புரியாத புதிர்



விமர்சனம்

ஸ்கேண்டல் உலகம்!


மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும்  பழிவாங்கல் சங்கதிகளை அலசும் படம். ஸ்கேண்டல் வீடியோக்கள் குறித்து த்ரில்லராக உருவாகியிருக்கும் கதை.இசையமைப்பாளராகும் கனவுகளைச் சுமந்திருக்கும்  விஜய சேதுபதியும், இசை ஆசிரியையாகப் பணிபுரியும் காயத்ரியும் காதலர்கள்.

விஜய சேதுபதியின் போனுக்கு காயத்ரியின்  அந்தரங்க புகைப்படங்கள் வருகின்றன. அதிர்ச்சியடையும் அவர் என்ன செய்கிறார்? படத்தை எடுத்தது யார்? என்பதெல்லாம் புதிர் நிறைந்த காட்சிகளாக நகர்கின்றன.

காதல் காட்சிகளில் கவிதையாக ஜொலிக்கிறார் விஜய சேதுபதி. காதலியின் அந்தரங்கப் படத்தை சைபர் கிரைம் போலீஸிடம் கொடுக்கமுடியாமல் தவிப்பது, காரணமானவன் யார் என கண்டுபிடிக்கும் தேடல் என கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ‘வேணாம் மீரா,  காதலை சொல்லாத.... சொல்லாம இருக்கிறதுதான், அழகா இருக்கு’ எனும்போது வசீகரிக்கிறார்.

‘சுவாரஸ்யமா வாழ்றது மட்டும் வாழ்க்கை இல்ல... நிம்மதியாவும் வாழணும்... எதுக்காக செத்தான்னு அவங்க அப்பா அம்மா கேட்டா என்னன்னு சொல்லுவ?’ நண்பனைத் திட்டும்போது, ‘நண்பேன்டா’ என உயர்ந்து நிற்கிறார்.

படம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே தயாரானது, விஜய சேதுபதியின் உருவத்தில் தெரிகிறது.  கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் காயத்ரி. இசை ஆசிரியை கதாபாத்திரத்துக்கு இசைவான தேர்வு.

கொஞ்சூண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் மஹிமா நம்பியார்.
பின்னணி இசையில்  ஆஜர் கொடுக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.  திரில்லர் படத்துக்கான காட்சிக் கோணங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

குறைந்த அளவிலான கதாபாத்திரங்களுடன் நிறைவாக உருவாகியிருக்கிறது படம். ஆபாசப் படங்களைப் பார்ப்பது, அதை மற்றவர்களுக்கு பகிர்வது சமூக விரோத செயல் என்பதையும்,  இதுபோன்ற சம்பவங்கள் தங்களது குடும்பத்தில்  நடந்தால் மன வலி எப்படி இருக்கும் என்பதையும் திரில்லர் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.