தீபிகா படுகோனே முத்தம் கொடுத்தாரா? கிங்காங் ஷாக்!



‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழிக்கு வாழும் உதாரணம் கிங்காங். ஆளு பார்க்கத்தான் சிறுசே தவிர, அவரது நடிப்பு யாருக்கும் சளைத்ததில்லை.

ஏறத்தாழ முப்பது ஆண்டு காலமாக சினிமாவில் நீடிக்கும் அவர் பெரிய ஹீரோக்களில் தொடங்கி நேற்று வந்த காமெடி நடிகர் வரை எத்தனை பேரிடம் கூட்டணி அமைத்திருக்கிறார் என்பதற்கு கணக்கு வழக்கே இல்லை. ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்கிற தமிழ்பண்புக்கு அவரது பிரபலமே உரைகல்.

மூன்றே முக்கால் அடி உயரம் கொண்ட கிங்காங், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் நடந்த விழாவில் சிறந்த சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் தேசிய விருது பெற்றார்.

தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லையென்றாலும், கிங்காங் இன்றும் ஸ்டார்தான். பொது இடங்களில் அவரைக் காணும் ரசிகர்கள் அவரோடு செல்ஃபீ எடுத்துக் கொள்ளவும், ஆட்டோகிராப் வாங்கவும் முட்டி மோதுகிறார்கள்.

பொங்கல் லீவில் ரிலாக்ஸாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தவரை, ‘காணும் பொங்கல்’ அன்று கண்டு ‘ஹாய்’ சொல்லி விரிவாக உரையாடினோம்.“உங்க ரிஷிமூலம்?”“வந்தவாசிக்கு பக்கத்துலே இருக்கிற சின்ன ஊரு வரதராஜபுரம். அங்கேதான் பிறந்தேன்.

அப்பவே நான் உயரமா வளரமாட்டேன்னு வீட்டுலே தெரிஞ்சிருக்கு. ஆனாலும் என்னை கண்ணும் கருத்துமாதான் வளர்த்தாங்க. எங்களுக்கு சொந்தமா நிலம் இருந்தது. அதுலே விவசாயம் பார்த்தேன். எனக்குள்ளே ஒரு நடிகன் ஒளிஞ்சிக்கிட்டிருந்தது அப்போவெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது.

எங்க கிராமத்துலே வாலிபப்பசங்க சிலர் சேர்ந்து நடத்துன நாடகம் ஒண்ணுலே பபூன் வேஷம் போட்டு நடிச்சேன். அதைப் பார்த்தவங்க, “நீ நல்லா காமெடி பண்ணுறேப்பா. மெட்ராசுக்கு போயி சினிமா வாய்ப்பு தேடு”ன்னு ஏத்தி விட்டாங்க. நாலஞ்சி படம் நடிச்சாலே லைஃபுலே செட்டில் ஆயிடலாமேங்கிற ஆசையிலே மெட்ராசுக்கு உடனே கிளம்பிட்டேன்.”

“வந்ததுமே ஸ்டார் ஆயிட்டீங்களா?”

“சூப்பர் ஸ்டாரே ஆரம்பக் காலத்துலே வாய்ப்புக்கு ரொம்பவும் அலைஞ்சிருக்காரு. எனக்கு உடனே கிடைச்சிடுமா? நான் அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதனாலே இங்கே வந்து வேற வேலையும் பார்க்க முடியலை. 1986லே சென்னைக்கு வந்தேன். ஒரு அக்கா, மூணு தங்கச்சின்னு பெரிய குடும்பம். எல்லாரையும் கரையேத்துற பொறுப்பு எனக்கு இருந்தது.

இங்கே வந்து என் அக்கா மகாதேவி வீட்டுலே தங்கினேன். மாமா ராதா, கட்டிட மேஸ்திரியா வேலை பார்த்தாரு. அவரோட கூடமாட வேலை செய்வேன். மாமாவுக்கு நெருக்கமான சொந்தக்காரர் சாரங்கபாணி ஆட்டோ ஓட்டுநர். அவரோட ஆட்டோவில் தொத்திக்கிட்டு கோடம்பாக்கம், தி.நகர், வடபழனின்னு சுத்தி சினிமா சான்ஸ் கேட்டுக்கிட்டிருந்தேன். என்னை அப்போ எல்லாரும் கேலி பண்ணுவாங்க. யாருமே மதிக்க மாட்டாங்க. கண்டபடி பேசி விரட்டியடிப்பாங்க.

