ஜனதா தியேட்டர் கோமதி பாட்டி



பிலிமாயணம் 8

அப்போது நான் செங்கோட்டை ஆதி திராவிடர் விடுதியில் தங்கி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். விடுதிக்கு எதிரில் ஜனதா தியேட்டர்.  தரை டிக்கெட் 25 காசு, பெஞ்ச் டிக்கெட் 40 காசு, மேல் பெஞ்சு டிக்கெட் 60 காசு, நாற்காலி ஒரு ரூபாய்.

இதுதான் கட்டணம். இதைக்கூட கொடுத்து  பார்க்க முடியாதவர்கள், அல்லது டிக்கெட் கிடைக்காதவர்கள் தியேட்டரின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள குட்டிச்சுவர் மீது அமர்ந்து திருட்டு சினிமா  பார்த்த கதையை முன்பு கூறியிருந்தேன்.

பள்ளி முடிந்து விடுதிக்கு வந்தால் எனக்கு ஜனதா தியேட்டர்தான் புகலிடம். அந்த வளாகத்தையே சுற்றிச் சுற்றி வருவேன். சுவரில் ஏறி அமர்ந்து  திருட்டு சினிமா பார்ப்பேன். அல்லது கேட்டுக்கு அடியில் புகுந்து தியேட்டருக்குள் புகுந்து பார்ப்பேன்.

சில நாளில் மாட்டிக் கொண்டு  அடிவாங்கியிருக்கிறேன். இதனால் நிரந்தரமாக ஜனதா தியேட்டரில் படம் பார்க்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்தத் தியேட்டரை கூட்டி ெபருக்கி சுத்தம் செய்கிற கோமதி பாட்டி அறிமுகமானார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பேச்சுக் கொடுத்து பழகினேன். ஒரு நாள் என் ஆசையைச் சொன்னேன். எனக்கு தினமும் சினிமா பார்க்கணும்;  அதுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டேன்.“ஏல இதுக்கு போயா இம்புட்டு யோசிக்கிற.

நான் சொல்ற மாதிரி செய். ஸ்கூல் விட்டு நேரா இங்க  வந்துடு. நான் தியேட்டர் கூட்டும்போது என்கிட்ட வந்து நின்னுக்க. முடிஞ்சா இந்தக் கிழவிக்கு ஒத்தாசை பண்ணு. யாராவது கேட்டா என் பேரன்னு  சொல்லிக்கிறேன். படத்த பார்த்துட்டு போ” என்றார்.

திடீரென நினைவு வந்தவராக, “ஏலே.. தினமும் படம் பார்க்கிறதுக்கு ஹாஸ்டல்லே எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்றார்.“அது ஒரு திறந்த மடம் பாட்டி” என்றேன்.அன்று முதல் ஜனதா தியேட்டரில் பகுதிநேர துப்புரவுப் பணியாளர் ஆனேன். வாரத்துக்கு ஒரு படம்  மாற்றுவார்கள்.

சில வாரம் இரண்டு படங்கள் போடுவார்கள். ஒரு வருடம் இப்படியாக ஜனதா தியேட்டரில் சினிமா வாழ்க்கை கழிந்தது. இந்தக்  காலகட்டத்தில் நான் அதிகம் பார்த்தது ‘அன்னக்கிளி’. ஆறு வாரங்கள் ஓடியது. பல நாட்கள் திரைக்கு அருகில் உள்ள சின்ன மேடையில் படுத்துக்  கொண்டே பார்ப்பேன். அப்படியே தூங்கியும் விடுவேன்.

