எனக்கும் இயக்குநருக்கும் கெமிஸ்ட்ரி கரெக்டா இருந்தது!



‘குரங்கு பொம்மை’யின் அழகு பொம்மை டெல்னா டேவிஸ். ‘49 ஓ’ படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி ‘குரங்கு பொம்மை’ மூலமாக ரசிகர்களை  கிறங்க வைத்திருக்கிறார் இந்த ஹோம்லி லுக் பியூட்டி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு கால்ஷீட்  டயரியில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு போட்டு வைத்திருப்பவரிடம் பேசினோம்.

“டெல்னாவோட ரிஷிமூலம்?”

“திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் பிறந்தேன். கலாபவன் மணி எங்க ஊர்க்காரர்தான். அப்பாவுக்கு டிம்பர் பிசினஸ். அம்மா ஹோம் மேக்கர்.  எனக்கு ஒரு தங்கச்சி. நியூட்ரீஷியன் கோர்ஸ் படிக்கிறாங்க. நான் பி.ஏ.ஆங்கில இலக்கியம் பைனல் இயர் பண்றேன். என்னைப் பற்றி சுருக்கமா  சொல்லணும்னா ரொம்ப மாடர்னும் இல்ல, ரொம்ப பட்டிக்காடும் இல்ல. இரண்டும் கலந்த மீடியம் கேர்ள்.”

“இலக்கியம் படிச்சிட்டு சினிமாவுக்கு எதுக்கு வந்தீங்க? நாவல் எழுதியிருக்கலாமே?”

“எனக்கு சினிமா பின்னணி சுத்தமா கிடையாது. ஓவர்நைட்டில் நடிகையாக மாறியவள். ஏன்னா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கனவிலும்  நினைத்ததில்லை. எனக்கு கிளாசிக்கல் நடனம் நல்லாத் தெரியும். ஒரு ஸ்டேஜ் ஷோ மூலம்தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கவுண்டமணி  சார் நடித்த ‘49 ஓ’ படம் தான் என்னுடைய முதல் சினிமா. மலையாளத்தில் மூன்று படங்கள் பண்ணியிருக்கிறேன்.

கடைசியா அங்கே நடித்த ‘ஹேப்பி வெட்டிங்’ நூறு நாள் ஓடியது. தமிழில்தான் நான் அழகு டால். மலையாளத்தில் நான் நடித்த மூன்று படங்களிலும்  வில்லி ரோல் பண்ணியிருக்கிறேன். அதுக்காக சொர்ணக்கா கேரக்டர் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணவேண்டாம். காதலித்து ஏமாற்றும் கேரக்டரில்  நடித்திருப்பேன்.”

“தமிழில் ‘குரங்கு பொம்மை’ அனுபவம்?”

“இந்தப் படத்துக்காக இயக்குநர் நித்திலன் என்னை முதலில் பார்த்தபோது நான் ரொம்ப ஒல்லியா இருப்பதாக சொல்லி என்னை நிராகரித்தார்.   ஆனால், அவருக்கு என் பெர்பாமன்ஸ் நூற்றி பத்து சதவீதம் பிடித்திருந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு நான் தேர்வு செய்யப்படவில்லை என்று  தெரிந்ததும், ‘பரவாயில்லை சார்.

உங்களுக்கு ஓ.கே என்றால் சேர்ந்து பண்ணுவோம். இல்லையென்றால் நாம் வாய்ப்பு இருந்தால் அடுத்த படத்தில் மீட் பண்ணுவோம்’ என்றேன்.  என்னுடைய இந்த வெளிப்படையான பேச்சு நித்திலனுக்கு பிடித்திருந்ததால் உடனே கமிட் பண்ணினார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் கேப்டன் ஆப் தி ஷிப் நித்திலன் மட்டுமே. அவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் பத்துப்  படங்கள் பண்ணிய இயக்குநர் போல் எல்லோரிடமும் வேலை வாங்கினார். மற்றவர்கள் விஷயத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால்  என்னுடைய விஷயத்தில் எனக்கும் நித்திலனுக்கும் கெமிஸ்ட்ரி கரெக்ட்டாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது எளிதாக இருந்தது.”

“பாரதிராஜா?”

“தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை. ஆனால் எனக்கு தமிழ் சினிமா பற்றி அவ்வளவாகத் தெரியாது. தமிழ் சினிமாவைப் பற்றி கொஞ்சம்  தெரிந்து வைத்திருந்தேன். அப்படித்தான் பாரதிராஜா சாரைப் பற்றியும் கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கோபக்காரர்  என்றெல்லாம் சிலர்  சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர். இந்த வயதிலும் அவருக்கு  பெண்களை மதிக்கத் தெரிந்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம். பாரதிராஜா சார் இந்தப் படத்துக்காக கேரவன்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். படப்பிடிப்பு  தளத்தில் இருந்த ரூமிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். அப்போது நான் அந்த அறைக்கு சென்றதும் உடனே அவர் அறையைவிட்டு வெளியே  வந்துவிட்டார். இவ்வளவுக்கும் அவருக்கு நான்தான் அந்தப் படத்தின் நாயகி என்று தெரியாது.”

“யாரெல்லாம் பாராட்டினாங்க?”

“இதுவரை நான் சிலபல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் அதிகமான பாராட்டு எனக்கு கிடைத்திருக்கிறது. நல்ல விமர்சனங்கள்  வந்துள்ளது. ‘குரங்கு பொம்மை’ டெல்னா என்று அழைக்குமளவுக்கு குட் நேம் கிடைத்திருக்கிறது. அதுதான் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு.”

“தமிழில் பொளந்து கட்டுறீங்களே... எப்படி?”

“அது எனக்கு இறைவன் கொடுத்த கிஃப்ட்டா நினைக்கிறேன். அந்நிய மொழி எதுவாக இருந்தாலும் எனக்கு ஒரு மாதம் போதும். உடனே அந்த  மொழியில் பேச ஆரம்பித்துவிடுவேன். தமிழ்ப் படங்களில் நடித்த போது தப்போ, சரியோ, யூனிட்ல உள்ளவர்களிடம் தமிழில்தான் பேசுவேன்.”

“படிக்கும்போதே நடிக்க வந்ததைப் பற்றி?”

“இறைவன் அருளால் எனக்கு சினிமாவில் நடிக்கக் கூடியளவுக்கு திறமை இருக்கு. அதை வீணடிக்க விரும்பவில்லை. ஒருவேளை படிப்பில் மட்டும்  கவனம் செலுத்தினால் எனக்குள் இருக்கும் திறமை வெளியே தெரியாமலேயே போய்விடும். காலம் கடந்த பிறகு என்னை கோலிவுட்டில்  கூப்பிட்டாங்க, பாலிவுட்ல கூப்பிட்டாங்க என்று புலம்புவது வேலைக்கு ஆகாது. அந்த வகையில் படிப்பும் நடிப்பும் தொடரும். அதுமட்டுமல்ல,   படிக்கும்போதே நடிக்க வந்ததால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கிறது. சினிமாவைப் பற்றி பலர் பலவிதமாக சொல்லலாம். ஆனால் எல்லாம் நாம்  எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.”

“ரோல்மாடல்?”

“நயன்தாராவை ரொம்பவே பிடிக்கும். அவர் க்ளாமர் ரோல் பண்ணுகிறார் என்பதற்காக கிடையாது. கடந்த பத்தாண்டுக்கும் மேலாக சினிமாவில்  நெம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதிக பணம், அதிக புகழ் என்று இருக்கும் அவரைப் போல் நானும் சினிமாவில் சாதிக்க  விரும்புகிறேன்.”

“அப்படின்னா, நயன்தாரா போல் க்ளாமர் பண்ணுவீங்களா?”

“கிளாமர் சினிமாவின் ஒரு அங்கம் என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லமாட்டேன். கிளாம்ர் ரோல் கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.  அதுக்குத்தானே வந்திருக்கிறேன். வேஷம் கட்டிய பிறகு அதைப் பண்ணமாட்டேன், இதைப் பண்ணமாட்டேன் என்று சொல்லக்கூடாது.”
“நிஜத்தில் டெல்னா எப்படி?”

 “என்னிடம் உண்மையாக இருந்தால் நானும் உண்மையாக இருப்பேன். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கேட்பேன். மூடி வைத்து பேசும் பழக்கம்  எனக்கு இல்லை. நான் கொஞ்சம் முன் கோபக்காரி.”

“அடுத்து?”

“மலையாளத்தில் ஒரு படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். தமிழ், தெலுங்கு இரண்டிலும் கதை கேட்டு ஓ.கே.பண்ணியுள்ளேன். சீக்கிரத்தில்  அறிவிப்புகள் வெளிவரும். ‘குரங்கு பொம்மை’ எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்துள்ளது. அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற  முடிவில் இருப்பதால் அவசரப்பட்டு படங்களை கமிட் பண்ணமாட்டேன். ஏன்னா, அப்படி ஆரம்பத்தில் சில படங்களை கமிட் பண்ணியதால் சில  கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது.”

- சுரேஷ்ராஜா