குங்ஃபூ ரசிகர்களுக்கு குதூகல விருந்து!



‘தேவி’ ஹிட்டுக்குப் பிறகு அடுத்த அமர்க்களத்துக்கு அசத்தலாக ரெடியாகியிருக்கிறார் பிரபுதேவா. படத்தின் பெயர் ‘யங் மங் சங்’. புதுமுக இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். தடபுடலாக இதன் தொடக்கவிழாவை சமீபத்தில் நடத்தினார்கள். எம்.எஸ்.அர்ஜுனை ஓய்வு நேரத்தில் ஓரங்கட்டினோம்.“தலைப்பு கோக்குமாக்கா இருக்கே?”

“ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க என்னவெல்லாம் வித்தை காட்டணுமோ அத்தைனையும் காட்ட வேண்டியிருக்கு. ரூம் போட்டு யோசிச்சி இந்த டைட்டிலைப் பிடிச்சோம். யங்க நாராயணன் மங்களம் சங்கர் என்கிற பெயரின் சுருக்கமே ‘யங் மங் சங்’. எப்பூடி?”“காமெடி படமா?”

“காமெடி கலந்த ஆக்‌ஷன் படம். கதையை கேட்காதீங்க. புரூஸ்லீ, ஜெட்லீ, ஜாக்கிசான் படம் மாதிரி பக்கா மாஸா இருக்கும்.”“பிரபுதேவாவை எப்படி பிடிச்சீங்க?”“மாஸ்டர் பாலிவுட்டில் பிஸியா இருக்காருன்னு அவரை நாம யோசிக்கிறதே இல்லை. உண்மையில் நல்ல கதை அமைஞ்சா அவர் தமிழுக்குதான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

 ‘தேவி’ ஹிட் ஆனதுமே, நிறைய பேரிடம் கதை கேட்டார். நான் இந்த லைனை சொன்னேன். இது பீரியட் படம் என்பதால் இம்ப்ரஸ் ஆகிட்டாரு. இதுலே கமிட் ஆனதிலிருந்து அவர்தான் படத்தோட முதுகெலும்பா இருந்து எல்லாத்தையும் பார்த்து பார்த்து கவனிக்கிறார். அவரோட லுக்கு, கேரக்டர் எல்லாமே ஃப்ரெஷ்ஷா இருக்கும். இதுவரை நடனப்புயலாதான் அவரைப் பார்த்தோம். இதில் மாஸ்டர் எடுக்கிற ஆக்‌ஷன் அவதாரம், ரசிகர்களுக்கு செம தீனியா இருக்கு. குங்ஃபூ கலையிலே நிறைய வகைகள் இருக்கு. இதில் பிரத்யேகமான ஒரு வகையை பயிற்சிக்கு எடுத்துக்கிட்டிருக்காரு.”

“லட்சுமிமேனன்?”“பரதநாட்டிய டான்ஸரா வர்றாங்க. ஏகத்துக்கும் வில்லேஜ் சப்ஜெக்ட் பண்ணிட்டாங்க. இதுலே டிஃபரன்டா மெச்சூர்டான ஒரு ரோல் செய்யுறாங்க. பீரியட் மூவி என்பதால் அவங்க கெட்டப் வித்தியாசமா இருக்கும்.”“நிறைய ஸ்டார்ஸ் போலிருக்கே?”

“ஆமாம். ‘மங்’ கேரக்டர் ஆர்.ஜே.பாலாஜி, ‘சங்’ கேரக்டரில் கும்கி அஸ்வின் நடிக்கிறாங்க. முன்னாடி ஹீரோவா நடிச்சி இசையமைப்பாளர் ஆன அம்ரீஷ்தான் மியூசிக். ‘யோகி’ குருதேவ் ஒளிப்பதிவுன்னு பலமான கூட்டணி. வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் தயாரிப்பாளர்கள். படத்துல குங்ஃபூ வர்றதாலே முக்கியமான சீன்களை சீனாவில் எடுக்கவுள்ளோம். நான் கேட்ட எல்லா வசதியையும் தயாரிப்பாளர்கள் செய்து கொடுக்கிறாங்க.”“உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?”

“தமிழ்நாட்டுக்கே மின்சாரம் கொடுக்குற நெய்வேலிதான் சொந்த ஊரு. படிச்சது எம்.பி.ஏ. படிக்கிறப்பவே சினிமா மேலேதான் இன்ட்ரஸ்ட். வீட்டோட கடைக்குட்டிங்கிறதாலே செல்லம் ரொம்ப ஜாஸ்தி. நான் என்ன பண்ணினாலும் அவ்வளவா கண்டுக்க மாட்டாங்க. ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில்  இணை இயக்குநரா வேலை பார்த்தேன். நிறைய முயற்சிகள் பண்ணிட்டு இப்போ புளியங்கொம்பா வாய்ப்பை பிடிச்சிருக்கேன்.”

- சுரேஷ்ராஜா