ஒரு வருடம்தான் விடுதி வாழ்க்கை. விடுதி வாழ்க்கை ஒத்துவராமல் மீண்டும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்க ஏற்பாடானது. கிளம்புவதற்கு முதல் நாள்  கோமதி பாட்டியைப் பார்த்துச் சொல்லிவிட்டு வரலாம் என்று சென்றேன். ஊருக்கு செல்ல மனசே இல்லாமல் பெரும் கவலையில் இருந்தேன். இனி  தினமும் சினிமா பார்க்க முடியாதே என்ற பெரும் கவலை முகத்தில் இருந்தது. என்னைப் பார்த்த உடனேயே கோமதி பாட்டி கண்டுபிடித்து விட்டாள்.
“என்னடே கப்பலே கவுந்த மாதிரி இருக்கீரு.

நாளைக்கு ‘நீதிக்கு தலைவணங்கு’ எம்.ஜி.ஆர் படம் போடுறான். நானே இருவது தடவை பார்த்திருக்கேன். அதுல எம்.ஜி.ஆரு பைக் ஓட்டுவாரு பாரு.  அசந்துடுவடே” என்றார்.எனக்கு உற்சாகம் வரவில்லை.“இல்ல பாட்டி. நாளைக்கு நான் ஊருக்கு போறேன். இனிமே இங்க வரமாட்டேன்” என்றேன்.நான் எதிர்பாராத வகையில் கோமதி பாட்டி முகத்தில் புன்னகை.

அருகில் வந்து என் கன்னத்தை தடவிக்கொண்டே சொன்னார்.
“நல்ல விஷயந்தான்லே இது. இந்தத் தியேட்டர் ஒரு போதை. இதுல விழுந்தா எந்திரிக்க முடியாது. நாப்பது வருஷத்துக்கு முன்னால நான் விழுந்தேன்  இன் னும் எந்திரிக்க முடியல” என்றார். நான் அதுவரை பார்த்திராத கோமதி பாட்டியை அன்று பார்த்தேன். நான் மவுனமாக இருக்க, பாட்டி  தொடர்ந்தார்.

“இந்தத் தியேட்டர் கட்டின புதுசுல நான் இளவயசு பொண்ணு. எல்லா புள்ளையளுவளும் பள்ளிக்கூடத்துக்கு போறப்போ நான் இந்தத் தியேட்டருக்கு  வந்தேன். சினிமான்னா பைத்தியமா திரிஞ்சேன்.

வீட்டுல காசு திருடி படம் பார்க்க வந்தேன். நான் அடிக்கடி வர்றத பார்த்துட்டு ஆபரேட்டரா  இருந்த பாலமுருகன் எங்கிட்ட அன்பா பழகுனாரு. காசு இல்லாமலே படம் பார்க்க வச்சாரு. கூட்டம் அதிகமா இருந்தா கேபின் ரூமில இருந்து  பார்ப்பேன். இந்தப் பழக்கம் அப்புறம் வேற மாதிரி ஆச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கொஞ்ச காலம் அவரோட சந்தோஷமா வாழ்ந்தேன்.

அப்புறம் காச நோய்ல படுத்த படுக்கையானவரு ஒரேயடியா படுத்துட்டாரு. வீட்டுச் செலவுக்கு காசு வேணுமே. அதான் புருஷன் ஆபரேட்டரா  இருந்த தியேட்டருக்கே ஆயா வேலை பார்க்க வந்துட்டேன். இந்தத் தியேட்டர்தான் எனக்கு எல்லாமுன்னு ஆகிப்போச்சு. இதுலேருந்து நானே  நினைச்சாலும் வெளியில போக முடியாது.

மனுசங்க வியர்வை நாற்றம், மூத்திர நாற்றத்தோட அவுங்களோட சிரிப்பு, சோகம், உற்சாகம் எல்லாமே எனக்கு பழகிப்போச்சு. இது இல்லேன்னா  எனக்கு பைத்தியம் பிடிச்சிடும். அதான் இது ஒரு போதைன்னு ெசான்னேன். நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போ ராசா....”கோமதி  பாட்டியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. முதல் ஷோவுக்கான கவுண்டர் ஓப்பன் பெல் கணீரென ஒலித்தது.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்