பைரவா



விஜய் ராஜ்ஜியம்!

‘விஜய்க்கு வயசே ஆகாதா?’ என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் ‘பைரவா’. இளமையும் துடிப்புமாக படம் முழுக்கவே ‘வர்லாம் வா, வர்லாம் வா’ என்று அதகளப்படுத்துகிறார் விஜய். “நெறைய பேருகிட்டே இல்லாத கெட்ட பழக்கம் எங்கிட்டே இருக்கு. சொன்னா சொன்ன வார்த்தையை காப்பாத்துறது” என்று பஞ்ச் பேசும் இடமாகட்டும், கோர்ட்டில் முகமறியாப் பெண்ணை தன் தங்கையாக நினைத்து வாதாடும் இடமாகட்டும். படம் முழுக்க விஜய் ராஜ்ஜியம்.

ஒரு கல்யாணத்தில் கீர்த்திசுரேஷை கண்டதுமே காதல்வயப்படுகிறார் விஜய். அவரை ஜாலியாக ஃபாலோ செய்யும்போதுதான் அவருடைய பின்னணிக்கதை தெரியவருகிறது. கசாப்புக் கடைக்காரர் கல்வித் தந்தை ஆனதால் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்தை காக்கும் கல்கியாக அவதாரம் எடுக்கிறார். காதலியையும் கைப்பிடிக்கிறார். சாதாரண மசாலா கதைதான். விஜய் நடித்திருப்பதால் ஸ்பெஷல் மசாலா.

கீர்த்தி சுரேஷுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருந்தும் வீணடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கதையே அவருடைய பின்னணியில்தான் நகருகிறது எனும்போது நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம். ஆனால், சில காட்சிகளில் அழகாகத் தெரிந்தால் மட்டும் போதும் என்று அடக்கி வாசித்திருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரன், சதீஷ், மைம் கோபி என்று அலைபாயும் கதை, கீர்த்தியின் வருகைக்குப் பின்னரே ஸ்டெடி ஆகிறது. ஆனால், வசனங்களில் காட்டிய ஷார்ப்பை இயக்குநர் பரதன் திரைக்கதையில் காட்டவில்லை என்பதால் படம் கொஞ்சம் தள்ளாடுகிறது.

வில்லனாக ஜெகபதி பாபு கச்சிதம். கண்களாலேயே மிரட்டுகிறார். தம்பி ராமையா, ஸ்ரீமன், சரத் லோகித தாஸ், சிஜாரோஸ், சண்முகராஜன், மாரிமுத்து, ஹரீஷ் உத்தமன் என்று குவிக்கப்பட்ட நட்சத்திரங்களுக்கு நடிக்கத்தான் வாய்ப்பில்லை; விஜய் படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டினால் போதுமென்று நினைத்துவிட்டார்களோ என்னவோ?

அனல் அரசுவின் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. குறிப்பாக கோயம்பேடு சண்டை வேற லெவல். சுகுமாரின் ஒளிப்பதிவு மாஸ். ‘பட்டையக் கிளப்பு’, ‘மஞ்சள் மேகம்’, ‘பாப்பா பாப்பா’ பாடல்கள் மூலமாக விஜயின் மாஸுக்கும் தன்னால் ஈடுகொடுத்து வேலை பார்க்க முடியுமென்று நிரூபித்திருக்கிறார் இசையமைப்பாளர்சந்தோஷ் நாராயணன்.நீளத்தை கொஞ் சம் கத்தரித்து, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘பைரவா’, இன்னும் ஜோராக இருந்திருப்பான்.