ஜெயிக்கிறகுதிர சக்தி சிதம்பரம்



டைட்டில்ஸ் டாக் 19

(சென்ற இதழ் தொடர்ச்சி)


சினிமாவில் நான் ரசித்த ஜெயித்த குதிரைகள் ஏராளம்.குறிப்பா சின்ன வயசுலேருந்தே எம்.ஆர்.ராதாவை ரொம்ப பிடிக்கும். ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை எங்க ஊரு டூரிங் தியேட்டரில் இருபத்திநாலு முறை பார்த்திருக்கேன். இப்போவும் சோர்வா இருந்தா, டிவிடியில் ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை பார்ப்பேன். எனக்குள்ளே உற்சாகக் குதிரை தறிகெட்டு ஓட ஆரம்பிச்சிடும்.

அந்தப் படத்துக்கு திருவாரூர் தங்கராசு எழுதிய வசனங்கள்தான் என்னை சினிமாவுக்கு வரத்தூண்டிச்சி. ஒரு வசனகர்த்தாவா ஆகணும்னுதான் சென்னைக்கே வந்தேன். அந்தப் படத்தோட ஒவ்வொரு டயலாக்கும் எனக்கு மனப்பாடம். என்னோட படங்களில் நக்கல், நையாண்டி அதிகமா இருக்குறதுக்கு காரணமே அந்தப் படம்தான்.

‘அடியே காந்தா’ன்னு எம்.ஆர்.ராதா பேசுற ஸ்டைலை பீட் பண்ண இன்னைக்கு வரைக்கும் ஆள் இல்லை. ஒரு படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம் இருமிக் கொண்டே இருப்பார். ‘‘தர்ம ஆஸ்பத்திரியில போய் சேரு. உங்களால் அதாண்டா முடியும்’’ என்பார். நாட்டு நடப்பை அப்படி தோளுரித்துக் காட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.

எங்க ஊரான சாத்தூரில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்கு ஒரு முறை எம்.ஆர்.ராதா வந்தார். அந்த விழாவுக்கு நன்கொடை கொடுத்ததால் எங்களுக்கு முன் வரிசையில் சீட் ஒதுக்கினார்கள். பந்தாவா உட்கார்ந்திருந்த நாங்கள் எம்.ஆர்.ராதாவின் ஸ்பீச்சை கேட்க ஆர்வமா இருந்தோம். மைக் பிடித்ததும் ‘‘ஃப்ரண்ட்ல உட்கார்ந்திருக்கிறவன்களை நம்பாதே. இவனுங்க எல்லாம் ஃப்ரீ பாஸ் பசங்க. லாஸ்ட்ல இருக்கிறவன்தான் உண்மையான தொண்டன்” என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தார்.

எம்.ஆர்.ராதாவை மாதிரியே எனக்கு சார்லி சாப்ளினை ரொம்பவும் பிடிக்கும். நான் இயக்கிய ஒரு படத்துக்கு ‘சார்லி சாப்ளின்’ என்று அவரால்தான் டைட்டில் வெச்சேன். டயலாக் இல்லாத காலக்கட்டத்தில் தன்னுடைய பாடிலேங்வேஜ் மூலம் ஜனங்களை சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன். பர்சனல் வாழ்க்கையில் சோகங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் மெனக்கெட்டு நடிச்சிருப்பார்.

ஒவ்வொரு சீனும் ஒரு பெயிண்டிங் மாதிரி இருக்கும். ‘சிட்டி லைஃப்’, ‘மாடர்ன் டைம்ஸ்’ என்று ஒவ்வொரு படமும் மாபெரும் திரைக் காவியம். அந்தப் படங்களைத் தாண்டி யாரும் படம் பண்ணமுடியாது. ஃபெஸ்டிவலில் சார்லி சாப்ளின் படம் போட்டால் முதல் ஆளா போய் பார்த்துவிடுவேன். இன்னிக்கு நான் காமெடி டிராக்கில் படம் பண்ண காரணமே சார்லி சாப்ளின்தான். அவர்தான் எனக்கு அந்த ரூட்டை வகுத்துக் கொடுத்தார்.

நகைச்சுவை வேடத்தில் நடிப்பதற்கு அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை. அவர் மீது இருக்கும் தீராத பற்றுதல் காரணமாக மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ‘சார்லி சாப்ளின்’ இரண்டாவது பாகம் எடுக்க திட்டமிட்டிருக்கேன். இப்போ சார்லி சாப்ளினின் நூற்றாண்டு கொண்டப்படுகிறது. இந்த சமயத்தில் அந்த ஜெயிக்கிற குதிரைக்கு நான் செய்யும் மரியாதை அவர் பேரில் மீண்டும் படம் எடுப்பதுதான்.
 

எழுத்தாக்கம்: சுரேஷ் ராஜா (தொடரும்)