ஓவியா மேலே தமிழ்நாட்டுக்கே கிரேஸ்!



விஷ்ணு விஷால் சொல்கிறார்

“என்னங்க கரம் மசாலா கமர்ஷியல் படங்களா நடிச்சுத் தள்ள ஆரம்பிச்சிட்டீங்க. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எஃபெக்டா?” என்கிற கேள்வியோடு விஷ்ணு விஷால் முன்பு நின்றோம்.“நானும் எவ்வளவு நாளைக்குதான் கருத்து சொல்லிக்கிட்டே இருக்கறது? நிறைய பாலிட்டிக்ஸ் பேசியாச்சு, கருத்து கந்தசாமியா கண்ணை உருட்டியாச்சு.

ஒரு சேஞ்ச் வேணுமே? அதுக்காக கதையம்சம் கொண்ட படங்கள் நடிக்க மாட்டேன்னு கிடையாது. இப்படியும் விஷ்ணு நடிப்பார்னு காட்டத்தான் கமர்ஷியல் படங்கள்” என்று சந்தோஷமாக அலுத்துக்கொண்டே ஆரம்பித்தார்.“அதிருக்கட்டும். நம்ம ‘கதாநாயகன்’ என்ன மெசேஜ் சொல்லப் போறாரு?”

“ஒரு மெசேஜ் மண்ணும் இல்லை. ஜாலியா குடும்பம் சூழ வாங்க. என்ஜாய் பண்ணுங்க. அவ்வளவுதான். பக்கா கமர்ஷியல் ரொமான்ஸ் படம்.”
“படத்துலே உங்க கேரக்டர்?”“என் பெயர் தம்பிதுரை, சூரி அண்ணா பெயர் அண்ணாதுரை. ஹீரோ எந்த பிரச்னைக்கும் போகக்கூடாதுன்னு நினைக்கிறான். அப்படி நினைச்சாலே பிரச்னை தேடி வருமே? அதுவும் காதல்ல பிரச்னை.

அது என்னங்கறதுதான் படத்தோட லைன். இயக்குநர் முருகானந்தம் நிறைய யோசிச்சு கலர்ஃபுல், மாஸ் சீன்களுக்காக மெனக்கெட்டு சிந்திச்சிருக்காரு. ரொம்ப நல்லா வந்துருக்கு படம்.”“கேத்தரினுக்கு இந்தப் படத்துலயும் ஹீரோவை மிரட்டுற ரோல் போலிருக்கே?”

“ஆமாம். எப்பவும் ஹீரோக்கள்தான் ஹீரோயின்களை மிரட்டுவாங்க. ஆனால், ‘மெட்ராஸ்’ படம் மாதிரியே இந்தப் படத்துலயும் கேத்தரின் பக்கா தைரியசாலி பொண்ணு. எதையுமே கொஞ்சம் தில்லா ஹேண்டில் பண்ணுவாங்க. இப்போ அதுதானே ட்ரெண்டு?”
“சிம்பு ஓபனிங் வாய்ஸ், விஜய சேதுபதி சிறப்புத் தோற்றம். ஏதோ பெரிய பிளான் மாதிரி இருக்கே?”

“படத்துக்கு முக்கியமான கரு அந்த ஹாஸ்பிடல் சீன் தான். விஜய சேதுபதிக்கு இந்தப் படத்துல கெஸ்ட் ரோல் கிடையாது. பத்து நிமிஷம் வருவாரு. ஆனாலும் அவர்தான் படத்தோட மையப்புள்ளி. இதை சும்மா யாரையோ வெச்சு நடிக்க வைக்க வேண்டாம்னுதான் விஜய சேதுபதி சார்கிட்ட கேட்டோம். அவரும் உடனே ஓக்கே சொல்லிட்டாரு.

