கோடை வெயிலுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கப்போறோம்!



‘போங்கு’ காட்டுகிறார் டைரக்டர்

‘போங்கு’ படத்தின் மூலம் இயக்குநராக தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் தாஜ். இவர் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ‘பாகுபலி’ படத்தின் ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலின் சிஷ்யர். ரிலீஸ் வேலையில் பிஸியாக இருந்த தாஜை தாஜ் ஓட்டல் எதிரில் இருக்கும் ஒரு டீக்கடையில் மடக்கினோம்.“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“சொந்த ஊர் சென்னை. அப்பா காவல்துறை அதிகாரி. அப்பா, நான் போலீஸா வரலைன்னாலும்,  படிச்சி நல்ல உத்தியோகம் பார்க்கணும்னு விரும்பினார். வீட்டோட எதிர்ப்புக்கு மத்தியில்தான் சினிமாவில் காலடி எடுத்துவெச்சேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து சினிமா தான் என்னுடைய லட்சியமா, கனவா இருந்தது. மத்தபடி வேறு எந்த துறையின் மீதும் நாட்டம் இல்லை.”
“சினிமாவை யாரிடம் கத்துக்கிட்டிங்க?”

“டைரக்‌டராக வேண்டும் என்ற கனவோடு கோடம்பாக்கம் தெருக்களில் காட்டுத்தனமா அலைஞ்சிருக்கேன். கடைசியா, ‘பாகுபலி’ புகழ் ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலிடம் உதவியாளரா சேர்ந்தேன். ‘இந்தியன்’, ‘காஞ்சிவரம்’, ‘எந்திரன்’, உள்ளிட்ட ஏராளமான படங்களில் அவரிடம் வேலை பார்த்தேன். வேலை பார்த்தது ஆர்ட் டைரக்‌ஷனா இருந்தாலும், டைரக்‌ஷனில்தான் எனக்கு இன்ட்ரஸ்ட்டு.”“போங்கு கதை எப்படி உருவானது?”

“பேய், பிசாசு, ப்ளாக் காமெடின்னு நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கும் சீசனில் புதுசா ஒரு ஜானரில் படம் பண்ணணும்னு தோணுச்சி. நான் எடுத்துக்கொண்ட கதைக்களம் கார். ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை மையமா வெச்சு எழுதப்பட்ட கதை. மக்கள் மத்தியில் காருக்குன்னு ஒரு கிரேஸ் இருக்கு. சொந்தமா கார் இல்லைன்னாலும் அவசர ஆபத்துக்கு டிராவல்சுல புக் பண்ணி யூஸ் பண்ணுறோம். இது மக்களோட வாழ்க்கையில் கலந்த கதை.”“படத்தில் என்ன சொல்ல வர்றீங்க?”

“எந்த ஒரு குற்றமும் புதிதாக உருவாகவில்லை. எல்லா குற்றங்களும் ஏற்கனவே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரே வித்தியாசம், அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப சில குற்றங்கள் பேசப்படுகிறது. குற்றங்களுக்கான ஆணிவேர் யார் என்று பார்த்தால், வெளியிலிருந்து யாரும் வந்திருக்கமாட்டார்கள். அலசி ஆராய்ந்து பார்த்தால் அது உள்குத்தாக இருக்கும். அப்படித்தான் ‘போங்கு’ படத்தின் கதையும். ரோல்ஸ்ராய்ஸ் கார் எதற்கு, யாரால் திருடப்படுகிறது என்பதை யூகிக்கமுடியாதபடி ட்விஸ்ட் வெச்சு சொல்லியிருக்கேன்.”
“முதல் படம் என்ற பயம் இருந்ததா?”

“பயம் இல்லாமல் இருக்குமா? இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட ரிலீஸ் பண்றதை நெனைச்சாதான் தூக்கமே வரமாட்டேங்குது.”
“படத்தோட ஹைலைட்?”

