லைவ் ஆக்‌ஷனுக்கு கலைஞர்கள் ஸ்டண்ட் ரெடி!



‘உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்தக் காட்சியைப் படமாக்கினோம்’ என்று சினிமாத்துறையினர் பேட்டிகளில் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வாறு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சினிமாவில் சாகஸம் செய்பவர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள்.

சினிமா இண்டஸ்ட்ரியில் மாஸ் ஆக்‌ஷன் ஹீரோக்கள் உருவாக பின்னணியில் இருந்து உழைப்பவர்கள் இவர்கள்தான். சொற்ப சம்பளத்துக்காக தினம் தினம் செத்துப் பிழைக்கும் பிழைப்பால் இவர்களுக்கு கிடைப்பது ரசிகர்களின் கைதட்டல் ஒலியால் கிடைக்கும் ஆத்ம திருப்தி மட்டுமே.

இவர்களுக்கு ஒரு யூனியன் உண்டு. பெப்சி அமைப்பின் அங்கமான ஸ்டண்ட் யூனியனுக்கு இது பொன்விழா. தற்போதைய ஸ்டண்ட் யூனியன் தலைவரான அனல் அரசு இது குறித்து நம்மிடம் பேசினார்.“ஒவ்வொரு சினிமாவும் வெற்றியடைய வேண்டும் என்கிற தவிப்பு அப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் மட்டுமல்ல, படத்தில் பங்கு பெறும் ஒவ்வொரு கலைஞனுக்கும் உண்டு.

வெற்றிக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடுபவர்கள் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்கள். சினிமா என்பது கூட்டு முயற்சி. எங்களுடைய பங்களிப்பு ரசிகர்களுக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், நாங்களும் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கம்.

எனவேதான் எம்.ஜி.ஆர் அவர்களால் எங்கள் யூனியன் துவக்கி வைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து இன்று சுமார் 650 பேர் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்கள் பொன்விழா மகிழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரும்மாண்டமான கலைநிகழ்ச்சி நடத்தி கொண்டாடப் போகிறோம்.

தமிழில் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நம் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். எங்கள் உழைப்பை சினிமாத்துறையினர் அறிவார்கள். சினிமாத்துறையினர் அத்தனை பேரையும் விழாவுக்கு அழைக்கிறோம். மற்ற துறை கலைஞர்களின் ஆதரவும், நேசமும் எங்களுக்கு எப்போதும் உண்டு. விழாவில் மூத்த கலைஞர்கள் கவுரவப்படுத்தப்பட உள்ளனர்.

ஆறு மணி நேரம் நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிகளில் சினிமா விழாக்களுக்கே உரிய ஆடல், பாடல் மட்டுமின்றி எங்கள் கலைஞர்களின் பிரத்யேக ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் உண்டு. கலா மாஸ்டர் குழுவினரின் பங்களிப்போடு நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வை இயக்கும் பொறுப்பை ‘அம்புலி’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகரும், டான்ஸ் கலைஞருமான கோகுல்நாத்திடம் ஒப்படைத்திருக்கிறோம்.இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்துவந்த எங்கள் திறமையை அனைவரும் லைவ்வாகக் காணும் வாய்ப்பு இது. எங்களுக்கே ‘த்ரில்’லான மொமெண்ட்தான்.”

- எஸ்