மீறும் காதல்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 41

ஷேக்ஸ்பியர் காலத்திலிருந்தே கதை எழுத பயன்படுத்தப்படும் டெக்னிக் இது.மதம், சாதி, வர்க்கம் வேற்றுமையெல்லாம் இல்லையென்றால் ஒரு வயது வந்த பெண்ணும், ஆணும் காதலிப்பதை பெற்றோர் ஆட்சேபிக்க வேண்டிய அவசியமே இருக்காது.நிச்சயிக்கப்பட்ட முறைப்பெண்ணை ஒருவன் துரத்தித் துரத்தி காதலித்தால், அந்தக் காதலில் ஏது சுவாரஸ்யம்?

காதல் என்றால் எதிர்ப்புகள் வரவேண்டும், அந்த எதிர்ப்புகளை காதலர்கள் முறியடிக்க வேண்டும். அதுதான் கதை.கமல்ஹாசன் நடித்த ‘ராஜபார்வை’ திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தோல்விப்படமாக இருக்கலாம்.ஆனால்-இன்றும்கூட கிளாசிக்காக விமர்சகர்களால் அப்படம் கொண்டாடப்படுகிறது.குறையுள்ள ஒருவனை கதாநாயகனாக தமிழ் சினிமா பொதுவாக இப்போதுகூட ஏற்பதில்லை.

முப்பத்தியாறு வருடங்களுக்கு முன்பாக பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். வயலின் கலைஞரான அவருடைய திறமையின் மீது அழகான ஹீரோயினான மாதவிக்கு நல்ல மதிப்பு. இந்த மதிப்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இந்த காதலுக்கு முற்போக்கு எண்ணம் கொண்ட மாதவியின் தாத்தாவான எல்.வி.பிரசாத் ஆதரவு கொடுக்கிறார்.

இருப்பினும் பார்வையற்ற ஒருவனை அழகான தங்கள் வீட்டுப் பெண் காதலிப்பதா என்று மாதவியின் குடும்பத்தில் எதிர்ப்பு எழுகிறது. அவருக்கு திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது.சர்ச்சில் திருமணக் கோலத்தில் தப்பித்து கமல்ஹாசனுடன் மாதவி ஓடுவதாக கதை.அழகான பெண், பார்வையற்றவனைக் காதலித்து கைபிடிக்கும் இந்தக் கதையை அந்த காலத்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால்-இப்போதைய காலகட்டத்தில் காதல் என்பது இதுபோன்ற முரண்களால் வெளிப்படுவதே ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.‘காதல்’ திரைப்படத்தில் உயர்ந்த சாதி பெண்ணை, தாழ்ந்த சாதி இளைஞன் காதலிக்கிறான் என்பது மட்டுமே முரண் அல்ல. அழுக்கான பைக் மெக்கானிக்கை, அழகான பள்ளி மாணவி காதலிக்கிறாள் என்கிற கருத்தே இளசுகளுக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி, அப்படம் பிரும்மாண்டமான வெற்றியை எட்ட உதவியது.ஒரு காதல் அதுவரையிலான சட்ட திட்டங்களை, சமூக வரையறைகளை மீறுகிறது என்பது உலகம் முழுக்க கவரக்கூடிய கதைக்கரு.

(கதைவிடுவோம்)