அடிவாங்குறவனும் வீரன்தான்! ‘கதாநாயகன்’ டெக்னிக்‘கதாநாயகன்’ படத்தின் மூலம் இயக்குநராக தன் முதல் கணக்கை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் முருகானந்தம். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படத்தில் சரக்குக்காக ராத்திரியில் அலையும் விஜயசேதுபதியை ‘வாங்க ஜி’ என்று நம்பிக்கையோடு அழைத்துப்போய் அலைக்கழிப்பாரே... அவரேதான் நம்ம முருகானந்தம். உச்சக்கட்ட பரபரப்பில் ‘கதாநாயகன்’ புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

‘‘படம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமா வந்திருக்கு. ஒரு இயக்குநராக நானும் ஹேப்பி. ஒரு தயாரிப்பாளரா ஹீரோ விஷ்ணு விஷாலும் ஹேப்பி. விஷ்ணு விஷாலுக்கு இந்தப் படம் மிகப் பெரிய கமர்ஷியல் படமா இருக்கும். காதல், காமெடி, சென்டிமென்ட் என்று இந்த பூஜை விடுமுறைக்கு மக்கள் குடும்பத்தோட தியேட்டருக்கு போய் படம் பார்க்க சரியான படமா வந்திருக்கு’’ ஹேப்பி மூடில் இருந்த முருகானந்தத்திடம் தொடர்ந்து பேசினோம்.

“உங்க ‘கதாநாயகன்’ எப்படி?”
“இது ஜனரஞ்கமான படம். விஷ்ணு இதற்கு முன் பண்ணிய ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நீர்ப் பறவை’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற படங்களில் கதையின் நாயகனா வந்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் விஷ்ணுவை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பார்க்கலாம். நாலு ஃபைட், நாலு டூயட், லவ் சீன்ஸ், காமெடி என்று பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணம் கச்சிதமாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இதுதான் காலம் காலமாக கமர்ஷியல் சினிமாவுக்கான பார்முலா வாக இருந்துள்ளது. அந்த பார்முலாவுக்குள் விஷ்ணு முதன் முறையா வந்திருக்கிறார்.”“கதை?”

“பணக்காரன், ஏழை என்று எல்லாருக்குள்ளும் ஒரு ஹீரோ தூங்கிட்டு இருக்கான். அவன் சில சமயங்களில் அமைதியா இருக்கான். அவனுக்குள் இருக்கும் ஹீரோ வெளியே வந்தால் அதன் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.
அடிக்கிறவன் மட்டும் வீரன் இல்லை, அடி வாங்குறவனும் வீரன்தான். அடி கொடுத்தாலும் அடி வாங்கினாலும் இரண்டுமே வீரம்தான். எதுவுமே பண்ணாமல் ஒதுங்கி இருக்கிறவன் சராசரி மனிதன்.

அப்படி தனக்கு வரும் பிரச்சனையில் ஹீரோ எப்படி பதிலடி கொடுக்கிறார் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.”
“விஷ்ணு?”“அவர் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ பண்ணிக்கிட்டிருந்தப்போ, நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று வாக்கு கொடுத்திருந்தார். அதே மாதிரி ஒரு நாள் கூப்பிட்டு கதை கேட்டு ஓக்கே பண்ணினார். 

படத்துல அரசாங்கத்தில் வேலை பாக்கிறவரா வர்றார். இந்தப் படத்தில் அவருடைய ஸ்டைல்  மாறியிருக்கும். நிறைய உழைப்பதற்கு விஷ்ணு தயாராக இருந்தார். விஷ்ணுவைப் பொறுத்தவரை எடுத்துக்கிட்ட வேலைக்கு உண்மையா இருக்கணும் என்று நினைக்கக் கூடியவர்.  ஹேண்டில் பண்ணுவதற்கு ஈஸியான மனிதர்.

அவருக்கும் எனக்கும் எந்த இடத்திலும் கருத்து வேறுபாடு வந்ததில்லை. ஒரு இயக்குநராக நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே செய்வார். அதைத் தாண்டி அவருக்கு சில ஐடியா இருந்தால், ஜி இப்படி பண்ணலாமா என்று கேட்பார். அவருடைய ஸ்டைலும் இருந்தால்தான் ஒரு கேரக்டர் முழுமை அடையும் என்பதால் அதை நானும் ஏற்றுக் கொள்வேன். எல்லா இடத்திலும் விஷ்ணுவின் இன்வால்வ்மென்ட் இருக்குமே தவிர தலையீடு இருக்காது.”

