் என்று சொல்கிறது. கடாபி மாதிரி ஒருவர் நூறு  குழந்தையை பெற்றெடுப்பது பேராண்மை அல்ல. மீசை, உருவம் எப்போதும் ஆண்மையைக் குறிக்காது.

பேராண்மை ஆன்மிகத்துக்கும் பொருந்தும். நித்தியானந்தா போன்றவர்கள் பேராண்மை அல்ல. ஆன்மிகத்துக்கு  என்று ஒரு பேராண்மையைக்  கண்டுபிடிக்க முடியும். அப்படி உச்சபட்ச பேராண்மையைத் தெரிந்து கொண்டால்தான் அடிமட்டத்தில் இருக்கிறவர்களைத் தெரிந்து கொள்ளமுடியும்.  இல்லை என்றால் போலிகளைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மொத்தத்தில் தமிழகத்துக்கு இப்போது அரசியல் ரீதியாக ஒரு  பேராண்மை தேவைப்படுகிறது.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)