ஜோக்கர் ராஜுமுருகன்



டைட்டில்ஸ் டாக் 2

உலகத்துக்கே ஒரே ஒரு ஜோக்கர்தான். தி கிரேட் சார்லி சாப்ளின்.பத்தாவது படிக்கிறப்போதான் எனக்கு இலக்கியமெல்லாம் அறிமுகம். என்னோட அண்ணன் சரவணனும், கவிஞர் யுகபாரதியும் நெருங்கிய தோழர்கள். தஞ்சாவூர்லே இலக்கியம் சார்ந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கிட்டவங்க. அவங்க மூலமாதான் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைத் தாண்டி உலகப்படமெல்லாம் எனக்கு அறிமுகமாச்சி. அதுலே ஒண்ணுதான் சாப்ளினோட ‘சிட்டிலைட்ஸ்’.

இத்தனைக்கும் வீடியோவில்தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அது ஏற்படுத்தின தாக்கத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் மீளவே முடியலை.நகர வீதியில் பெரிய சிலை நிர்மாணிச்சிருக்கும்.

திறப்புவிழா காணவிருக்கும் அந்தச் சிலையை திரைச்சீலை கொண்டு மூடியிருப்பாங்க. சிலையை திறக்க ஒரு வி.ஐ.பி. வந்திருப்பாரு. சீலையை திறந்துட்டு பார்த்தா உள்ளே சாப்ளின் படுத்து தூங்கிட்டிருப்பாரு. படம் பார்க்குறவங்களுக்கு பக்குன்னு சிரிப்பு கிளம்பும். ஆனா, நகரத்தின் உதிரியாக்கப்பட்டு விட்டவனுக்கு தூங்க இடமில்லை, அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்பதை மவுனமொழியில் சாப்ளின் சொல்லியிருந்தாரு.

இது காமெடி இல்லை. எந்த காலத்துக்கும் பொருந்துற கூர்மையான விமர்சனம். வளர்ச்சியின் பெயரால் வாழ்நிலங்களை, வயல்களை கையகப்படுத்தி விவசாயியையும், பாட்டாளியையும் இப்படிதான் உலகம் முழுக்க சிலைக்கு பக்கத்துலே ஒடுங்கிப்போற மாதிரி வெச்சிருக்கு நம்ம அரசாங்கங்கள்.

அந்த சிலையில் தாவித்தாவி சாப்ளின் தன்னோட பிரத்யேக சேட்டைகளோடு இறங்குவாரு. அதுபோலதான் பொதுஜனமும் தன்னோட இயல்பான வாழ்க்கையை வாழமுடியாம அப்படியும், இப்படியுமா தாவிக்கிட்டிருக்கான். சாப்ளினோட காமெடிக்கு அதிகார வர்க்கம்தான் சிரிக்க முடியும்.அப்புறம் ‘கோல்டன் ரஷ்’னு ஒரு படம். சாப்ளினோட கேரியரில் இதை உச்சம்னே சொல்லலாம்.

பனிமலையில் சாப்ளினும், இன்னொருத்தரும் சிக்கிக்குவாங்க. அவங்களுக்கு சாப்பிடறதுக்கு உணவோ, குடிக்க தண்ணியோ கிடைக்காது. தாங்க முடியாம தான் அணிஞ்சிருக்கிற ஷூவை தண்ணீரில் ஊறவெச்சி சாப்பிட முயற்சிப்பாரு. ஒருகட்டத்துலே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சி சாப்பிட்டுக்குவாங்களோங்கிற லெவலுக்கு நிலைமை சீரியஸ் ஆகும். ஒருத்தரை ஒருத்தரு சந்தேகப்பட்டு துரத்திக்கிட்டே இருப்பாங்க. வழக்கம்போல அதகள காமெடிதான். ஆனா, நம்மோட வாழ்க்கையும் இதே அவலம்தான். நம்மோட அன்றாடத் தேவைக்கு கூட நம்ம கூட இருக்கிறவங்களையே அடிச்சி சாப்பிட்டுட்டா என்னனுகூட சில நேரத்தில் தோணும்.

சாப்ளினோட படங்களைப் பார்த்தப்போதான் எனக்கு ‘ஜோக்கர்’ என்கிற இமேஜ் மீது இருந்த எண்ணமே மாறிச்சி. ஜோக்கர் என்பவன் நம்மை நகைக்க வைப்பவன் கிடையாது. நம்மளை பார்த்து சிரிக்கிறவன். ஆக்சுவலா, அவன் நம்ம கண்ணாடி. நாம தினமும் காலையில் பார்த்து தலைசீவிக்கிற கண்ணாடி காட்டுற பிம்பம் பொய்யானது. ஜோக்கர்கள் காட்டுற பிம்பம்தான் மெய்யானது.திருவிழா சமயங்களில் நம்ம உள்ளூர் ஜோக்கர்களை பார்த்திருக்கேன்.