ஒருமுறை வாஹினி ஸ்டுடியோவில் ஷூட்டிங் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். சத்யராஜ் சார் நடிச்ச ‘ஆளப்பிறந்தவன்’. அங்கேதான் சொன்னாங்க, மாயாஜால மன்னன் விட்டலாச்சார்யா இங்கேதான் செட்டு போட்டு ஷூட் பண்ணுவாருன்னு. அவரோட படத்துலே வித்தியாசமான ஆளுங்கல்லாம் வருவாங்க. அவர் எனக்கு சான்ஸ் கொடுப்பாருன்னு அவர் முன்னாடி போய் அப்படியும் இப்படியுமா அலைஞ்சிக்கிட்டிருந்தேன். அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கலை. இப்படியே நாட்கள் ஓடிக்கிட்டிருந்திச்சி.

1988லே எனக்கு விடிவுகாலம் பொறந்துச்சி. தமிழுணர்வு மிக்க இயக்குநரான ‘கலைப்புலி’ ஜி.சேகரன் சார்தான் என்னோட கஷ்டத்தை போக்கினாரு. அவரோட டைரக்‌ஷனில் பாண்டியராஜன் சார் ஹீரோவா பண்ண ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ படத்துலே அறிமுகமானேன். அப்போ எனக்கு பதினாறு வயசு. இப்போ நாற்பத்தி நாலு வயசு ஆகுது.”

“அதுக்கப்புறம் ரஜினியோடெல்லாம் நடிக்கிற லெவலுக்கு வந்துட்டீங்க...”“யெஸ். சூப்பர் ஸ்டாருடன் ‘அதிசயப் பிறவி’யில் நடிச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அப்படியே அலேக்கா தூக்கி விளையாடினார். எல்லாரும் கைதட்டி ஊக்குவிச்சாங்க. ரஜினி சாருக்கு என் மேலே பாசம் அதிகம். ரொம்பவும் மரியாதை கொடுத்துதான் பேசுவார்.

அப்புறம் ‘காவல் பூனைகள்’, கமல் சாரோட ‘மகராசன்’, கார்த்திக் சாரோட ‘சின்ன ஜமீன்’, ‘சீமான்’, சரத் சாரோட ‘சாமுண்டி’, ‘பேண்டு மாஸ்டர்’, ‘வேலுச்சாமி’, பிரபு சாரோட ‘பாஞ்சாலங்குறிச்சி’, விஜய் சாரோட ‘போக்கிரி’, ‘சுறா’, விக்ரம் சாரோட ‘கந்தசாமி’ன்னு பெரிய ஹீரோக்கள் பெரும்பாலானவர்களோடு நடிச்சிட்டேன்.

இது தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தின்னு ஒரு இருநூறு படம் நடிச்சிருப்பேன். நான் என்னிக்குமே மறக்கக்கூடாத ஒருவர்னா அது வடிவேலு அண்ணன்தான். அவரோட குரூப்புலே என்னை சேர்த்துக்கிட்டு நிறைய படங்களில் நடிக்க வெச்சாரு.

கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம், சூரின்னு முன்னணி காமெடி நடிகர்கள் அத்தனை பேரோடும் நடிச்சிருக்கேன். அதெல்லாம் இப்பவும் காமெடி சேனல்களில் ஒளிபரப்பாகுது. அதை டிவியில் பார்க்கிற ரசிகர்கள் வெளியூர் ஷூட்டிங்கில் என்னைப் பார்த்து அன்பா நலம் விசாரிக்கிறாங்க.”“உங்களுக்கு தீபிகா படுகோனே ‘கிஸ்’ கொடுத்ததா ஒரு சச்சரவு...”

“அய்யோ. ஒழுங்காதானே போயிக்கிட்டிருக்கு. எதுக்கு இப்படி திடீர்னு என் குடும்பத்துலே கும்மியடிக்கிறீங்க? ஷாருக் சாருக்கு நான் முத்தம் கொடுத்தேன் என்பதுதான் உண்மை. தீபிகா மேடம் கொடுத்ததா சொல்லுறது வதந்தி. கிங்காங் பத்தியெல்லாமா கிசுகிசு வரும்? இந்தியிலே டான்ஸ் மாஸ்டர் சின்னி பிரகாஷ் டைரக்‌ஷனில் ‘கூங்கட்’, அப்புறம் சன்னி தியோல் கூட ‘ஹிம்மத்’, ஷாருக் சாரோட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படங்களில் நடிச்சேன்.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’, கடைசி நாள் ஷூட்டிங் அப்போ நான் ஷாருக் சாருக்கும், அவர் எனக்கும் அன்புமிகுதியால் முத்தம் கொடுத்து எங்க நட்பை பரிமாறிக்கிட்டோம். இந்தியிலும் நாம பேமஸ்தான். தமிழில் ‘ஆண் பாவம்’னு வந்த படத்தை இந்தியில் ‘சச்சா பியார்’னு பாண்டியராஜன் ரீமேக் செஞ்சாரு. தமிழில் தவக்களை பண்ணியிருந்த ரோலை, இந்தியில் நான்தான் செஞ்சேன். அதுலே ஹீரோயின் ஜூஹிசாவ்லா. என்னவோ தெரியலை. இன்னைக்கு வரைக்கும் அந்தப் படம் ரிலீஸ் ஆகலை.”

