வாய்விட்டு சிரிங்க!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 13

கடந்துபோன ஆறு வாரங்களில் கதை சொல்லல் வகையில் ஆறு விதங்களைப் பார்த்தோம். அவை எவையென்பதை ரீவைண்ட் செய்து ஒருமுறை பார்த்துக் கொள்வோம். ஏனெனில், கிறிஸ்டோபர் புக்கர் எழுதிய ‘தி செவன் பேசிக் ப்ளாட்ஸ்’ நூல் சொல்லக்கூடிய கதைகளின் ஏழு வகைகளில் கடைசி வகையை இந்த வாரம் பார்க்கப் போகிறோம். உலகில் எழுதப்படும் / சொல்லப்படும் கதைகள் அத்தனையுமே இந்த ஏழு வகைகளில் அடங்கிவிடும் என்பதுதான் அந்த நூலின் சாராம்சமே.

1. வெல்ல முடியாததை வெல்லுதல்
2. புதுப்பித்தல்
3. தேடல்
4. பயணம்
5. ஏழை டூ பணக்காரன்
6. சோகம்

இந்த வரிசையில் ஏழாவதாக கடைசியாக இடம்பெறுவது, இப்போது தமிழ் சினிமாவின் டிரெண்டாக வசூலை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கும் ‘காமெடி’. படங்களை உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமே இல்லாத வகை இதுதான். ஒரு முறை சிரித்தால், உங்கள் வாழ்நாள் இரண்டு நொடிகள் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களோ, பேய்ப்படங்களோ வசூலில் சக்கைப்போடு போடலாம். ப்ளாக் பஸ்டர் ஹிட் என்றும் உருவெடுக்கலாம். ஆனால், ‘மினிமம் கேரண்டி’ என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச உத்தரவாத வசூல் காமெடிப் படங்களுக்கே உண்டு. முதன்முதலாக படம் இயக்க வாய்ப்பு தேடுபவர்கள் கைவசம் இரண்டு, மூன்று காமெடிக் கதைகளை வைத்திருந்தால் வெகு விரைவிலேயே இயக்குநர் ஆகிவிடலாம்.

‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, நகைச்சுவைப் படங்களின் வரிசையில் சரித்திரம் படைத்த திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கர். இயக்குநர் சிம்புதேவனுக்கு அதுதான் முதல் படம்.

ஷங்கரிடம் படம் இயக்க வாய்ப்பு கேட்டுச் சென்ற சிம்புதேவன் முதலில் ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார். அடுத்து ஒரு ஆக்‌ஷன் பேக்டிராப்போடு சோஷியல் மெசேஜ் தரக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார். இறுதியாக பயந்துகொண்டேதான் இம்சை அரசனை சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக இம்சை அரசன் படிக்கட்டில் இருந்து வழுக்கிக்கொண்டே வரும் காட்சியை சொன்னவுடனேயே வாய்விட்டுச் சிரித்த ஷங்கர், “இந்தப் படத்தையே பண்ணலாம் சிம்பு” என்று சொல்லிவிட்டாராம். இத்தனைக்கும் அவர் சொன்ன முதல் இரண்டு கதைகளுமே கருக்கான பட்ஜெட்டில் எடுத்துவிடக்கூடிய சாத்தியம் கொண்டவை. இம்சை அரசனோ சரித்திரப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆர்ட் டைரக்‌ஷன், காஸ்ட்யூம், துணை நடிகர்கள் என்று ஏகத்துக்கும் செலவு இழுக்கும் சமாச்சாரம்.

ஆனால், ஷங்கர் உறுதியாக இருந்தார். தன் கைக்கு மீறி செலவு செய்தார். சிம்பு தேவன் தனக்கு கதையைச் சொன்னபோது தான் எப்படி வாய்விட்டுச் சிரித்தோமோ, அதுபோல தியேட்டரில் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் சிரிப்பான் என்று நம்பினார். அவரது நம்பிக்கையை தமிழ் ரசிகர்களும் காப்பாற்றினார்கள்.

தமிழின் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் அனைவருமே சொல்லிக் கொள்ளும்படி ஒரு காமெடிப் படத்தையாவது கடந்தே வருவார்கள். பெரிய ஜாம்பவான்களே இதற்கு விதிவிலக்கல்ல. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், காமெடியை மிகவும் விரும்பக்கூடியவரான இயக்குநர் ஷங்கர், இன்னமும் முழுநீள காமெடிப்படம் ஒன்றைக்கூட இயக்கியதில்லை.

(கதை விடுவோம்)