மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி…



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 49

ஒருவன் வாழ்நாள் முழுக்க தவறே செய்ததில்லை என்றால், அவன் சரியாகவும் எதையும் செய்திருக்க மாட்டான் என்று அர்த்தம். எதையாவது செய்திருந்தால்தானே அது சரியாகவோ, தவறாகவோ அமைந்திருக்கும். எதையுமே முதல் முயற்சியிலேயே சரியாகச் செய்வது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமையும். ‘ஆயிரம் பேரை போட்டுத் தள்ளினால்தான் அரை வைத்தியன்’ என்று நகைச்சுவையாக நம்மூர் பெருசுகள் கூட சொல்வார்கள்.

“நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்” என்று ஒருவன் கேட்டால் மனிதப் பண்புகளிலேயே உயர்ந்த பண்புகளில் ஒன்றை அவன் அடைந்திருக்கிறான் என்று அர்த்தம். மன்னிப்பு கேட்கும் தைரியம் அத்தனை பேருக்கும் வாய்த்து விடுவதில்லைதான்.தெரிந்தோ தெரியாமலோ ஒருவன் செய்துவிடும் தவறுக்கு, மன்னிப்பு மட்டுமின்றி பிராயச்சித்தமும் செய்யும் வகையிலான கதை அறுபதுகளில் நிறைய கருப்பு வெள்ளைப் படங்களாக வந்ததுண்டு. அன்றைய தலைமுறையினருக்கு மன்னிப்பு கேட்வதில் அவ்வளவு ஆர்வம்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு, தவறுகளுக்காக நாம் கேட்கும் ‘ஐயாம் சாரி’யில் நிஜமான மன்னிப்பு கோரும் தன்மை இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். சமூகத்தின் கூட்டு மனப்பான்மைதான் கலையில் வெளிப்படும். அவ்வகையில் இப்போது நிஜமாகவே மன்னிப்பு கேட்க விருப்பமில்லாத நம்முடைய மனப்பாங்கின் காரணமாகவே அத்தகைய கதைகள் இப்போது அதிகம் வெளிவருவதில்லை.

விதிவிலக்காக வெளிவந்து விமர்சகர்களின் பெரும் பாராட்டுகளை அள்ளியது ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’.கொலைத்தொழில் செய்யும் நாயகன், தான் அறியாமலேயே தன்னால் பாதிக்கப்படும் குடும்பத்தைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கும் கதை. அடிப்படையில் உருக்கமான குடும்பக்கதையான இதை த்ரில்லராகவும் எடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் இயக்குநர் மிஷ்கின்.

மன்னிப்பு என்பது வெறுமனே வார்த்தைகளில் கேட்கும் சடங்கு அல்ல. தன்னால் ஏற்பட்ட ஒரு பாதிப்புக்கு, பாதிப்புக்கு உள்ளானவருக்கு பாதிப்புக்கு நிகரான மதிப்பில் செய்யக்கூடிய பிராயச்சித்தமே நிஜமாக மன்னிப்பு கோருதலாக இருக்க முடியும்.எவ்வளவு உணர்வுபூர்வமான கதைகளை இந்த ‘மன்னிப்பு’ சீரிஸில் எழுதமுடியும். காதல், ஆக்‌ஷன், ஹாரர் என்று அத்தனை தளங்களிலும் புகுந்து விளையாட நிறைய ஸ்கோப் இருக்கிறதுதானே?அப்புறமென்ன, எழுதுங்கள்.

(கதை விடுவோம்)