ஹாலிவுட் கலைஞரையே வியப்புக்கு உள்ளாக்கிய அஜித்!துப்பறியும் கதைகளில் பிரமாண்டமான ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே அதுமாதிரியான படங்களில் நடிக்க முடியும். தமிழின் முதல் சர்வதேச உளவாளி படம் என்று சொல்லப்படும் ‘விவேகம்’ படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ளார்.

இதில் அஜித் டீமில் ஒருவராக பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின்  நடித்துள்ளார். இவர் ‘Casino Royale’, ‘300:Rise Of An Empire’, ‘The Transporter Refunded’ போன்ற மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். “சர்வதேசத் தரத்தோடு உருவாக்கப்படும் ‘விவேகம்’ மூலம் இந்திய சினிமாவில் கால் பதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்தக் கதாபாத்திரத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார்.

சிவாவின் காட்சிப்படுத்தல் முறையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பிய போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதையும் தெரிந்துகொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார்.

அவர் செய்த ஆக்‌ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டைக் காட்சி  சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவருடைய கடின உழைப்புதான் அவரை இவ்வளவு உயரத்தில் நிறுத்தியுள்ளது. படப்பிடிப்பு சமயத்தில் அவருடன் பழகிய அனுபவங்கள் எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமில்ல, இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் நிச்சயம் ரசித்துக் கொண்டாடுவார்கள்’’ என்று உறுதியாகச் சொல்லமுடியும்’’ என்கிறார் சர்ஜ்.

- சுரேஷ்ராஜா