“கேத்தரின் தெரசா?”
“பிரமாதமான நடிகை. ஒரு குறையும் சொல்ல முடியாது. மெமரி பவர் அதிகம் உள்ளவர். கேத்தரினிடம் எனக்கு பிடித்த விஷயம் அவருடைய டெடிகேஷன். ஒரு பக்க டயலாக் கொடுத்தாலும் அரை மணி நேரம் டைம் வாங்கி ஒரு தப்பும் இல்லாமல் பின்னியெடுத்துவிடுவார். விஷ்ணு- கேத்தரின் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு. ஒரு ஹீரோயினா வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் படம் நல்லா வரணும் என்ற ஈடுபாடு இவரிடம் இருக்கும்.”

“வேற யாரெல்லாம் இருக்காங்க?”
“ஹீரோவுக்கு அம்மாவா சரண்யா பொன்வண்ணன் வர்றார். மனோபாலா, ஆனந்த்ராஜ், அருள் ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.  இவர்களுடன் ஏற்கனவே சில படங்களில் நான் இணைந்து நடித்ததால் எல்லாரிடமும் எளிதாக  வேலை வாங்க முடிந்தது. அதுமட்டுமில்ல, இவர்களிடம் என்ன எதிர்பார்ப்போமோ அதை நல்லாவே ஸ்கிரீனுக்கு கொண்டு வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.”
“விஷ்ணு - சூரி காம்பினேஷன்?”

“இரண்டு பேரும் இணைந்து ஐந்தாறு படங்கள் பண்ணியிருக்கிறார்கள். சக்சஸ்ஃபுல் காம்போதானே? வழக்கம் போல் இரண்டு பேரும் பண்ற அலப்பறை காமெடிக்கு உத்தரவாதமா இருக்கும். நல்ல நடிகர்களிடம் கிரியேட்டிவிட்டி இருக்கும். அது சூரியிடம் நிறையவே இருக்கு.”
 “தயாரிப்பாளர் விஷ்ணு எப்படி?”

“விஷ்ணுவிடம் நாற்பது டான்சர் வேண்டும் என்றால் முப்பதும் தரமாட்டார், அறுபதும் தரமாட்டார். நான் என்ன கேட்கிறேனோ அதை பக்காவா ஏற்பாடு பண்ணிக் கொடுப்பார்.  நான் கேட்கும் விஷயத்தில் நியாயம் இருந்தால் குறைக்கவும் செய்யாமல் கூட்டவும் செய்யாமல் சரியாக செய்து கொடுப்பார். விஷ்ணு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்துள்ளார்.”

“டெக்னிக்கல் டீம்?”
“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதுபோல் ஷான் ரோல்டனிடம் தனித்துவமான ஸ்டைலை பார்க்க முடிகிறது. பழமையும் புதுமையும் கலந்த மியூசிக் டைரக்டர். படத்துல நான்கு பாடல்கள். நான் ஒரு பாடலையும், ஷான் ஒரு பாடலையும், ரவி.ஜி ஒரு பாடலையும் எழுதியிருக்கிறோம்.

ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படம்  உள்பட அவருடைய திறமை ஒவ்வொரு படத்திலும் பேசப்பட்டுள்ளது. அவருடைய அனுபவம் படத்துக்கு பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது. என்னுடைய கனவை அவருடைய கை வண்ணத்தில் காட்டியிருக்கிறார். மொத்தத்தில் ஸ்பீட்+ குவாலிட்டி = லக்ஷ்மண் என்று சொல்லலாம். சிலபேரிடம் ஸ்பீட் இருக்கும். ஆனால் ஒர்க் ஸ்லோவா இருக்கும். சிலபேரிடம் குவாலிட்டி இருக்காது. ஸ்பீட் ஜெட் வேகத்தில் இருக்கும். ஆனால் லக்ஷ்மண்கிட்ட இரண்டுமே சரிசமமா இருக்கும்.”
“உங்களைப் பற்றி?”

“சொந்த ஊர் பரமக்குடி. சினிமா டைரக்டராகணும் என்ற கனவோடு சென்னைக்கு வந்தேன். இயக்குநர் விக்ரமன் சாரிடம் சில படங்களில் உதவியாளராக வேலை பார்த்தேன். வாய்ப்புகள் தேடும் போது நண்பர்கள் சிலர் ‘‘மணிவண்ணன் சார் மாதிரி இருக்கே, வந்து நடி’’ என்றார்கள். ஒரு பக்கம் அன்புக் கட்டளை, இன்னொரு பக்கம் வயிற்றுப் பிழைப்பு.

அப்படித்தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்தேன். அப்புறம் ‘மரகதநாணயம்’ படத்தில் ஆனந்த ராஜுக்கு வலது கையாகவும் நடித்தேன். தொடர்ந்து  ‘காஷ்மோரா’ படம் உள்பட சில படங்களில் நடித்தேன்.  இப்போது என்னுடைய முழு முதல் கவனம் டைரக்‌ஷனில் மட்டுமே. நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் மிஸ் பண்ணமாட்டேன்.”

- சுரேஷ்ராஜா