தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்!பிலிமாயணம் 6

நள்ளிரவைத் தாண்டிய நேரம். சுற்றிலும் உள்ள பசுமைக் காடுகள் இருளில் கருத்து உறங்கிக் கிடக்கின்றன. சாமக்கொடையில் சாமி கும்பிட்டு விட்டு, அந்த சின்னஞ்சிறு இயந்திரத்தின் முன்னால் திரண்டிருந்தார்கள் நூற்றுக்கணக்கான வெள்ளந்தி கிராமவாசிகள். இரண்டு சக்கரங்கள் முன் சுழல ஒரேவிதமான சீராத ஒலியுடன் அந்த இயந்திரம் சுழன்றுகொண்டிருந்தது.

அது உமிழ்ந்த ஒளி சற்று தொலைவில் உள்ள வெள்ளைத் திரையில் ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. திரைக்கு எதிரில் பெரியவர்களும், பின்னால் குழந்தைகள், பெண்களும் இருந்தார்கள். சற்றும் கண்ணயராத மக்களை நோக்கி “தூங்காதே தம்பி தூங்காேத... சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” என்று பாடிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அவர் பாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இரண்டு அம்பாசிடர் கார்கள், திருநெல்வேலியிலிருந்து அந்தக் கிராமத்தை நோக்கி இருளைக் கிழித்துக் கொண்டு வந்துகொண்டிருந்தன. ஆட்சியில் அமர்ந்த ‘நாடோடி மன்னன்’, மக்களுக்கான சலுகைளை தன் மந்திரி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தார். வேகமாக வந்த கார்களின் ஹெட் லைட் வெளிச்சம் திரையின் மீது பட்டு படம் மங்கலாகத் தெரிந்தது. வெறும் வசனம் மட்டுமே கேட்டது. என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி.

படம் போட்டுக் கொண்டிருந்த ஆபரேட்டரையும், அவருக்கு துணைக்கு வந்தவர்களையும் பளீரென வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நான்கைந்து பேர் சரமாரியாக அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் புரொஜக்டர் வயரைக் கழற்றி எறிந்து விட்டு அதை அப்படியே தூக்கிக் கொண்டுபோய் காரில் வைத்தார்கள். மளமளவென எல்லாம் நடந்தது. நடப்பதைப் புரிந்து கொள்ள ஊர் மக்களுக்கு சில நிமிடங்கள் ஆனது.

நடப்பது தெரிந்ததும் அந்தக் காருக்கு முன்னால் வந்து நின்று கொண்டார்கள் அனைவரும். “ஏய் வழியை விடுங்கப்பா. இது எங்க படம். இந்தப் பய திருட்டுத்தனமா போட்டு பொழப்பு நடத்துறான். ஆயிரக்கணக்குலே காசு கொடுத்து வாங்கின நாங்க நாக்கை வழிச்சிக்கிட்டு போகணுமா. தள்ளுங்கப்பா. அப்புறம் விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடும்” என்றனர் வெள்ளை வேட்டிகள். கோபமாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, சமாதானப்படுத்தும் முகமாக ஊர்ப் பெரியவர் வந்தார்.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அண்ணாச்சி. இது யாரு படம், போடுறது யாருன்னெல்லாம் எங்களுக்குத் ெதரியாது. எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மகராசன் எம்.ஜி.ஆர் மட்டும்தான். அவரை முழுசா காட்டிட்டு எடுத்துட்டு போங்க. இவுங்க இங்க படம் போடத்தான் வந்திருக்காங்க. ஆனா எங்க பாதுகாப்புல இருக்காங்க.

விடியுறவரைக்கும் இவுங்கள பாதுகாக்க வேண்டியது எங்க கடமை, நீங்க பாட்டுக்கு கூட்டிட்டு போயி போற வழியில கோபத்துல ஏதாவது பண்ணிப்புட்டீங்கன்னா பழி எங்க மேல விழும். இப்ப நீங்க போங்க. நாங்க நாடோடி மன்னனை முழுசா பார்த்துக்குறோம். எங்க ெசால்றீங்களே அங்க வந்து இவுங்கள ஒப்படைக்கிறோம். இப்ப நீங்க போகலாம்” கனிவான குரலில் அவர் சொன்னாலும் அதில் தெறித்த கண்டிப்பு வந்தவர்களைத் திகைக்க வைத்தது.

அவர்கள் சட்டென்று ஒப்புக் கொள்ளவில்லை. “என்னவே உங்க ஊருக்குள்ள இருக்கோம், பயந்துடுவோம்னு நினைச்சு பேசுறீங்களா?” என்று எகிறுவதைப் போல பாவலாக் காட்டினார்கள். மீண்டும் ஊர்ப் ெபரியவர் பேசினார். “அண்ணாச்சி தப்பா பேசாதீங்க. ‘நாடோடி மன்னன்’ எங்க திருவிழாவுல ஒண்ணு. அதை அரைகுறையா பண்ணினா சாமி குத்தமாயிடும்.

தயவுசெஞ்சி பண்ணாதீங்க. எங்க ஊருக்கு மழையே இல்லாம பஞ்சமாயிடும். அடுத்த வருஷம் நீங்களே வந்து நல்ல புது எம்.ஜி.ஆர் படமா போடுங்க. அதுக்கு என்ன காசு ஆவுதோ, அதை ஊர்க்காரங்க வசூலிச்சி கொடுத்துப் போடுவோம்” என்றார்.அதற்கும் மசியவில்லை வந்தவர். “என்னவே சாமி குத்தம் அது இதுன்னு ெசான்னா அப்படியே போயிடுவோம்னு நினைச்சீங்களாவே. நாங்களெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தை வியாபாரம் பண்றவங்க இல்ல. அவரு மாதிரி நியாய தர்மம் பேசுறவங்க. ‘தப்பு செஞ்சவன் வருந்தியாகணும்’னு அவரே சொல்லியிருக்காரு. அவரு படத்ைத திருடி போட்டவங்க வருத்தித்தான் ஆகணும்” என்றார்.

ஊர்த் தலைவரும் விடவில்லை. “அண்ணாச்சி உங்கள மாதிரிதான் எங்களுக்கும் எம்.ஜி.ஆரு. எங்க ஜனங்களும் அவரு மேலே உசுரையே வெச்சிருக்காங்க. அதே மவராசன் எம்.ஜி.ஆர்தான் ‘தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்’னு பாட்டு பாடியிருக்காப்புலே. கவலைப்படாம ஊருக்கு போங்க. உங்க படப்பெட்டி உங்க இடத்துக்கு பத்திரமா வந்து சேரும்.

இவுங்க மேல நீங்க சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்குங்க” என்றார். டெக்னிக்கலாக எம்.ஜி.ஆர் பாட்டையே வைத்து சமயோசிதமாக ஊர்த் தலைவர் மடக்கியதை மனசுக்குள் மெச்சிக்கொண்டு வந்தவர்கள் அரைமனசாகக் கிளம்பினார்கள். நாடோடி மன்னனின் ஆட்சி மீண்டும் திரையில் தொடங்கியது.

“உழைப்பதிலா, உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா...
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் தோழா...”

சீர்காழியின் கணீர் குரல் அந்த இருளையும் காட்டையும் கடந்து பயணித்துக் கொண்டிருந்தது.

(பிலிம் ஓட்டுவோம்)

பைம்பொழில் மீரான்