சென்ஸாரோடு மல்லுக் கட்டும் இன்னொரு இயக்குநர்!பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து கோல்ட் மெடலோடு வெளிவந்த ராகேஷ் எழுதி இயக்கும் படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இவர் மோகன்ராஜாவின் சீடர்.  சமீபத்தில் இந்தப் படத்தை தணிக்கைக்காக திரையிட்டார்.  படத்தைப் பார்த்துவிட்டு எந்த சான்றிதழும் தராமல் ‘ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்புங்க’ என்று சொல்லிவிட்டார்களாம். படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்புவதற்காக உச்சக்கட்ட டென்ஷனோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த இயக்குநரை சந்தித்தோம்.

“சென்சார் மறுக்கப்படுமளவுக்கு உங்கள் படம் அஜால் குஜால் படமா?”
“அப்படி இருந்தாலாவது ‘ஏ’ சர்டிபிக்கேட்டாவது கொடுத்திருப்பாங்களே. படத்துல இரண்டு ஹீரோயின் இருந்தாலும் ஒரு இடத்திலும் பிட் சீன் இருக்காது.  என்று ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பகல் பன்னிரெண்டு மணிக்கே பெண்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.

பெண் நல சிந்தனைகள் இன்று பேச்சில்தான் இருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். காந்தியின் வரிகள்தான் படத்தோட ஹைலைட். அதைத்தான் பக்கா கமர்ஷியல் பார்முலாவில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.  அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைத்தளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்சார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படமாக எடுத்தால் கத்திரிக்கோலை தூக்கிக்கொண்டு ‘அதை வெட்டு இதை வெட்டு’ என்று சகட்டு மேனிக்கு கட் கொடுக்கிறார்கள். 

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லை என்றோ சென்சார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிகிறது.  இன்ன இன்னதுதான் படமாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டி முறையாவது சென்ஸார் போர்டால் முன்னாடியே தரப்பட்டிருந்தால் அப்படிப்பட்ட காட்சிகளையோ வசனங்களையோ  படமாக்குவதைத் தவிர்க்கலாம். ஆனால் அப்படியொரு சிஸ்டம் இங்கு இல்லை. 

எடுத்த படத்தையே பார்க்க ஒருமாதம் இழுத்தடிக்கும் இவர்களிடம் ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படம் பண்ணமுடியுமா? எடுத்த பின் நம் கருத்துச் சுதந்திரம் சிக்கி சின்னாபின்னமாகி துண்டு துக்கடாவாகி வெளி வருகிறது. இப்போது என் படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, கெஞ்சியும், அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள். இது பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம்.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில்  எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?

ஒரு நல்ல படம் இப்படி பாடாய்ப் படணுமா? என் படத்துக்கு மட்டும்தான் என்றில்லை. சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘மெட்ரோ’ படத்துக்கும் இந்தக் கொடுமை நடந்ததாம். சமீபத்தில் வெளியான ‘தரமணி’ படத்திற்கும் இப்படியொரு கொடுமை நடந்ததாம். படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது.

இதற்கு சினிமா ஜாம்பவான்கள் குரல் கொடுக்க வேண்டும். சமீபத்தில் பெண்களுக்கு பிரத்யேக ஷோ ஏற்பாடு செய்தோம். படத்தைப் பார்த்துவிட்டு பாசிடிவ்வாக அவர்கள் கருத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட அதே தாக்கம்தான் வெகுஜன மக்களுக்கும் ஏற்படுத்தும். ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் இளைஞர்களின் மனதைக் கெடுத்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் வி.மதியழகன், ஆர்.ரம்யா என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள். அவர்களுடைய நல்ல மனசுக்கு ரிவைசிங் கமிட்டியில் நல்லதே நடக்கும்.” 
“உங்க ஹீரோ துருவா?”

“துருவா குடும்பமே மெத்தப் படித்த கல்விக் குடும்பம். சினிமா அவருக்கு பேஷன் என்பதால் சினிமாவுக்கான ஃபைட், டான்ஸ், போன்ற கலைகளை முறைப்படி கற்றுக்கொண்டுதான் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் நடித்த ‘திலகர்’ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். சொல்லப்போனால் இந்தப் படத்திலிருந்துதான் அவருடைய கேரியர் ஸ்டார்ட் ஆகப்போகிறது.

அந்தளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்துல அவர் சிலிண்டர் போடும் டெலிவரி பையனா வர்றார். துருவாவைப் பொறுத்தவரை பார்ன் வித் பிளாட்டினம் ஸ்பூன். ஆனால் கேரக்டருக்காக தன்னையே வருத்திக் கொண்டு நடித்தார்.”
“இரண்டு ஹீரோயின்களை எப்படி சமாளிச்சீங்க?”

“ஒருகாலத்தில் ஒரு ஹீரோயினை கமிட் பண்ணினாலே நாக்கு தள்ளும். ஆனால் இப்போ அப்படி இல்லை. மூன்று ஹீரோயின்கள் நடித்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமையை பார்க்க முடிகிறது. ஐஸ்வர்யா தத்தா ஏற்கனவே தன்னுடைய திறமையை ‘தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’, ‘ஆறாது சினம்’  படங்களில் ப்ரூப் பண்ணியவர். இந்தப் படத்திலும் நடிப்பில் அசரடித்திருக்கிறார். ‘வேதாளம்’, ‘சென்னையில் ஒரு நாள்-2’ போன்ற படங்கள் பண்ணிய  அஞ்சனாவுக்கும் வெயிட் ரோல்தான்.”

“சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்?”
“ஜேடி சக்ரவர்த்தி, ராதாரவி இருவரும் கதையோட முதுகெலும்பா வர்றாங்க. சரண்யா பொன்வண்ணன், நாகிநீடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ்வளவன், ‘நான் மகான் அல்ல’  ராம்  ஆகியோரும் இருக்கிறார்கள்.”
“டெக்னிக்கல் டீம்?”

“பி.ஜி. முத்தையா கேமரா பண்ணியிருக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸால் படத்தை திட்டமிட்டபடி எடுக்க முடிந்தது. ஒவ்வொரு பிரேமிலும் விஷுவல் பியூட்டி அள்ளும். ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘உறுமீன்’ போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்த அச்சு இசையில் பாடல்கள் அமர்க்களமா வந்துள்ளது. கதையோடு கலந்த பாடல்கள் இருப்பதால் கேன்டீனுக்கு எழுந்து போக வேண்டிய அவசியமே இருக்காது. பா.விஜய், மீனாட்சிசுந்தரம் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

‘பாபநாசம்’, ‘தனி ஒருவன்’ படங்களில் வேலை பார்த்த ரெம்போன் பால்ராஜ் ஆர்ட் டைரக்ஷன் பண்ணியிருக்கிறார். சண்டை இயக்குநர் விமலுக்கு இந்தப் படத்தில் பெரிய பேர் கிடைக்கும். ஏன்னா, சுசீந்திரன் படங்களில் வருவது மாதிரி சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். எடிட்டர் ஷான் லோகேஷ் நறுக்குன்னு எடிட் பண்ணிக் கொடுத்திருக்கிறார். என் குருநாதர் மோகன் ராஜாவின் பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்.”

- சுரேஷ்ராஜா