“இரண்டு சேஸிங் காட்சிகள் இருக்கு. அந்தக் காட்சிகளுக்காக பல கோடி மதிப்புள்ள கார்களை பயன்படுத்தினோம். காருக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது, நடிகர்களுக்கும் ஒண்ணும் ஆகக்கூடாது. பெரிய ரிஸ்க் எடுத்துதான் அந்தக் காட்சிகளைப் படமாக்கினோம். ஷங்கர் சார் படம் போல் அந்தக் காட்சிகள் பிரம்மாண்டமா வந்திருக்கு.”

“ஹீரோ நட்டி?”

“பேசிக்கலா டவுன் டூ எர்த் பெர்சன். பாலிவுட்ல பெரிய கேமராமேனா இருந்தாலும்  தலைக்கனம் இல்லாத மனிதர். அதுக்கு ஒரே உதாரணம் இந்தப் படத்தோட கேமராமேன் மகேஷ் முத்துசாமியைப் பாராட்டியதை சொல்லலாம். ஒர்க்கை பார்த்துட்டு புகழ்ந்து தள்ளினார். ‘சதுரங்க வேட்டை’ பார்த்ததுமே அவரை வைத்துதான் படம் பண்ணணும்னு இந்தக் கதையை எழுதினேன். டெய்லர் மேட் ரோல் எனுமளவுக்கு இந்தக் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தினார்.”

“நட்டி குத்தாட்டம் போட்டுள்ளாராமே?”
“படத்துல மொத்தம் நான்கு பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் கோடை வெயிலுக்கு ஐஸ் கட்டியில் ஒத்தடம் கொடுத்த மாதிரி ஜிவ்வுன்னு இருக்கும். அந்தளவுக்கு காந்த் தேவா மெனக்கேட்டு டியூன் போட்டார். ‘வெள்ளக் குதிர... வெள்ளக் குதிர....’, ‘தங்கமே என் பெர்த்டே’ என்ற இரண்டு பாடல்களுக்கு நட்டி செமத்தியா குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்தப் படத்தில் நடனத்துக்காகவும் நட்டி பேசப்படுவார்” 
“ஹீரோயின் ரூஹி சிங்?”

“இந்தக் கதைக்கு க்ளாமரா ஒரு நடிகை தேவைப்பட்டார். ரூஹி நடிச்ச ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டுத்தான் கமிட் பண்ணினேன். பிஸியான மாடல். கதை பிடிச்சிருந்ததால் ஓக்கே சொன்னார். ரூஹிசிங்கைப் பொறுத்தவரை க்ளாமரில் டூ பிஸில் நடிக்கக்கூடிய அளவுக்கு தாராள மனசு உள்ளவர். ஓவர் க்ளாமர் கதைக்கு அவெர்ஷனா இருக்கும் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொன்னோம்.

இது தவிர மனீஷாஸ்ரீ இன்னொரு நாயகியா பண்ணியிருக்கிறார். என்னுடைய ஹீரோயின்கள் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னன்னா, இரண்டு பேருமே விளம்பரப் படங்களில் சதம் அடித்தவர்கள். ‘வீர சிவாஜி’யில் ஷாமிலியின் தோழியா ஒரு க்யூட் கேர்ள் வருவாரே... அவர்தான் மனிஷாஸ்ரீ.”  “காமெடி?”

“மயில்சாமி, சாம்ஸ், ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ் ஆகிய மூவர் அணிதான் காமெடி ஏரியாவை குத்தகை எடுத்திருக்கிறார்கள்.  வில்லனா சரத் லோகிதாஸ் வர்றார். அதுல் குல்கர்னி காப் ரோல் பண்ணியிருக்கிறார்.

இவர்களோடு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. ஒரு முதல் பட இயக்குநரின் படத்தில் இவ்வளவு ஆர்டிஸ்ட் பட்டாளத்தை இறக்குவது என்பது அபூர்வம். எல்லாவற்றிக்கும் என்னுடைய தயாரிப்பாளர்கள் திரு என்கிற ரகு குமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோரின் தாராள மனசுதான் காரணம். நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்”

- சுரேஷ்ராஜா