சங்கிலி புங்கிலி கதவதொற



வாஷிங்மெஷினில் துணி துவைச்சாச்சா?

பேய்ப்படம் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? பாழடைந்த பங்களா, வாழ்ந்து கெட்ட ஒரு பேய், அந்த பேய்க்கு ஒரு உருக்கமான ப்ளாஷ்பேக், பெண் பேயாக இருந்தால் ஒரு பாலியல் வன்முறை சம்பவம், பேயின் உக்கிரம் தணிக்க பரிகாரம்.... இப்படியெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சமீபமாக நம்முடைய இயக்குநர்கள் பாசத்துக்கு ஏங்கும் பேயைக் காட்டுகிறார்கள். இந்த பேய்களும் சும்மா பயமுறுத்துவதாக இல்லாமல் ஒழுக்கமான வாழ்க்கை நெறிகளோடு வாழ்ந்து வருகின்றன.

வாடகை வீட்டிலேயே வாழ்க்கையின் பெரும் பகுதியை வாழ்ந்துவிட்ட அம்மாவை, பங்களா மாதிரி பெரிய வீட்டில் ராணி மாதிரி வாழவைக்க சபதம் எடுக்கிறார் ஜீவா. ரியல் எஸ்டேட் புரோக்கரான அவர், பழைய வீடு ஒன்றில் பேய் இருப்பதாக கதை கட்டிவிட்டு, யாரும் அதை வாங்காத நிலை வந்தபிறகு சல்லிஸான ரேட்டில் மடக்கிப் போடுகிறார்.

இவர் கிளப்பிய கட்டுக்கதை உண்மையாகிறது. ஆசை ஆசையாக வாங்கிய வீட்டில் பேய் குடியிருக்கிறது. குடும்பம் சிதறிப் போனதால் உயிரிழந்த அந்த பேய், ஒற்றுமையாக வாழ்வதாக இருந்தால் இந்த வீட்டில் ஜீவாவை வாழவிடுகிறேன் என்று கண்டிஷன் போடுகிறது. கூட்டுக் குடும்பமாக ஜீவா ஒற்றுமை காட்டி வாழ்ந்தாரா, சொன்ன வாக்குறுதியை பேய் காப்பாற்றியதா என்பதே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.’

ஜீவாவுக்கு நீண்டகாலம் கழித்து செம ஹிட். காட்சிக்கு காட்சி நின்று விளையாடுகிறார். வீட்டில் பேய் இருப்பதைக் கண்டறிந்ததுமே ஏற்படும் அதிர்ச்சி, பேயை விரட்ட எடுக்கும் முயற்சி, ஒரு கட்டத்தில் சரக்கு போட்டுவிட்டு பேயிடமே சவால் விடுவது என்று அவரது நடிப்புக்கு தீனி போடும் சப்ஜெக்ட்.

மெழுகு பொம்மை கணக்காக இருக்கும் ஸ்ரீதிவ்யா, ஜீவாவுக்கு தோதான ஜோடி. ஆனால், கதையில் அவருக்கு அவ்வளவு வாய்ப்பில்லை.சூரி, ராதிகா, ராதாரவி, இளவரசு, தம்பிராமையா, கோவை சரளா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தேவதர்ஷினி என்று படம் நெடுகவே நட்சத்திரங்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கிறார்கள்.

‘வாஷிங்மெஷினுக்கு மூணு நாள் லீவு’ ரேஞ்சு டயலாக்குகளை கேட்கும்போது, வசனம் எழுதியது ‘வண்ணத்திரை’ புளோ அப்புகளுக்கு கமெண்டு எழுதுபவரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. ‘டூ மச்’ என்று சொல்லிக்கொண்டே, டபுள்மீனிங் டயலாக்குகளை பெண்கள் தியேட்டரில் ரசிக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகரின் இசை, சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு இரண்டுமே இயக்குநர் ஐக்குக்கு நன்கு கைகொடுத்திருக்கின்றன. முதல் படம் என்கிற அடையாளமே தெரியாத அளவுக்கு நேர்த்தியாக படமெடுத்திருக்கிறார் ஐக்.