நடிப்புக்காக உயிரை பணயம் வைத்த அஞ்சனா!



கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும், தமிழ்நாட்டு வாலிபன் ஒருவனையும் அடையாளம் தெரியாத சிலர் கடத்துகிறார்கள். இருபது அடி ஆழமுள்ள குழியில் அவர்களை மறைத்து வைக்கிறார்கள். ஐந்து நாட்கள் அந்தக் குழியில் வீழ்ந்து கிடந்தவர்கள் எப்படியோ தப்புகிறார்கள். தங்களைக் கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்பதை பிறகு கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த வித்தியாசமான கதையோடு தயார் ஆகியிருக்கும் படம் ‘உயிர்க்கொடி’. பி.ஆர்.ரவி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தை ஜெயக்கொடி பிக்சர்ஸ் ஜே.பி.அமல்ராஜ் தயாரித்திருக்கிறார். கவிநாத் கேமரா. விக்னேஷ் பாஸ்கர் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படத்தின் மூலம் அஞ்சனா நட்சத்திரா என்கிற கன்னட நடிகை தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் கதையில் வருவதைப் போலவே, ஷூட்டிங்கிலும் அவர் ஐந்து நாட்கள் பட்டினி போடப்பட்டு மயங்கி விழுந்தாராம்.

‘என்ன அநியாயம் இது?’ என்கிற கேள்வியோடு இயக்குநர் பி.ஆர்.ரவியைச் சந்தித்தோம்.“இந்தக் கதையை அஞ்சனா நட்சத்திராவிடம் சொல்லி, ஒரிஜினலாக நடிக்க வேண்டும் என்று ஒப்புதல் பெற்றே நடிக்க வைத்தோம். பொக்லைன் இயந்திரம் கொண்டு நிஜமாகவே குழி தோண்டி படப்பிடிப்பை நடத்தினோம். பசி சோர்வு முகத்தில் தெரியவேண்டும் என்பதற்காக ஐந்து நாட்கள் அவருக்கு தண்ணீரைத் தவிர வேறெதையும் தரவில்லை. ஐந்தாவது நாள் திடீரென்று மயங்கி விழுந்தவரை, மருத்துவமனையில் சேர்த்து சகஜநிலைக்குக் கொண்டுவந்தோம்.

கதைப்படி ஐந்து நாள் குழிக்குள் இருப்பவர்கள் தவிப்பார்கள். நாலாவது நாள் தாகத்தை தாங்காமல் மரணத்தை எட்டும் நிலையில் இருவரும் தங்கள் சிறுநீரைக் குடித்து உயிர் தப்புவது போன்று காட்சி. ‘இதையும் ஒரிஜினலா செய்யணுமா சார்?’ என்று கேட்டு அதிரவைத்து விட்டார் அஞ்சனா” என்று கொஞ்சம் அதிர்ச்சியாகவே பேசினார் இயக்குநர் ரவி.

“நடிப்பு என்னோட தொழில் அல்ல, பேஷன். அதுக்காக எதையும் செய்வேன். ‘உயிர்க்கொடி’ படத்தில் என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன். படத்தில் காவிரி பிரச்னை பற்றிய வசனங்கள் உண்டு. அதில் எங்கள் மாநில உணர்வுகளைப் பேசவும் இயக்குநர் இடம் தந்திருக்கிறார்.

ஐந்து நாட்கள் விரும்பியே கேரக்டருக்காக பட்டினி கிடந்தேன். என் முழு சம்மதத்தோடுதான் இந்தக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படமும், என்னுடைய கேரக்டரும் பெரிதும் பேசப்பட்டு என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று ஒரே பத்தியில் முடித்துக் கொண்டார் அஞ்சனா.

- மீரான்