எனக்குள் ஒருவன் அஜய்ரத்னம்



டைட்டில்ஸ் டாக் 29

(சென்ற இதழ் தொடர்ச்சி)


2004ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஆண்டு. எனக்குள் ஒருவன் இருந்ததை நான் கண்டுகொண்ட வருடம் அது. அப்போதிலிருந்துதான் தன்னம்பிக்கை பேச்சாளராகி நூற்றுக்கணக்கான மேடைகள் ஏறி மாணவர்களுக்கு கற்றல் அறிவு தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். ஒரு நடிகனாக என்னை அறிந்தவர்கள், நல்ல பேச்சாளனாகவும் அப்போதிலிருந்துதான் அறிந்தார்கள்.

நினைவாற்றல் குறித்து நான் பர்சனலாக நிறைய ஆய்வுகள் செய்தேன். எனக்காகத்தான் அவற்றையெல்லாம் செய்தேன் என்றாலும், அந்த ஆய்வுகளில் எனக்கு கிடைத்த விடைகளை மற்றவர்களின் நலன்களுக்காக மேடைகளில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன்.நிறைய பேர், ‘எனக்கு மறதி ஜாஸ்தி’ என்று பெருமையாக சொல்கிறார்கள். ‘மூளையே வேலை செய்யலை’ என்று சிரித்துக்கொண்டே தங்கள் குறைகளை சமன் செய்ய முயற்சிக்கிறார்கள். என்னுடைய ஆய்வு இந்த மறதி மற்றும் மூளையின் திறனை மேம்படுத்துவது தொடர்பானதுதான்.

“ட்விங்கிள் ட்விங்கிள்” என்று நாம் ஆரம்பித்தாலே உடனே “லிட்டில் ஸ்டார்” என்று அடுத்த வரி நம்மை அறியாமலேயே நம் வாயில் வருகிறதுதானே? அப்படியென்றால் நமக்கு மறதி இல்லை என்றுதானே அர்த்தம், நம் மூளை ஒழுங்காக பணியாற்றுகிறது என்றுதானே அர்த்தம்?

நமக்கு சிந்தனைகளில் எந்தக் குறைபாடும் இல்லை. நாம் விஷயங்களை கற்கும் முறைகளை முறைப்படுத்தினால் போதும் என்பதே என்னுடைய ஆய்வு முடிவு. இதைத்தான் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு எளிய வழிமுறைகளோடு சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

அதாவது ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் ரீகலெக்‌ஷனுக்கு இடையே இருப்பது ரிவிஷன். எதைப் படித்தோமோ அது ரெஜிஸ்ட்ரேஷன். படித்ததை மீண்டும் படிப்பது ரிவிஷன். ரீகலெக்‌ஷன் செய்வதில்தான் நமக்கு பிரச்சினை இருக்கிறது. வகுப்பறையில் பாடம் படிக்கும்போது, அந்தப் பாடம் பெரும்பாலும் நமக்கு ரெஜிஸ்டர் ஆகிறது. பாடத்தில் ஏதாவது புரியாவிட்டால் உடனடியாக ஆசிரியரிடம் சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொண்டால் போதும்.

ஆனால்-இதை எப்போது ரிவிஷன் செய்கிறோம் என்பதில்தான், நமக்கு அந்த பாடம் ரீகலெக்ட் ஆவதின் சூட்சுமம் இருக்கிறது.
ரொம்ப சிம்பிள். வகுப்பறையில் படித்த பாடத்தை வீட்டுக்கு வந்து வாய்விட்டு ஒருமுறை படித்தாலே போதும். அது நம் மூளைக்குள் நன்கு ரெஜிஸ்டர் ஆகிவிடும்.

இந்த ரிவிஷனை எப்படியெல்லாம் சுலபமாக செய்வது என்பதுதான் நான் மேடையில் பேசுவது. நம்முடைய மூளையில் நமக்கு அவசியமான விஷயங்களை எப்படி அடுக்கலாம் என்பதே நான் சொல்லித் தருவது.மாணவர்களுக்கு மட்டுமல்ல. தங்களுக்கு மறதி இருக்கிறது என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமே என்னுடைய டிப்ஸ் உதவும்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு பள்ளிக் கூடத்தில் நான் பயிற்சி கொடுத்தபிறகு 100% தேர்ச்சி சதவிகிதத்தை மாணவர்கள் எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து ஏராளமான பள்ளிகள் என்னை கற்றல் பயிற்சிக்காக அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஸ்டோன் டூ டைமண்ட்’ என்கிற அமைப்பை நிறுவி, இந்தப் பயிற்சியை நான் ஒரு சேவையாகவே அரசுப் பள்ளிகளுக்கு செய்துவருகிறேன்.

எனக்குள் இருந்த ஒருவனை நான் கண்டுபிடித்ததாலேயே இன்று சமூகத்துக்கு உபயோகமாக ஏதோ செய்ய முடிந்திருக்கிறது. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இதுபோல ஒருவன் ஒளிந்திருக்கிறான். அவனை எவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் கண்டறிகிறீர்களோ, அது நீங்கள் வாழும் சமூகத்துக்கு நல்லது.

சினிமாப் பத்திரிகையான ‘வண்ணத்திரை’யில் நிறைய தத்துவங்கள் பேசி உங்களை அலுப்பூட்டுகிறேனோ என்று அச்சமாக இருக்கிறது. நான் ஒரு சினிமாக்காரன், ஆனால்- எனக்கு வேறொரு முகம் உண்டு என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இவ்வளவு விலாவாரியாக பேச வேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு சிறிய கதையை மட்டும் சொல்லி முடித்து விடுகிறேன்.ஒரு பெரியவர் கலர், கலராக பலூனை பறக்க விட்டார். அதை தூரத்திலிருந்து ஒரு குட்டிப் பையன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் அந்த பெரியவரிடம் வந்து, “அய்யா, அத்தனை கலரிலும் பலூன் பறக்க விட்டிருக்கிறீர்கள். ரொம்ப நேரமாக பார்க்கிறேன். கருப்பு கலரில் ஒரு பலூன் கூட பறக்கவில்லை. கருப்பு கலரில் பலூன் இருந்தால் பறக்காதா?” என்று கேட்டான்.
அவர் உடனே தன் பையில் தேடி கருப்பு பலூன் ஒன்றை எடுத்து ஊதி பறக்கவிட்டார். குட்டிப் பையனுக்கு மகிழ்ச்சி.

அவனிடம் சொன்னார். “தம்பி, பலூன் மேலே பறக்குறது அதுக்குள்ளே நாம நிறைக்கிற காற்றினால்தான், அது எந்த கலரில் இருக்கிறது என்பது ஒரு விஷயமே இல்லை. அதுபோலதான் நமக்குள்ளே நிறைய ஆற்றல் இருக்கு. அதுக்கும் நம்மோட புறத்தோற்றத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.”

இந்தக் கதைக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் எதுவும் உங்களுக்கு தேவைப்படாதுன்னு நெனைக்கிறேன். நம்மை இயக்கும் உந்துசக்தி நமக்குள்ளே இருக்கு என்பதை நான் நம்புகிறேன். நீங்களும் நம்பவேண்டும் என்பதே என் விருப்பம்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)