குரங்கு பொம்மைநடிப்பில் சிகரம் எட்டும் இயக்குநர் இமயம்!

ஒரு சிலை, ஒரு பயணப்பை இரண்டும் சேர்த்து நடத்தும் நாடகம்தான் கதை. தஞ்சையிலிருந்து சிலை கடத்தும் தேனப்பன், விசுவாச ஊழியரும் நண்பருமான பாரதிராஜா மூலமாக ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள  சிலையைக் கொடுத்து சென்னையில் இருக்கும் தனது கூட்டாளி குமரவேல் வசம் ஒப்படைக்கச் சொல்கிறார்.

சுமந்துவரும் பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமலே சென்னைக்கு வருகிறார் பாரதிராஜா. சுலபமாக பணம் சம்பாதிக்கும் பேராசையில் இருக்கும் குமரவேல் என்ன செய்கிறார், பாரதிராஜா என்ன ஆகிறார் என்பது பகீர் பகீர். பாரதிராஜாவின் மகன் விதார்த், முதியவர் கிருஷ்ணமூர்த்தியின்  பணப்பையை  பறித்துச்செல்லும் திருடனிடமிருந்து அதை மீட்கிறார்.

அந்தப் பை  என்ன ஆகிறது என்பது இன்னொரு மிரட்டல்.குறைந்த அளவிலான காட்சிகள் மற்றும் மிகக்குறைவான வசனம் பேசி நடிக்கும் ஒருவரை கதாநாயகன் என்று சொல்லமுடியுமா? சொல்ல வைத்திருக்கிறார் பாரதிராஜா.

முதலாளியும் நண்பருமான தேனப்பன் செய்யும் கொலையைக் கண்டும், ரியாக்‌ஷன் காட்டாமல் தனது வேலையில் மூழ்கும் விசுவாசம், மகன் விதார்த்திடம் நேருக்கு நேர் பேச இயலாமல், மனைவி மூலமாக செலவுக்கு பணம் கொடுக்கிற பாசம், கொண்டுசெல்லும் பையில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்காத நேர்மை, குமரவேலுவிடம் காட்டும் குழைவு என ‘என் உயிர் நடிப்புதான் மக்களே’ என்று உணர்த்துகிறார்.

‘‘நீ என்னைக் கொல்லப்போறேன்னு தெரியுது. அதுக்கு முன்னால எம் பையன்கிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிறேனே’’ என்று குமரவேலுவிடம் தழுதழுக்கும்போது கலங்கவைக்கிறார்.

கொடுத்த கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார் விதார்த். படத்தின் நாயகன் என்கிற பந்தா துளியும் தெரியாத வகையில், அடக்கமான நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். அப்பாவின் நிலையறிந்து பதறும்போதும், பழிவாங்கும்போதும் அந்த சாதுவின் மிரட்டலில் காடு கொள்ளவில்லை.

பெண்கேட்டு வந்த இடத்தில் அப்பாவை அடித்த மாப்பிள்ளை விதார்த்தை புறக்கணிக்கும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார் டெல்னா டேவிஸ்.

அமைதியாக இருந்தபடி வில்லத்தனம் செய்கிறார் தயாரிப்பாளராக இருந்து நடிகராக உருவெடுத்திருக்கும் பி.எல்.தேனப்பன். குமரவேலுவை ட்ரேஸ் அவுட் செய்வது, நண்பன் பாரதிராஜாவுக்காகக் கலங்குவது என தேர்ந்த நடிகராக களம்  கண்டிருக்கிறார். தமிழ் சினிமா வரவு வைத்துக்கொள்ளவேண்டிய வில்லன்.

“அண்ணே, என்னண்ணே’’ என்று நெய்யொழுகப் பேசி, விஷம் கக்கும் கதாபாத்திரத்தில் குமரவேல். அப்பாவி கதாபாத்திரங்களில் திறமை காட்டியவர், வில்லனாகவும் வெளுத்து வாங்குகிறார்.‘‘என்னைப் பார்த்தா ஏவி.எம் சரவணனே கையைக் கட்டிக்கிட்டு நிப்பாரு’’ என்று பேசிக்கொண்டு திருட்டுத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் வரும் புதுமுகம் கல்கி, கவனம் ஈர்க்கிறார்.

பாரதிராஜாவின் மனைவியாக வரும் ரமா, நாயகியின் அப்பாவாக பாலாசிங், இயலாமையில் தவிக்கும் பெரியவராக கிருஷ்ணமூர்த்தி, ‘கஞ்ச’ கதாபாத்திரத்தில் வரும் கஞ்சா கருப்பு என அளந்துகட்டி நடிக்கின்றனர் அத்தனை கதாபாத்திரங்களும். குரங்கு பொம்மை வரையப்பட்ட அந்த மர்மப்பையும் ஒரு கதாபாத்திரமாகவே வலம் வருகிறது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா தேவையான உழைப்பை சிறப்பாக செய்திருக்கிறது. அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பு கனகச்சிதம்.தமிழ்த்திரைக்கு வந்திருக்கும் கன்னட இசையமைப்பாளர் பி.அஜனிஷ் லோகநாத்., பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்து, பின்னணியில் பின்னியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் வழக்கம்போல் இதயம் தொடுகின்றன.

‘‘பக்கத்துல நல்ல போலீஸ் ஸ்டேஷன் எதுவும் இருக்கா?’’, ‘‘ஹெல்மெட் இல்லையா?’’, ‘‘ஆங்... பைக் மட்டும்தான் இருந்தது,’’ ‘‘என்ன அண்ணே இருமுறீங்க, உடம்பு எதுவும் சரியில்லையா?”, ‘‘காலைல சிகரெட் பிடிச்சேன். இரும மறந்துட்டேன்’’ போன்ற மடோனே அஸ்வினின் வசனங்கள் ரசிக்கும்  வகைகள்.யாரிடமும் உதவியாளராக இல்லாமல், தேர்ந்த படைப்பாளியின் உருவாக்கமாக படத்தை இயக்கியிருக்கிறார் நித்திலன்.