விடிய விடிய ‘மயான காண்டம்’, ‘வள்ளி திருமணம்’ மாதிரி சரித்திர, புராணக்கதைகளை நாடகமா நடத்துவாங்க. பொதுவா எல்லாமே சீரியஸான நாடகம்தான். அதனாலே யாரும் தூங்கிடக்கூடாதுன்னு இடைஇடையே ஜோக்கர்களை களமிறக்கி சிரிக்க வைப்பாங்க. இந்த பபூன்கள் உள்ளே நுழைஞ்சு டபுள்மீனிங்கில் பேசுறதும், சினிமாப் பாட்டுங்களை இஷ்டத்துக்கும் மாத்திப் பாடறதுமா கலகலக்க வெச்சுடுவாங்க. ஆனா, அரிச்சந்திரனா நடிக்கிறவரும், சந்திரமதியும்தான் ஹீரோ ஹீரோயின். ஜோக்கரை பார்த்து சிரிப்பாங்களே தவிர, அவருக்கு உரிய மரியாதை இருக்காது.

நாடகம் முடிச்சு மறுநாள் பார்த்தோம்னா அரிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் (சில நேரங்களில் சந்திரமதியும்கூட) கள்ளுக்கடையில் உட்கார்ந்திருப்பாங்க. அங்கே ஒரு சொம்பு கள்ளுக்காக அரிச்சந்திரன், ஜோக்கர்கிட்டே கெஞ்சிக்கிட்டிருப்பாரு. இந்த கள்ளுக்கடை சீன்தான் எனக்கு பெரிய தரிசனத்தை கொடுத்தது. நிஜத்துக்கும், நிழலுக்குமான வேறுபாட்டை ஒரே ஃப்ரேமில் என் மூளைக்குள்ளே ஆணி அடிச்சி அறைஞ்சது.‘ஜோக்கர்’ என்கிற கேரக்டரை நான் மரியாதையா அணுகுறதுக்கு இம்மாதிரி நான் கண்ட காட்சிகள்தான் அச்சாரம்.

தஞ்சாவூரிலே எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரம் வரைக்கும் பொதுவுடைமை சிந்தனைகள் தீப்பற்றி எரிஞ்சது. விவசாய பூமி என்பதால் இயல்பாகவே பொதுவுைடமை அங்கே வேரூன்றிச்சி. முப்பது, முப்பத்தஞ்சி வருஷம் முன்னாடி நக்சல்பாரிகள் இயக்கத்தோட தாக்கம் எங்க மண்ணுலே ரொம்ப அதிகம்.

அப்போ ஒரு இளைஞர், இதுமாதிரி இயக்கத்தில் சேர்ந்தார். இயக்கத்துக்காக தன்னோட குடும்பம், நட்பு, உறவு, அடையாளம் எல்லாத்தையும் துறந்தாரு. சின்ன வயசுலே எனக்கு அவரோட இந்த திடீர் ‘சந்நியாசம்’ பத்தி ஒண்ணுமே புரியலை. எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழுறதுக்கு இந்தாளுக்கு என்ன கேடுன்னுதான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.

ரொம்பநாள் கழிச்சி அவரை ஒரு பஸ்சுலே வயசானவரா பார்த்தேன். கொஞ்சம் மனநலம் பேதலிச்சிப் போயிருந்தாரு. ‘புரட்சி வரும், சமூகம் மாறும்’ என்பது மாதிரி வார்த்தைகளை ரிப்பீட்டா சொல்லிக்கிட்டிருந்தாரு. அவரைச் சுத்தி நின்னு நிறைய பேர் சிரிச்சிக்கிட்டிருந்தாங்க. எனக்கு மட்டும் சிரிப்பு வரலை. அழுகைதான் வந்தது. ஏன்னா, அவர் சில இலட்சியங்களுக்காக தன்னை அர்ப்பணிச்சிக்கிட்டாரு. அது நடக்கலைன்னதும் இதுமாதிரி ஆயிட்டாருன்னு புரிஞ்சிக்கிட்டேன். அவரு மட்டும் மெயின் ஸ்ட்ரீம் அரசியலுக்கு வந்திருந்தா கவுன்சிலராகி, மணல் அள்ளி, ஸ்கார்பியோ, பங்களான்னு எப்படியோ இருந்திருக்கலாம். ஆனா, இப்படி இருக்காரு.