அடுத்து படத்துக்குப் பெயரே ‘கதாநாயகன்’; அப்போ ஒரு கதாநாயகன் பேசி ஆரம்பிச்சாதானே சரியா இருக்கும். அதுவும் சிம்பு வாய்ஸ் கேட்ட உடனே எல்லாருக்கும் சுலபமா தெரியக்கூடிய பெக்யூலியர் வாய்ஸ்.இதெல்லாம் நிச்சயமா பிளான்தான்.”
“தயாரிப்பாளரா ஆயிட்டீங்களே?”

“முன்பெல்லாம் ஒரு கதை நல்லா இருக்கா, நம்ம கேரக்டர் நல்லா இருக்கான்னு பார்ப்பேன். இப்போ இயக்குநர் ஆரம்பிச்சு யூனிட் செட் வரைக்கும் பார்க்குறேன். இந்தக் கதை லாபம் கொடுக்குமான்னு பார்க்க வேண்டியதா இருக்கு. தயாரிப்பாளர் ஆனதுமே ரெஸ்பான்ஸிபிலிட்டி ஜாஸ்தி ஆயிடுச்சு.”“கெளதம் மேனன் தயாரிப்புலே நடிக்கறீங்க போலிருக்கு?”

“யெஸ். ‘பொன் ஒன்று கண்டேன்’, பக்கா ரொமான்டிக் படம். கௌதம் சார் தயாரிப்புன்னா சும்மாவா? க்ளாஸ் லுக்ல இருக்கும். நானே அந்தப் படத்துக்காக வெயிட் பண்றேன்.”“தமிழ் சினிமாவுல ஏகப்பட்ட சிங்கங்கள். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ எப்படி வித்யாசமான படமாகப் போகுது?”

“பெயர்தான் சிங்கம். ஆனால் பூனை மாதிரி கேரக்டர். என் படங்களிலேயே அதிக பட்ஜெட், பெரிய நடிகர்கள் கலர்ஃபுல் படம். ரெஜினா, ஓவியான்னு ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.”

“ஓவியா?”
“அவங்க மேலே இப்போ தமிழ்நாட்டுக்கே பெரிய கிரேஸ் வந்திருக்கு. எனக்கு நல்ல தோழி. இந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்குன்னு சொன்ன உடனே எந்தக் கேள்வியும் கேட்காம, ‘நீ சொல்லு, உனக்காக நடிக்கிறேன்’னு சொல்லிட்டு வந்தாங்க. ஆக்சுவலி அவங்க எப்படிப்பட்ட கேரக்டருன்னு எங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இப்போதான் மக்களுக்கு தெரிஞ்சுருக்கு.”

“உங்க நண்பர்கள் விஷால், ஆர்யாவெல்லாம் என்ன சொல்றாங்க?”
“அவங்களுக்கு ஏற்கனவே தயாரிப்பில் நல்ல அனுபவம் இருக்கு. ‘தயாரிப்பு பெரிய டாஸ்க், ரொம்ப ஜாக்கிரதையா இரு’ன்னு சொன்னாங்க. நானும் அந்த ஆலோசனைக்கு ஏற்பதான் முதல் படம் ரிஸ்க் எடுக்காம காமெடி கமர்ஷியலான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரிச்சேன். அந்தப் பட வெற்றி எனக்கு பெரிய ஆதரவும், ஊக்கமும் கொடுத்துச்சு.

விஷால், ஆர்யா பார்த்துட்டு சந்தோஷப்பட்டு பாராட்டினாங்க.”“உங்க பையன் ஆர்யன் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிட்டிருக்கான்?”

“ஆர்யன், என்னோட மகிழ்வான வாழ்க்கையின் அடையாளம். ஏழு மாச க்யூட் குட்டி. சமீபத்துல அவன் கூட நீச்சல், விளையாட்டுன்னு செலவிட நிறைய நேரம் கிடைச்சது. அப்போ எடுத்த செல்பிக்கள்தான் இப்போ நெட்டுலே வைரல் ஆகுது. எப்போதையும் விட இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

- ஷாலினி நியூட்டன்