சவால் விடு!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 25

“இந்த நாளை உன் டயரியிலே குறிச்சி வெச்சிக்கோ!” என்று தொடை தட்டி சரத்பாபுவிடம், ரஜினி சவால் விடும், ‘அண்ணாமலை’ படக்காட்சி நினைவுக்கு வருகிறதா?சும்மா அப்படியே புல்லரிக்குமே!அதேதான்.

சவால் விடுவது என்பது நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் அரிதாகவே நிகழக்கூடிய ஒரு செயல்பாடுதான்.ஆனால்-சினிமாவுக்கு, அதுவும் கமர்ஷியல் சினிமாவுக்கு - சவால் என்பது மிகவும் அவசியமான விஷயம்.சவால் விடும் கதைகளை நீங்க எழுத விரும்பினால் உங்கள் கதைக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும்.

ஒன்று : சவால் விடும் ஹீரோ அல்லது ஹீரோயின்இரண்டு : சவாலை ஏற்றுக் கொள்ளும் வில்லன் அல்லது ஏதோ ஒரு கேரக்டர்மூன்று : சுவாரஸ்யமான ஒரு சவால் இந்த மூன்று விஷயங்களுமே சரிவிகித கலவையில் அமைந்துவிட்டால் ‘அண்ணாமலை’, ‘மன்னன்’ ரேஞ்சுக்கு ஒரு படத்துக்கு நீங்கள் கதை எழுதிவிட முடியும்.

அல்லது விசு எடுத்த படங்களைப் போல குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த லாபம் எடுக்கக்கூடிய சுவாரஸ்யமான குடும்பக் கதைகளையும் எழுத முடியும். விசுவின் படங்களில் அவரே ஏற்று நடிக்கும் பாத்திரம் முழ நீளத்துக்கு பெரிய வசனம் பேசி ஒரு சவால் விடுவதே படத்தின் முத்தாய்ப்பான காட்சியாக இருக்கும்.

விஜய், திரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம்கூட ஒருவகையில் சவால் வகை கதைதான்.சவால் விடுபவர் : விஜய்சவாலை ஏற்றுக் கொள்கிறவர் : பிரகாஷ்ராஜ்என்ன சவால் : திரிஷாவை பிரகாஷ்ராஜிடமிருந்து காப்பாற்றுவதுஇந்த மூன்று வரிகளை வைத்துக் கொண்டு முடிந்தால் டிவிடியில் ‘கில்லி’ பாருங்கள். நேரடியாக பிரகாஷ்ராஜிடம் விஜய் சவால் விடவில்லை என்றாலும், மறைமுகமாக விடப்படும் சவாலை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பது புரியும்.

பெரும் வெற்றி பெற்ற படங்களை இதுபோல ஃபார்முலா வாக எழுதிப் பழகினோம் என்றால், நாம் புதியதாக கதைகளை எழுதும்போது திரைக்கதையில் சேர்க்க வேண்டியவை எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்கிற தெளிவு கிடைக்கும்.

அதுவுமின்றி ஹீரோயிஸம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்திய திரைத்துறையில் பெரிய நடிகர்களின் கால்ஷீட்டை பெறக்கூடிய ‘ஒன்லைனர்’களில் சவால் கதைகளே அதிகம்.சந்தேகம் இருப்பவர்கள் விஜய், அஜீத் இருவரின் கடைசி ஐந்து படங்களின் கதைகளை எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெரிய ஹீரோ என்றால் பெரிய வில்லன் வேண்டும். வில்லனை ஹீரோ விதவிதமாக வெல்வதற்கு அவருக்கு ஒரு சவால் தேவை. “எண்ணி இருபத்தி நாலு மணி நேரத்துலே உன்னோட சாம்ராஜ்யத்தை மொத்தமா அழிக்கலேன்னா…” என்று ஹீரோ சவால் விட்டால்தானே ரசிகர்களுக்கு ஒரு க்ரிப் இருக்கும்?

உங்கள் ஹீரோ சவால் விடுவது மட்டுமின்றி, அவருக்கு யாராவது சவால் விட்டாலும் அதை சமாளிக்கத் தெரியவேண்டும். இந்த ரெண்டு மேட்டரும் ஓக்கே என்றால் எத்தகைய சவாலையும் நீங்கள் சமாளிக்க ரெடி என்று அர்த்தம்!

(தொடரும்)