மக்களோட நகைப்புக்கு உள்ளாகிற ஜோக்கர்கள் எல்லாம் நிஜமான ஜோக்கர்களே கிடையாது. அவங்களைப் பார்த்து சிரிக்கிற நாமதான் ஜோக்கர்ஸ்.
நல்ல வேளையா, பஸ்சுலே பார்த்த அந்த அண்ணன் அப்புறமா சரியாகி நார்மலான லைஃபுக்கு திரும்பிட்டாருன்னு பிற்பாடு கேள்விப்பட்டு நிம்மதி அடைஞ்சேன்.

முன்னாடியெல்லாம் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர்., கலைஞருன்னு யாரு அரசியலில் நின்னாலும் அவங்களை எதிர்த்து வீரப்பன்னு ஒருத்தரு சுயேச்சையா நிப்பாரு. அவரை தேர்தல் மன்னன் வீரப்பன்னு ஊடகங்கள் கிண்டல் பண்ணும்.  ஒவ்வொரு தேர்தலுக்கும் அவர் ஊடகங்களால் கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாரு.

இதுமாதிரி பெரிய தலைவர்களை எதிர்த்து  வேட்புமனு செய்யுற அவருக்கே தெரியும், தனக்கு டெபாசிட்டு கூட தேறாதுன்னு.  ஆனா, கடைசிவரைக்கும் அவர் தேர்தலில் போட்டியிடறதை நிறுத்தவே இல்லை. உண்மையை சொல்லப்போனா ஜனநாயகத்தோட உரிமை என்னன்னு நமக்கு புரியவைக்கதான் அவரு தன்னை ஜோக்கரா வெளிப்படுத்திக்கிட்டாரு. அது தெரியாம, நாம பாட்டுக்கும் சிரிச்சிக்கிட்டே இருந்திருக்கோம்.

சமீபத்திய உதாரணம் ஒண்ணு. மதுவிலக்கு வேணும்னு சொல்லி பார்க்குறவங்க காலில் எல்லாம் விழுந்து எந்திரிச்ச அய்யா சசிபெருமாளை நாம எப்படி பார்த்தோம்? ஆனா, உயரிய அவரது நோக்கத்துக்காக அவர் உயிர் கொடுக்குற அளவுக்கு சீரியஸா இருந்தவரு. அவருக்கு இந்த சமூகத்து மேலே இருந்த அக்கறையில் ஒரு அஞ்சு பர்சென்ட் நமக்கு இருந்திருந்து, அவரோட போராட்டத்துக்கு கருத்து அளவிலாவது ஆதரவு தெரிவிச்சி இருந்தோம்னா, செத்தே இருக்க மாட்டாரு.

உயரிய நோக்கங்களுக்காக குரல் கொடுப்பவர்களை விளம்பரப் பிரியர்களாகவும், மறை கழன்றவர்களாகவும் பார்ப்பது நம்மோட அறிவுக்குறைபாட்டைத்தான் காட்டுது.என்னோட ‘ஜோக்கர்’ படத்துலே நடிச்சிருந்த மு.ராமசாமி, பாரதி பற்றி குறும்படம் எடுக்கிறதுக்காக அவர் வாழ்ந்த ஊர்களுக்கு போயிருக்காரு. அங்கிருந்த சில வயசானவங்க. “பாரதியாரா? அந்த கோட்டியைப் பத்தியா கேட்குறீங்க”ன்னு கேட்டிருக்காங்க. பாரதியாரும் அவரோட சமகாலத்துலே ஜோக்கராதான் பார்க்கப்பட்டிருக்கிறது தெரியுது.

அதே நேரம் எல்லா ஜோக்கர்களும் நல்ல ஜோக்கர்கள் இல்லை. ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகளும் பார்க்குறதுக்கு கவுண்டமணி கணக்கா ஜோக்காதான் தெரிவாங்க. ஆனா அவங்க செஞ்ச வேலையெல்லாம் நம்பியார் வேலை.

நம்மூர்லே பப்ளிக்கா மக்களை சுரண்டுறவனுங்களை பார்த்து நமக்கு கோவம்தான் வரலை. அட்லீஸ்ட் சிரிப்பாவது வருதா? வராது. ஏன்னா அவங்கதான் நம்மைப் பார்த்து, போயும், போயும் நம்மளைபோய் ஓட்டு போட்டு கோபுரத்துலே உட்கார வெச்சிருக்காங்களேன்னு நினைச்சு நினைச்சு சிரிச்சிக்கிட்டிருக்காங்க.

ஒடுக்கப்படுற நாம எல்லாரும்தான் நம்மளை அடக்குறவனுங்க கண்ணுக்கு ஜோக்கர். நாம கோமாளிகளா பார்க்கப் படுறோம் என்கிற உண்மை என்னிக்கு நமக்கு தெரியுதோ, அன்னைக்குதான் ஹீரோ ஆக அட்லீஸ்ட் ட்ரையாவது செய்வோம்.

எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா