ஹீரோவும் ஹீரோயினும் பீச்சுலே ஜலக்கிரீடை!



வருடத்துக்கு 200 படங்கள் வருகிறதென்றால் அதில் 50 படங்கள்தான் பெரிய நடிகர்களின், பெரிய இயக்குநர்களின் படங்கள். மீதி?தியேட்டர்கள் மூடுவிழா காணாமல் இருக்க உதவக்கூடிய சிறிய பட்ஜெட் படங்கள்தான்.

தற்போதைய டிரெண்டு படி, இம்மாதிரி சிறிய பட்ஜெட் படங்கள் பெரிய படங்களையே மிஞ்சக்கூடிய அளவுக்கு வசூலில் சக்கைபோடும் போடுவதுண்டு. மலையாளம் மற்றும் இந்தி சினிமாவில் ஏற்கனவே இருக்கும் இந்த டிரெண்டுக்கு தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

சமீபத்தில் வெற்றி கண்டிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ கூட பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர் பங்களித்திருந்தாலும் கருக்காக எடுக்கப்பட்ட பட்ஜெட் படமே.அந்த அடிப்படையில்தான் கிளம்பி வருகிறது ‘புயலா கிளம்பி வர்றோம்’.‘சேதுபூமி’, ‘தொட்டால் தொடரும்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘ஆச்சர்யம்’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த பட்ஜெட் பாடிகார்டான தமன்தான் இப்படத்தின் நாயகன். ஹீரோயின் மது.

நண்பர்களோடு இணைந்து கேபிள் டிவி தொடங்குகிறார் ஹீரோ. கடுமையான உழைப்பும், நண்பர்களின் ஒத்துழைப்பும் அவரை உயர்த்துகிறது. இவரது வளர்ச்சி பிடிக்காத லோக்கல் அரசியல்வாதி ஒருவர் இஷ்டத்துக்கும் இவரை டார்ச்சர் செய்கிறார். சம்பந்தமில்லாமல் முளைத்த வில்லனை புஜபல பராக்கிரமம் காட்டாமல், புத்திசாலித்தனத்தால் எப்படி ஹீரோ வெல்கிறார் என்பது படத்தின் கதை.

“இந்தப் படத்தில் கதைன்னு எதுவும் குறிப்பா கிடையாது. சிறுநகரம் ஒன்றில் வசிக்கும் சில மனிதர்கள், பிழைப்புக்காக அவர்கள் செய்யும் போராட்டம்தான் இந்தப் படம்” என்று அடக்கமாக பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் ஜி.ஆறுமுகம்.“முதல் மூணு நாள்லேயே கோடிகளைக் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நடிகர்களோ, டெக்னீஷியன்களோ எங்க படத்துலே இல்லை.

இளைஞர்களைச் சுண்டி இழுக்கிற கனவுக்கன்னிகள் யாருமில்லை. இப்படி நிறைய விஷயங்கள் ‘இல்லை’ன்னாலும், ‘செம என்டர்டெய்ன்மென்டா இருக்கு’ன்னு ரசிகர்கள் சந்தோஷமா சொல்லுற வகையிலான சமாச்சாரங்களை கலந்து கட்டி அடிச்சிருக்கேன்.

இப்போதிருக்கிற சமூக சூழலில் டிகிரி படிச்சவங்கல்லாம் கும்பகோணம் டிகிரி காபி கடையில் வேலை பார்க்கிறாங்க. தகுதி இருந்தும் கூட தேடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல் ஏராளமான இளைஞர்கள் வாழ்க்கையில் தடுமாறிக்கிட்டிருக்காங்க. டாஸ்மாக் கலாச்சாரம் அவங்களை சிந்திக்க விடாம கட்டிப் போட்டிருக்கு.

என் காலத்தோட இந்த அவலம் எப்படி தீரும்னு எனக்கும் குழப்பம். அதுக்கு என்ன தீர்வுன்னு நான் தேடுன விடையைத்தான் இந்தப் படமா எடுத்திருக்கேன். சொந்தக் காலில் நிற்பதுதான் எதிர்காலத்துக்கு பாதுகாப்புன்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். அப்படி நிற்கும்போது என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்னு கோடிட்டுக் காட்டியிருக்கேன்.

இப்படியெல்லாம் சொல்லுறதாலே படம் கருத்துக் களஞ்சியமா இருந்துடுமோன்னு பயந்துட வேண்டாம். அந்த அளவுக்கு நான் விவரமில்லாத ஆளு கிடையாது. பரங்கிமலை ஜோதி, உசிலம்பட்டி கண்ணன் தியேட்டர்களில் படம் பார்க்குறவங்களும் விரும்புகிற படமா என் படம் இருக்கும்.

ஹீரோவும், ஹீரோயினும் பீச்சுலே நடத்துற ஜலக்கிரீடை பாட்டைப் போட்டுக் காண்பிச்சதுமே வினியோகஸ்தர்கள் முண்டியடிச்சி வந்து விலை கேட்டாங்க. மொத்த படத்தையும் முடிச்சிட்டு கச்சேரியை வெச்சிக்கலாம்னு தயாரிப்பாளர் சொல்லிட்டாரு. படத்தை தங்கச் சிலையா நினைச்சி செதுக்கிட்டிருக்கேன்” என்று அடக்கமும், பில்டப்புமாக சொற்பொழிவே பொழிந்துவிட்டார் ஆறுமுகம்.

- எஸ்ரா