“எப்பவும் காமெடி பண்ணிக்கிட்டிருக்க போர் அடிக்கலையா?”
“அடிக்குதுதான், என்ன பண்ணுறது? ஒரு நடிகன்னா எல்லாவிதமான கேரக்டரும் பண்ணணும். என்னை நம்பி வித்தியாசமான ரோல் கொடுக்க தயங்குறாங்க. ‘ஜமீன் கோட்டை’ படத்துலே டபுள் ஆக்டிங் பண்ணினேன். நல்லா ரீச் ஆச்சு. ஆக்சுவலா, எனக்கு வித்தியாசமான வில்லனா நடிக்கணும்னு ஆசை. அதுக்கு என்னோட உயரம்தான் தடையா இருக்கு.”

“வெளிநாடுகளில் உங்க கலைநிகழ்ச்சிகள் ரொம்ப பிரபலமாமே?”
“ஆமாம். ‘பெஸ்ட் டான்ஸ்’சுன்னு சொந்தமா ஒரு க்ரூப் வெச்சிருக்கேன். மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், பஹ்ரைன், மஸ்கட்னு தமிழர்கள் வாழுகிற நாடுகளுக்கெல்லாம் போய் கலைநிகழ்ச்சி நடத்தியிருக்கேன். இப்பவும் நிறைய வாய்ப்பு வந்துக்கிட்டிருக்கு. என் உருவத்துக்கும், ஆடியன்ஸ் முன்னாடி மேடையில நான் பண்ற பெர்பாமன்சுக்கும் சம்பந்தமே இருக்காது.”

“நீங்க ஒரு பாடகர் என்றும் கேள்விப்பட்டோம்...”“சத்தம் போட்டு சொல்லிடாதீங்க. நிஜமான பாடகர்கள் கோச்சிக்கப் போறாங்க. சத்யராஜ் சார் நடிச்ச ‘திருநாள்’ படத்துல, இளையராஜா சாரே அழைச்சி, என்னை ஒரு பாட்டு பாட வெச்சார்.

சில லைன்கள் மட்டும்தான் பாடினேன். படத்துல அதுக்கு சார்லி சார் நடிச்சார். ஆனா, படம் ரிலீசாகலை. நடிப்பு, பாட்டு தவிர நாடகத்துக்கு காமெடி ஸ்கிரிப்ட் எழுதுற திறமையும் எனக்கு இருக்கு. சினிமாவை முழுமையா நம்பி வந்தேன். அது என்னை காப்பாத்தியிருக்கு.”

“உங்க குடும்பம்?”
“இல்லறத்தில் நல்லறம்னு தமிழர் பண்பாட்டை மதிச்சி கல்யாணம் ஆகி சந்தோஷமா வாழுறேன். என் ஒய்ஃப் பேர் கலா. பத்தாவது படிக்கிற கீர்த்தனா, அஞ்சாவது படிக்கிற சக்திப்பிரியா, எல்.கே.ஜி படிக்கிற தனுஷ் என்கிற துரைமுருகன்னு மூணு மழலைச் செல்வங்கள். கூடவே என்னோட அம்மா, அப்பான்னு கூட்டுக் குடும்பமா வசிக்கிறோம். ெசன்னை எம்.ஜி.ஆர் நகருலே சின்னதா ஒரு சொந்த வீடு இருக்கு. குறையொன்றுமில்லை பராபரமே.”

“லட்சியம்னு ஏதாவது இருக்கா?”
“நடிகனா பேரு வாங்கியிருக்கேன். நல்ல மனுஷன்னு நண்பர்கள் கொண்டாடுறாங்க. பாசமுள்ள குடும்பத் தலைவனா திருப்தியா வாழுறேன். ஆண்டவன் கொடுத்த இந்த வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் கடைசிவரைக்கும் நிலைநிறுத்திக்கணும் என்பதுதான் லட்சியம்.”

- தேவராஜ்