இணையதளம்



கொலைவெறி ஹிட்ஸ்!

அஜால்குஜால் படங்களை இன்டர்நெட்டில் தேடி ஷேர் பண்ணுவதால் ஏற்படும் பின்விளைவுகளை போனவாரம் ‘லென்ஸ்’ சொன்னது. இந்த வாரமும் இன்டர்நெட்டை அடிப்படையாக வைத்து இன்னொரு படம் வெளியாகியிருக்கிறது.

ஓர் இணையதளத்தில் அடுத்தடுத்து சிலர் கொல்லப்படும் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அந்த சைட்டுக்கு ஹிட்ஸ் எகிற எகிற கொலைகளின் வேகமும் சூடுபிடிக்கிறது. இதற்கு பின்னணியில் யார் என்பதை சைபர் கிரைம் போலீஸார் கண்டுபிடிக்க களமிறங்குகிறார்கள்.

கணேஷ் வெங்கட்ராம் ஜம்மென்று இருக்கிறார். ஓங்குதாங்காக சந்தனக்கட்டை ரேஞ்சுக்கு இருக்கும் ஸ்வேதாமேனனை எப்படி எதற்கு பயன்படுத்துவது என்று இயக்குநர்களுக்கு குழப்பம். சுகன்யா வில்லியாக பின்னியிருக்கிறார்.

அரோல் கரோலியின் இசை அவ்வளவாக எடுபடவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா. ஒரு இணையதளத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஒரு குற்றம் ஒளிபரப்பாகும்போது அதை முடக்குவது எளிதான காரியம். அதைவிட்டுவிட்டு காதுல பூ சுத்துவதால் திரைக்கதை படுகுழிக்குள் படுத்துக்கொள்கிறது. அறிமுக இயக்குனர்கள் என்பதால் சங்கர் - சுரேஷ் இரட்டையருக்கு ஜஸ்ட் பாஸ் கொடுக்கலாம்.